முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யாஇன்றைய அதிகாலை அந்த காணொளிக்காட்சியோடு எனக்கு விடிந்திருக்கக்கூடாது. விவரிக்கவியலாத அவமானத்திற்கும் உளைச்சலுக்கும் ஆளாகிப்போனேன். அதுவும் இளைப்பாறிக் கொள்வதற்காக சாலையோரம் இறக்கிவைத்திருந்த தன் அம்மாவின் சடலத்தை அப்பா தூக்கும் போது அந்தச் சிறுமியின் அழுகையைக் கண்ட பிறகு எதுவொன்றையும் செய்வதற்கு மனமொட்டாது    இறுகிப்போய் கிடந்தேன். அந்தச் சிறுமியின் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து இந்த நாட்டையே மூழ்கடித்துவிட்டால்தான் என்ன என்று தோன்றியது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் போல வாழ்க்கை அவ்வளவு வீராவேசத்தோடு இருப்பதில்லை என்று அந்தச் சிறுமி உணர்ந்திருக்கிறாள். அதனால்தான் அவள் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக்கொண்டு பொதிகளை தூக்கிக்கொண்டு அம்மாவின் இறுதிப்பயணத்தில் உடன் சென்றுகொண்டிருக்கிறாள்.

பணம் இல்லை என்பதற்காக ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட நிலையில் தனது மனைவியின் சடலத்தை போர்வையால் சுற்றியெடுத்துக்கொண்டு அந்த மனிதனின் 10 கிலோமீட்டர் தாண்டும் வரையிலும் ஒருவர்கூட அவர்களைப் பார்த்திருக்கவேமாட்டார்களா? ஒடிஷாவில் அவ்வளவுபேரும் செத்தா போனார்கள்?   இந்த நாட்டின் பிரதமர் வேளைக்கொரு வானூர்தியில் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லாமல் போனது ஏன் என்கிற கேள்வியை யாரிடம்தான் கேட்பது? இப்படியெல்லாம் பினாத்திக்கொண்டே ஒசூர் அரசு மருத்துவமனைக்குப் போனவன் அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் ஆற்றமாட்டாத துயரோடு இவ்விசயத்தைச் சொல்லி அவரையும் துயரப்படுத்திவிட்டேன். அரசு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் சாமானியர்களிடம் காட்டும் அலட்சியமும் அரசாங்கத்தின் பொறுப்பின்மையும் இப்படியான அவலங்களை உருவாக்கிவிடுவதாக சொன்ன அவர், பின்வரும் முக்கியமான தகவலொன்றை கூறினார். அதாவது தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காமல் யாரும் இறந்துபோனால் அவர்களது உறவினர் சொல்லும்  இடத்திற்கு சடலத்தைக் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டுவர அமரர் ஊர்தி இலவசமாக தரப்படுகிறது. மாநிலத்தின் எந்தப்பகுதியாக எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் - அண்டை மாநிலமாக இருந்தாலும் - ஒரு பைசா செலவில்லாமல் இறந்தவரை கொண்டு சேர்க்கும் பொறுப்பு அரசுடையதாக இருக்கிறது - என்று அவர் சொன்னது சற்றே ஆறுதலாக இருந்தது.

பிறகு வந்து இணையத்தில் அதுகுறித்து தேடிப் பார்த்த போது , 2010 ஆம் ஆண்டு மக்கள் நலவாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்தப் பேசிய அப்போதைய தி.மு.க. அரசின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தான் அப்படியயொரு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். 2011ல் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதன்முறையாக இலவச அமரர் ஊர்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. தமிழக சுகாதார திட்டப்பணிகள் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்படுகிறது . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் அமலில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. 155377 என்கிற இலவச எண்ணுக்கு அழைத்தால், விவரங்களைக் கேட்டுக்கொண்டு, ‘யாருக்கும் எதற்காகவும் ஒரு பைசா தரவேண்டாம்.. மீறி கேட்டால் இதே எண்ணில் கூப்பிட்டு புகாரளியுங்கள்’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அது சரி, இதெல்லாம் ஒடிஷாவில் செல்லுபடியாகாதா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…