செவ்வாய், ஜூன் 7

கடவுள் என்னும் கைதி -ஆதவன் தீட்சண்யா

பூலோக பரிபாலனத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த கடவுளை இடைமறித்து சுற்றி வளைத்தது போலிஸ் படை. ஏதோ வரம் கேட்கும் ஆசையில் பக்தர்கள்தான் இப்படி வழிமறிக்கிறார்கள் போலும் என்று முதலில் கருதிக்கொண்ட கடவுள், படியளக்கச் செல்லும் போது பாதையை மறிக்கலாமோ? அவரவர்க்குரியது அவரவர்க்கு கிட்டும், வழி விட்டகலுங்கள் என்றார். பதிலேதும் பகராத காவலர்கள், துப்பாக்கிகளை தயார்நிலைக்கு கொண்டுவந்ததைப் பார்த்ததும் ஒருவேளை தன்னுடைய பாதுகாப்புக்காக இவர்களை அரசாங்கம் அனுப்பி வைத்திருக்குமோ என்கிற எண்ணம் தோன்றியதும் கடவுளுக்கு சிரிப்பான சிரிப்பு வந்தது. உலகாளும் எனக்கு அற்ப மானிடர்களாகிய நீங்கள் பாதுகாப்பு தருவதா... அவமானம் அவமானம்... போய் உருப்படியாய் ஏதாவது செய்யுங்கள் என்றார். எல்லாம் அறியும் வல்லமை கொண்ட தங்களுக்கு நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பது தெரியாமலா இருக்கும்? இருந்தும் எங்களை சோதிக்கிறீர்களே பகவானே... என்று பதிலிறுத்த படையதிகாரியின் குரலில் பரிதாபமும் பரிகாசமும் இழைந்திருப்பதாகப்பட்டது. சுதாரித்துக்கொண்ட கடவுளுக்கு, தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது அடுத்த நொடியே விளங்கிவிட்டது. சரி, கடவுளாகிய தன்னை இவர்கள் கைதியாக நடத்தும் பாங்கையும் தான் பார்ப்போமே என்று போலிசுடன் அமைதியாகப் புறப்பட்டார். கடவுளுக்குரிய மகிமைகள், அற்புதங்கள், ஜாலங்கள், லீலைகள் எதையும் வெளிப்படுத்தாமல் வெறும் கைதியாக மட்டுமே இருந்து பார்ப்பது என்கிற முடிவையும் அப்போதே எடுத்துக்கொண்டார்.

கொல்கத்தா நகரத்தின் வடக்குப்பகுதியில் தான் கட்டிக்கொண்டிருந்த விவேகானந்தா மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு கடவுளே காரணம் என்று ஐ.வி.ஆர்.சி.எல். என்கிற கட்டுமான ஒப்பந்த நிறுவனம் சொன்னதன் பேரில் கடவுள் கைது செய்யப்பட்டிருந்தார். நாட்டின் நாலாதிசையிலும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தங்க நாற்கர மற்றும் ஆறுவழிச்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்தும் கறக்கிற கோடிக்கணக்கான பணத்தை தனது சொந்தக்கணக்கில் சேர்த்துக்கொள்கிற அந்த நிறுவனம், பாலம் இடிந்ததற்கு மட்டும் கடவுளைப் பொறுப்பாக்குவது எந்தவகையில் சரி என்கிற கேள்வி போலிசுக்கு எழவேயில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் சொல்வதை காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாற்றாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நியதி அமலில் உள்ள நாடென்பதால் கடவுளை கைது செய்து இழுத்து வந்துவிட்டது போலிஸ். குறைந்தபட்சம் 26 பேரை கொன்றதாகவும் நூற்றுக்கணக்கானவர்களை காயமடையச் செய்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டு. 

லோககுரு என தன்னைத்தானே சொல்லிக்கொள்கிற மட முதலாளிக்கே (அதாவது மடாதிபதிக்கே) வெளிக்கியிருக்க வாழையிழை கொடுத்ததோடு அதை பவ்யமாய் வாரிவழித்து சுத்தமும் செய்த பாரம்பரியம் கொண்ட காவல்துறைக்கு, இந்த லோகத்தை மட்டுமல்லாது ஏழேழு லோகத்தையும் கட்டியாளும் மெய்யான கடவுளை நடத்தும் விதமா தெரியாது? அதே மட முதலாளி விசாரணைக் கூண்டில் ஏற மறுத்ததும் நீதிமன்றமே தனி இருக்கை கொடுத்து அமரவைத்து அழகு பார்க்கும் நிலையில், சர்வவல்லமை கொண்ட கடவுளை ஒரு சாமானிய கைதியைப்போல எப்படி கண்ணியக் குறைவாக நடத்தமுடியும்? எனவே விசாரணைக்கென இழுத்துவருபவர்களை முட்டிப்போட்டு மூலையில் உட்கார வைக்கும் வழக்கத்திற்கு மாறாக சொகுசு சுழல் நாற்காலி ஒன்றில் கடவுள் உட்கார வைக்கப்பட்டார். கண்ணைக் கட்டி கூட்டி வந்ததால் எந்தக் காவல் நிலையத்தில் இருக்கிறோம் என்பதே கடவுளுக்குத் தெரியாமல் போயிருந்தது. கறுப்புத்துணியை அவிழ்த்தெடுத்தப் பின்னும் மயமயவென மங்கிய இருட்டாகவே தெரிந்த பார்வை ஒரு நிலைக்குத் திரும்ப வெகுநேரமானது. தூணிலும் துரும்பிலும் இருக்கத் தெரிந்த கடவுளுக்கு கேவலம் ஒரு காவல் நிலையத்தில் இருக்க முடியாதா என்ன? அதுவும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகத்தைச் சுற்றிப் பார்க்கத் தோதாக இப்படியொரு சுழல் நாற்காலி இருக்கும் போது வேறென்ன வேண்டும் என்று தோன்றியது கடவுளுக்கு.

தமது வழக்கமான பாணியில் அவரை விசாரிப்பதா அல்லது கடவுள் என்பதால் வேறு விசேட வழிமுறைகளைக் கையாள்வதா என்கிற குழப்பம் காவல்துறையினரைப் பீடித்திருந்தது. விசாரணைக்கைதியை கையாளும் நெறிமுறைகள் பற்றி டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கும் வழிகாட்டுதல்கள் யாவும் மனிதர்கள் சம்பந்தப்பட்டதாகத்தான் இருந்தனவேயன்றி கடவுள் தொடர்பானதாக எதுவுமில்லாதது அவர்களது குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. கைதுசெய்யப்படுபவர் பற்றி அவரது குடும்பத்தாருக்கோ உறவினருக்கோ இவ்வளவு நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும் என்கிற சாதாரண நடைமுறைகூட கடவுள் விசயத்தில் பொருந்திவரவில்லை. ஆதியந்தமில்லாதவர் என்றும், முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ வீற்றிருப்பவர் என்றும் கடவுளை நம்புகிறவர்களே காலங்காலமாக எதிரும்புதிருமாக வாதிட்டும் தீராத இப்பிரச்னையில் அவரது பெற்றோரையோ உற்றாரையோ கண்டுபிடிப்பது காவல் துறையினரால் முடியக்கூடிய காரியமா என்ன? ஒரு விசாரணைக்கைதியை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தாமல் எவ்வளவு நேரம் சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பீர்கள் என்கிற சம்பிரதாய கேள்வியை அவ்வப்போது கேட்பதற்கு ‘தேசிய கடவுள் உரிமை ஆணையம்’ என்பது மாதிரியான அமைப்புகள் இன்னமும் உருவாகாமல் இருப்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது காவல் அதிகாரிகளுக்கு. 

எல்லாம் கடவுள் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்று இந்த மனிதர்கள்தான் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, கடவுள் ஒருபோதும் தானாக முன்வந்து அவ்வாறு எவரொருவரிடமும் சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால் தான் இருப்பதாகவே கடவுள் இதுவரையிலும் சொல்லிக்கொண்டதில்லை. வெற்றிகளும் நல்லதுகளும் கிடைக்கிற போதெல்லாம் அவை தனது சொந்த அறிவாலும் உழைப்பாலும் கிடைத்ததாக ஜம்பமடித்துக் கொள்கிற இந்த அற்ப மானிடர்கள், ஏதேனும் கெடுதல் நடந்தால் மட்டும் கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்ப்பது என்ன நியாயம்?  பரீதாபாத்தில் தலித் குழந்தைகள் இரண்டுபேர் கொல்லப்பட்ட போது ‘யாராவது நாய்மீது கல்லை விட்டெறிந்தால்கூட அரசாங்கம் தான் பொறுப்பு என்பீர்களா?’ என்று ஒரு அமைச்சர் கேட்டது கடவுளுக்கு ஞாபகம் வந்தது. இந்த மந்திரிக்கு அதைவிட வேறென்ன புடுங்கல்  என்று நினைத்துக் கொண்ட கடவுள், இத்தினியூண்டு நாட்டுக்குள் நடப்பதற்கே இந்த மனிதர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என்கிற போது, ஏழேழு லோகத்தையும் கட்டியாளும் கடவுள் பாலம் இடிகிறதா பர்லாங் கல் பெயர்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? கடலுக்குள் திரண்டுள்ள மணற்திட்டை, கடவுள் கட்டிய இந்தப் பாலம் கரையாமல் நிற்கிறது என்று போற்றுவதும், நேற்று ஒரு நிறுவனம் கட்டிய மேம்பாலம் இன்று விழுவதற்கு கடவுளே காரணம் என்று தூற்றுவதுமாகிய இந்த மனிதர்களின் முட்டாள்தனத்தை எண்ணி கடவுளுக்கு கவலையாகிப் போனது.

இதோ இந்த கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது. அதற்கு சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தையும் அதன் வேலைகள் முறையாகவும் தரமாகவும் நடக்கிறதா என்று மேற்பார்வையிடாத அதிகாரிகளையும் துறை அமைச்சரையும் பொறுப்பாக்கி அவர்களையல்லவா கைதுசெய்து விசாரித்திருக்க வேண்டும்? நாலரை வருசமாய் ஆமைவேகத்தில் நடந்த வேலையை சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது என்றதும் விரட்டி முடிக்கச் சொன்னது ஆளுங்கட்சி என்றொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. எப்படியாவது தேர்தலுக்கு முன்பாக பாலத்தை திறந்து தனது சாதனையாக காட்டி ஓட்டு வாங்கும் ஆசையில், கலவை கெட்டித்து இறுகுவதற்குரிய கால அவகாசத்தை வழங்காமல் அவசரகதியில் வேலையைத் தொடர்ந்தது தான் விபத்துக்கு காரணம் என்று ஊடகங்கள் சொன்னதிலும் உண்மை இருக்கிறதுதானே? அவ்வளவு எதற்கு, பாலம் இடிந்தது மோசடியினால்தானேயன்றி கடவுளால் அல்ல என்று நாட்டின் பிரதமர் மோடியே சொல்லியிருக்கிறார். வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது உண்மையைப் பேசிவிட வேண்டும் என்கிற தவிப்பிலிருந்த மோடி இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாதுர்யத்தைக் கண்டு வியந்துபோன கடவுள், மோடி சொல்கிற பலவும் நம்பத்தகுந்தது இல்லை என்கிற உண்மை ஒருபுறம் வலுவாக இருந்தாலும் இந்த விசயத்தில் அவர் பொய் சொல்லவில்லை என்றே நினைத்துக்கொண்டார்.

இதற்கிடையில், கோட்டாவில் படித்துவிட்டு வருகிற என்ஜினியர்கள் பாலம் கட்டினால் அது இடியத்தானே செய்யும் என்று ஆன்டி - கோட்டா ஆசாமி ஒருத்தர் கருத்து சொல்லியிருந்ததையும் கடவுள் கவனிக்கத் தவறவில்லை. லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து கொல்லைப்புற வழியான மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்கிற தத்திப்பிள்ளைகளைத் தான் அந்த ஆள் குற்றம் சாட்டுகிறாரோ என்று பார்த்தால் அதுதானில்லை. ஒருவேளை, வருஷத்துக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் பிடுங்கிக்கொண்டு அதிக மார்க் எடுக்கும் மோசடி நுணுக்கங்களை கற்றுத் தருகிற ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் படிக்கிறவர்களைத்தான் குற்றம் சாட்டுகிறாரா என்று பார்த்தால் அதுவுமில்லை. அந்தாள் இடஒதுக்கீடு என்கிற கோட்டாவில் படிக்கிறவர்களைத்தான் குற்றம் சாட்டுகிறார். நாட்டில் எது நடந்தாலும் இட ஒதுக்கீட்டை குறை சொல்லும் இவரைப் போன்ற குதர்க்கவாத கும்பல், இட ஒதுக்கீடு இல்லாமல் மெரீட்டில் படித்தவர்களால் ஏவப்படுகிற ராக்கெட்டுகள் வானில் பாயாமல் கடலுக்குள் விழுந்து முழுகுவது பற்றியோ இட ஒதுக்கீடே இல்லாத விளையாட்டுத்துறை ஈயம் பித்தளை பதக்கம் வாங்கக்கூட லாயக்கில்லாமல் கிடப்பது பற்றியோ வாய் திறப்பதில்லை என்பது கடவுளுக்கும் தெரிந்துதானிருந்தது. 

இவ்வாறாக பலதையும் யோசித்துக்கொண்டிருந்த கடவுளுக்கு, இந்த மனிதர்கள் அடுத்ததாக தன்னை என்ன செய்வார்கள் என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் மூண்டது. மனிதர்கள் மனிதர்களுக்காக உருவாக்கிக் கொண்ட இந்த சட்டங்களும் காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் கடவுளாகிய தன்னை என்ன செய்துவிட முடியும் என்று தோன்றியது அவருக்கு. ஆனால் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டுதான் அவர்கள் யாரையும் எதுவும் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கடவுள் அறிந்தேயிருந்தார். மனிதர்களை கடவுள் சோதிப்பதாக இதுகாறும் சொல்லப்பட்டு வந்த கதைகளுக்கு மாறாக, கடவுளை மனிதர்கள் சோதிக்கிற இந்தச் சூழலை நினைத்து இகழ்ச்சியாக சிரித்துக் கொண்ட கடவுளுக்கு, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று சொல்வதிலுள்ள அபத்தம் புரிந்தது. மனிதர்களைப் பற்றி சுருள்சுருளாக எழுந்த இப்படியான யோசனைகளால் கடவுளுக்கு அலுப்பு தட்டியது. எனவே, தன்னைப் போலவே கைது செய்யப்பட்டு இழுத்து வரப்பட்டவர்களை நாடு முழுவதுமுள்ள பல்வேறு காவல் நிலையங்கள் எவ்வாறு நடத்துகின்றன என்பதை தனது ஞானதிருஷ்டியால் காணத் தொடங்கினார். 

உள்ளாடைகூட களையப்பட்டிருப்பது பற்றிய நினைவே இல்லாமல் ஒரு காவல் நிலையத்தின் மூலையொன்றில் பலர் மயங்கிச் சரிந்துக் கிடந்தார்கள். ‘உரியமுறையில்’ விசாரித்ததில் கைகால் முறிக்கப்பட்ட சிலர் நகரக்கூட முடியாமலிருந்தார்கள். இன்னொரு காவல் நிலையத்தில், லாடம் கட்டப்பட்ட ஒருவரது உள்ளங்காலிலிருந்து ரத்தம் பயந்து பயந்து கசிந்துகொண்டிருந்தது. இரும்புக்குறடு கொண்டு நகம் பிடுங்கப்பட்ட ஓரிருவரது அலறல் மிச்சமிருந்தவர்களுக்கும் கிலியூட்டுவதாக இருந்தது. ரத்தம் பீறிடும் காயங்களிலும் கண்களிலும் மிளகாய்த்தூள் தூவப்பட்ட சிலர் கதறுவதை சுற்றிலுமிருந்து ரசிக்கும் வழக்கத்தை பெரும்பாலான காவலர்களிடம் காணமுடிந்தது. எந்தக் காவல் நிலையம் என்று தெரியாத ஒன்றில், இருள் கவிந்த கொட்டிலுக்குள் வைத்து நான்கைந்து காவலர்களால் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணொருத்தி ரத்தம் வழிந்தோடும் பிறப்புறுப்பை மூடுவதற்குக்கூட பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்தாள். மார்க்காம்பில் ஒயரைச் சுற்றி மின்சாரம் பாய்ச்சப்பட்டு உடல் கருகிய யாரோ ஒரு சீவன் குற்றுயிராய் அரற்றிக் கிடந்தது. ஏதோவொரு மலைப்பகுதியின் காவல் நிலையத்திற்குள் பனிப்பாளத்தின் மீது படுக்க வைக்கப்பட்ட ஓருடல் விரைத்துக்கிடந்தது. குப்புறக் கிடந்த ஒருவரின் குதத்திலிருந்து ரத்தம் வழிந்து காய்ந்திருந்தது. தன்னையும் இப்படி லத்தியைச் சொருகி சித்திரவதை செய்வார்களோ என்று நினைக்கும் போதே கடவுளுக்கு உடல் நடுக்கம் கண்டது. தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தில் முணகியவர்களின் வாயில் காவலர் ஒருவர் நிதானமாக மூத்திரம் பெய்ததைக் கண்ட கடவுளின் நாவில் உப்புக்கரித்தது. என்கவுண்டர் என்கிற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் ரத்தம் எந்தவொரு காவல் நிலையத்தின் வளாகத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கும் தெறித்துக் கிடந்தது. ஆமாம், ரத்தம் ரத்தம் ரத்தம்... ஈர ரத்தம், காய்ந்த ரத்தம், கசியும் ரத்தம்... காவல் நிலையத்தின் சுவரிலிருக்கும் செந்நிறம் ரத்தத்தால்தான் பூசப்பட்டிருக்கிறதோ என்கிற குழப்பம் பீடித்தது கடவுளை. பாதாளலோகம் என்று சொல்லப்படுகிற நரகத்தில் பாவிகளுக்கு வழங்கப்படும் அத்தனை தண்டனைகளும் விசாரணைக்கு முன்பாகவே வழங்கப்படும் இடமாக இருந்த இந்த பூலோக காவல் நிலையங்களைக் கண்ட கடவுளுக்கு லேசாக உதறலெடுக்க ஆரம்பித்தது. கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரை எங்காவது இருக்கிறதா என்று அவரது கண்கள் துழாவின.

பொதுச்சொத்தை சேதப்படுத்தி, தேர்தல் நேரத்தில் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த சதிமுயற்சியில் யாரெல்லாம் உடந்தை? என்கிற ரீதியில்தான் கடவுளிடம் விசாரணையைத் தொடங்கினார் காவல் ஆய்வாளர் ஒருவர். தானே சம்பந்தப்படாத குற்றம் ஒன்றில் தனக்கு உடந்தையாக யாரும் இருந்தார்களா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தார் கடவுள். அப்பாவி போல முழித்தால் விட்டுவிடுவோம் என்று நினைக்கவேண்டாம். ஒழுங்கு மரியாதையாக உண்மையைச் சொல்லிவிட்டாலோ அப்ரூவராக மாறிவிட்டாலோ நல்லது. இன்னும் என்னென்ன சதிவேலைகளுக்கு திட்டமிட்டிருந்தீங்க? சர்வதேச பயங்கரவாத அமைப்பு எதனுடனாவது தொடர்பு உண்டா? என்று அடுக்கடுக்காக அந்த ஆய்வாளர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த போதே அவரைவிடவும் பெரிய அதிகாரிகள் குழாம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. ‘யோவ், யாரை எப்படி விசாரிப்பது என்று விவஸ்தை வேண்டாமா? எல்லாத்தையும் நிறுத்திட்டு இங்க வாய்யா... மேலிடத்திலிருந்து முக்கியமான தகவல் வந்திருக்கு...’ என்று பெரிய அதிகாரிகளில் ஒருவர் சத்தம் போட்டதும் ஆய்வாளர் அடக்கஒடுக்கமாகிவிட்டார். அப்பாடா, இப்போதைக்கு தப்பித்தோம் என்று ஆசுவாசமடைந்தார் கடவுள். மற்ற பல கைதிகளும் அலுப்பிலும் வலியிலும் தூக்கத்தில் மயங்கிக்கிடந்தனர். பசியும் உறக்கமும் அற்றவரான கடவுளோ  அதிகாரிகளின் முடிவுக்காக காத்திருந்தார்.

மேலிடத்தின் ஆலோசனைப்படி இந்த விசாரணையை  எந்தக் கோணத்தில் கொண்டு செல்வது என்று தனி அறை ஒன்றில் கூடி விவாதித்த அதிகாரிகள் நெடுநேரத்துக்குப் பிறகே வெளியே வந்தார்கள். அவர்கள் என்ன முடிவெடுத்திருப்பார்களோ என்கிற பதைப்பில் இருந்த கடவுள் வரம் கேட்டு காத்திருக்கும் பக்தரைப்போல அவர்களது முகத்தையே பார்த்தபடி இருந்தார். அவர்களோ இவரிடம் எதுவும் பேசாமல் பக்கத்து மாநிலங்களின் போலிசிடமும் மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐயிடமும் அண்டை நாடுகளின் அரசாங்கங்களுடனும் இன்டர்போல், சிஐஏ, எப்.பி.ஐ என்று  யார்யாரிடமோ குசுகுசுவென பேசிக் கொண்டேயிருந்தார்கள். 

நேரம் நள்ளிரவைக் கடக்கும் வேளையில் காவல் நிலையத்திற்கு வெளியே திடுமென கூச்சலும் ஆரவாரமும்  பிரார்த்தனைப் பாடல்களும் ஒலிக்கத் தொடங்கியது. தாங்கள் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்த கடவுள் சிக்கிக்கொண்டதாக எப்படியோ கசிந்த செய்தியால் உந்தப்பட்டு உலகெங்குமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் அந்த காவல் நிலையத்திற்கு முன்பாக திரளத் தொடங்கியிருந்தனர்.  நேரம் ஆகஆக அங்கு பக்தியும் பரவசமும் உக்கிரமாகி உச்சத்தைத் தொட்டன. கட்டுக்கடங்காத கூட்டம் காவல் நிலையத்தின் மதிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும் அபாயக் கட்டத்தை எட்டியது. நிலைமையின் தீவிரத்தை ஒருவாறு யூகிக்க முடிந்த அதிகாரிகள் குழுவின் தலைவர் கடவுளிடம் வந்து ‘இவ்வளவு பேரும் என்னென்ன வேண்டுதல்களோடு இங்கு வந்து தொலைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இவர்களிடம் சிக்கினால் உங்கள் கதி அதோகதி தான். ஆளுக்கொரு இணுக்காக உங்களை பிய்த்தெடுத்து விடுவார்கள்...’ என்கிற பீதியூட்டும் செய்தியைச் சொன்னார். ‘இங்கிருந்து நீங்கள் தப்பித்து தலைமறைவாகி விடுவதை தவிர உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லை என்று மேலிடம் கருதுகிறது’ என்றார் அந்த அதிகாரி. ‘உங்களது அரசாங்கத்தின் முடிவு எனக்கு அனுகூலமானதுதான். இருந்தாலும் 26 பேருடைய சாவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்னை தப்பிச் செல்லுமாறு உங்கள் அரசாங்கம் சொல்வது எனக்கு  வியப்பாக இருக்கிறது...’ என்றார் கடவுள். கடவுளின் பதிலால் எரிச்சலடைந்த போன அதிகாரி ‘உன்னையெல்லாம் பிடிச்சதும் என்கவுன்டர்ல போட்டுத்தள்ளியிருக்கணும். கடவுள்னு கொஞ்சம் கருணை காட்டினது தப்பா போச்சு...’ என்று மனதுக்குள் கறுவியதை அறிந்த கடவுள், வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாம் என்கிற சுதாரிப்பில் அமைதியானார்.

‘நீங்கள் கடவுள் என்பதால் பயத்திலோ பக்தியிலோ உங்களை நாங்கள் தப்பிக்க வைக்கவில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் கெடுதல் செய்கிறவர்களையெல்லாம் தப்பிக்க வைக்கிற நீண்ட பாரம்பரியம் கொண்ட எங்களது அரசாங்கத்தின் கொள்கைப்படியே உங்களையும் தப்பிக்க வைக்கிறோம்.  யூனியன் கார்பைடு வாரன் ஆண்டர்சன், லலித் மோடி, விஜய மல்லையா போல நீங்களும் விரும்பும் நாட்டுக்கோ வேறு லோகத்துக்கோ தப்பிச் செல்ல உதவ வேண்டியது எங்களது பொறுப்பு’ என்று தலைமை அதிகாரி சொன்னதை மிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொண்டார் கடவுள். தான் பயந்தது போலில்லாமல் விசாரணை இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வந்து தான் விடுவிக்கப்பட்டது குறித்து நிம்மதியடைந்தார் கடவுள். காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் தயார்நிலையில் காத்திருந்த தனது புஷ்பக விமானத்தில் ஏறி தப்பிப்போகும் கடவுளைக் கண்ட பக்தர்கள் ‘இந்த மட்டிலாவது தரிசனம் கிடைத்ததே’ என்று பரவசமடைந்தார்கள்.

***

கொல்கத்தா பாலத்தை இடித்த சதிவழக்கில் சிக்கிக்கொண்ட கடவுளிடம் போலிசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தப்பிக்க விடுவதற்கு கடவுளிடம் கையூட்டாகப் பெற்ற வரங்கள் பற்றிய விவரத்தை வெளியிடக் கோரி எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பழி போடுவதற்கு ஆள் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் அடுத்த மேம்பாலத்தை இன்னமும் மோசமான தரத்தில் கட்டுவதற்கு உற்சாகமாக தயாராகிக் கொண்டிருந்தார் கட்டுமான ஒப்பந்ததாரர். துப்பு துலக்க முடியாத மர்மங்களோடு உலகெங்கும் நிலுவையில் கிடந்த விபத்துகள் சதிச்செயல்கள் மற்றும் கலவரங்களில் தன்னைத் தானே முதன்மைக் குற்றவாளியாக அறிவித்துக்கொண்டு கடவுள் கொடுத்திருந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றங்கள் அவற்றோடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தன. தப்பிக்க விடுவதற்கு பிரதியுபகாரமாக ஆட்டோகிராப் போட்டுத்தாருங்கள் என்று நூற்றுக்கணக்கான வெற்றுத்தாள்களில் தன்னிடம் வாங்கிய கையொப்பத்தை இன்னும் என்னென்ன மோசடிகளுக்கு இந்தக் காவலதிகாரிகள்  பயன்படுத்தப் போகிறார்களோ என்கிற அச்சத்தில் கல்லாய் உறையத் தொடங்கினார் கடவுள். காற்றாகி கரைந்து காணாமல் போய்விட்டாரென்றும் தகவல்.

19.04.2016
" நீங்கள் சுங்கச்சாடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்" தொகுப்பிலிருந்து...



1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...