ஞாயிறு, மே 29

காலடி நிலமும் கைமாறும் காலம் - ஆதவன் தீட்சண்யா



முகப்போவியம்: அன்புத்தோழன் கார்த்தி
சந்தியா பதிப்பகம் வெளியிடவிருக்கும் 
"மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்" என்கிற 
எனது நான்காவது கவிதைத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை

ஒளிச்சுடரும் நட்சத்திரங்களையும் சூரியச்சந்திரர்களையும் தொலைத்துவிட்டு குண்டுபல்லுக்கு அலையும் இங்கே பகலும் இரவைப்போலவே இருளடைந்து கொண்டிருக்கிறது. வேளைதோறும் வீடுவீடாய் புகுந்திடும் கும்பலொன்று குடலையுருவிச் சோதிக்கிறது. அறுத்தெடுத்த நாவுகளைக் கோத்து மாலையாகச் சூடிக்கொள்கிறது. மனிதத்தலைகளை மட்டையாலடித்து விளையாடிக் கொண்டிருக்கும் அக்கும்பல் மாய்கிற உயிர்களை முதலாவது விக்கெட் இரண்டாவது விக்கெட் என்று கொண்டாடிக் களிக்கிறது. அது பெண்களை வல்லாங்கு செய்து விட்டு பிறப்புறுப்பில் கரும்புக்கட்டைகளை செருகிப் போகிறது. கபடங்களறியாது தூங்கும் குழந்தைகளை படுக்கையிலேயே தீயிட்டுப் பொசுக்குகிறது. காதலர்களை ஊர்நடுவே வெட்டி வீழ்த்துகிறது. இந்தக் கும்பலால் தண்டவாளத்தில் வீசப்படும் பிணங்களைக் கண்டு பயத்தில் நடுங்கும் ரயில்கள் தடதடத்து ஓடுகின்றன.  

அண்டைநாட்டினை நோக்கி குறிபார்த்திருக்கும் ராணுவத்தைக் காட்டி நம் கவனம் திசைதிருப்பப்படுகிறது. எதிரிகள் ஆகாயமார்க்கமாக வந்து நம் தலைமீது இறங்குகிறார்கள். கையில் ஆயுதம் ஏதும் இல்லாத அவர்கள் நம் உயிரணுவின் மூலகம் வரைக்கும் தமக்கேற்றபடி மாற்றியமைக்கிறார்கள். பின்பு அகலத் திறந்திருக்கும் நம் கண்முன்னே அவர்கள் எவ்வித பதற்றமுமின்றி சாவகாசமாக நம் உடைமைகளைக் களவெடுக்கிறார்கள். நிலம் நீர் காற்று ஆகாயம் அனைத்தையும் அவர்களுக்கு கைமாற்றித் தரும் முறியில் நாம் முழு சுவாதீனத்துடன் கைச்சாத்திடுகிறோம். ஓய்ந்த வேளைகளில் இந்த தேசத்தின் மீதான நமது பற்றினை இன்னும் சற்றுநேரத்தில் பக்தியாக உருமாற்றுவது எப்படியென உபதேசம் செய்கிறோம்.

நிழலுக்கும் திறை செலுத்தும் இவ்வாழ்வு குறித்த புகார்கள்  எதுவுமின்றி அன்றாடங்களைக் கழிக்கிற எனது நண்பர்களில் சிலர், நான் நினைத்துக் கொண்டிருப்பதுபோல இந்தச் சமூகம் அப்படியொன்றும் கொடுங்குற்றமானதல்ல என்று எனக்கு ஓயாமல் அறிவுரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வந்துகொண்டிருக்கும் செய்திகளோ உங்கள் கூற்றை பொய்ப்பிக்கின்றனவே என்று நான் கேட்டால், எந்தவொரு சமூகத்திலும் எல்லாக் காலத்திலும் நிகழக்கூடிய குற்றங்களே இங்கும் நிகழ்வதாக சமாதானப்படுத்தும் அவர்கள் அவையெல்லாம் ஏதோ அனுமதிக்கப்பட்டவை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவ்வளவு பெரிய சமூகத்தில் இந்தளவுக்குகூட குற்றங்கள் நடக்காதா என்று கேட்பதன்  மூலம் அவர்கள் எண்ணிக்கைரீதியிலான ஓர் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற ஆசையை சூசகமாக வெளிப்படுத்துகிறார்கள். கொடுங் குற்றங்களுக்கான மறுவிளக்கத்தை வரையறுக்கத் துணிந்திருக்கும் அவர்களிடம் எனது முறையீடெல்லாம் ஒன்றே ஒன்றுதான்- ஏன் குற்றங்கள் எப்போதும் எம்மீதே நிகழ்த்தப்படுகின்றன?

வியாபாரக்கருவியான தராசு நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்ததின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை, அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது. ஒருபால் கோடாமையற்று ஓரவஞ்சனைகளால் அழுகிக் கொண்டிருக்கும் அந்த மனதை அம்பலப்படுத்த இப்போதும் கவிதைகளே எனக்கு உயிர்த்துணை.

25.05.2016








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...