செவ்வாய், அக்டோபர் 27

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்திற்காக நிகழ்த்திய பயங்கரவாதங்கள் - லீனா கீதா ரெகுநாத் தமிழில்: செ.நடேசன்


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞரான ரோஹினி சலியன், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடுமை காட்டவேண்டாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தன்னை மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், அந்த பயங்கரவாதச் செயலில் நேரடியாக பங்கெடுத்தவரின் வாக்குமூலமாக அமைந்துள்ள இக்கட்டுரை பல உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. ‘தி கேரவன்’ 1 பிப்ரவரி 2014  இதழில் வெளியான  The Believer: Swami Aseemanand’s radical service to the Sangh  இக்கட்டுரைக்காக, லீனா கீதா ரெகுநாத் மதிப்புமிக்க ‘ரெட் இங்க்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
சுவாமிஜியை அழைத்து வாருங்கள்- ஜெயிலர் உத்தரவிட்டார். இரண்டு காவலர்கள் ஜெயிலரின் அலுவலகத்தை விட்டு விரைந்து, சிறையின் தரைத்தளத்திற்குச் சென்றனர். சுவர்களுக்கு வெளியே பார்வையாளர் நேரத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் அலறுவது போன்ற, காதுகளைச் செவிடாக்கும் சத்தம் அறைகளினூடே எதிரொலித்தது.

அடுத்த சில நிமிடங்களில் இந்து கலவரவாதியும், 2006 முதல் 2008க்கு இடையே நாடு முழுவதும் பொதுமக்களைக் குறிவைத்துப் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சுவாமி அசீமானந்தா ஜெயிலரின் அறைக்குள் அடியெடுத்து வைத்தார். அவர் ஒரு காவி வேட்டியையும், காவி குர்தாவையும் முழங்கால் வரை தொங்குமாறு அணிந்திருந்தார். அவரது துணிகள் புத்தம் புதியதாகச் சலவைத்தேய்ப்பு செய்யப்பட்டிருந்தன. கம்பளியாலான குரங்குத்தொப்பி  அவரது நெற்றிக்குக்கீழ் இழுக்கப்பட்டிருக்க, அவரது கழுத்தைச்சுற்றி ஒரு சால்வை போர்த்தப் பட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். நாங்கள் இருவரும் ‘நமஸ்தே’ பரிமாறிக் கொண்டோம். பின்னர் அவர் என்னை அடுத்திருந்த ஓர் அறைக்கு இட்டுச் சென்றார். அங்கே வெள்ளை வேட்டி, குர்தா அணிந்திருந்த எழுத்தர்கள் தடிமனான பதிவேடுகளில் மூழ்கியிருந்தனர். அவர் கதவுக்குப்பின் இருந்த ஒரு பெரிய மரப்பெட்டியின் மீது அமர்ந்து, அருகில் இருந்த டெஸ்க்கிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு நல்ல உபசரிப்பாளராக விளங்கிய அவர், எனது வருகையைப்பற்றி விசாரித்தார். ‘உங்கள் கதையை யாராவது ஒருவர் சொல்லவேண்டுமே’ என்றேன் நான்.
 
இரண்டாண்டுகளுக்குமேல் அசீமானந்தாவிடம் நான் நடத்திய நான்கு நேர் காணல்களில் முதலாவதின் தொடக்கம் இவ்வாறு இருந்தது. தற்போது அவர் குறைந்தபட்சம் 82பேரைக் கொன்ற 3 குண்டுவெடிப்புகள் தொடர்பான கொலை, கொலைமுயற்சி, சதித்திட்டம் தீட்டியது, கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களின் கீழ் விசாரணையில் இருந்து வருகிறார். அவர் மேலும் இரண்டு குண்டு வெடிப்புவழக்குகளில் விசாரிக்கப்பட உள்ளார்; ஆனால், அவற்றின்மீது முறையான குற்றச்சாட்டுக்கள் இன்னும் சாட்டப்படவில்லை. ஒட்டுமொத்தமாக 5 தாக்குதல்கள், 119 பேரைக் கொன்றது மற்றும் இந்திய சமுதாயத்தை அரிப்பவராக வேலை செய்தது ஆகியவற்றுக்காக தண்டனை அளிக்கப்பட்டால் அவர் மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.

எங்களது உரையாடல்கள் நடைபெற்றபோது அசீமானந்தா மெல்லமெல்ல உற்சாகம் அடைந்து மனம் திறந்து பேசினார். அவரது வாழ்க்கையைப்பற்றி அவர் கூறிய கதை குறிப்பிடத்தக்கது. இந்தக் காலகட்டங்களில் பெரும்பாலான நேரம் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’கின் ஆதிவாசிகள் பிரிவான ‘வன்வாசி கல்யாண் ஆஷ் ரம்’(வி.கே.ஏ) என்ற அமைப்பின் கீழ் சங்பரிவாரத்தின் ‘ஹிந்துத்வா’வையும் அதன் நோக்கமான ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தையும் அவர் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார். இப்போது வயது 60களின் துவக்கத்தில் உள்ள அசீமானந்தா ஒருபோதும் தனது ஆழ்ந்த நம்பிக்கைகளிலிருந்து தளர்வோ, நெகிழ்வோ அடைந்ததில்லை.

மோகன்தாஸ் காந்தியின் கொலைக்குப்பிறகு நாதுராம் கோட்சேவும், அவர் கூட்டாளி நாராயண் ஆப்தேவும் 1949ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டு எரியூட்டப் பட்டார்கள். அவர்களது கூட்டுச்சதிகாரரான கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ‘‘கோபால் கோட்சே இருந்த அதே ‘செல்’லில் (அறை)  நான் வைக்கப்பட்டுள்ளேன்” என்று அசீமானந்தா பெருமை பொங்க என்னிடம் கூறினார். இன்று ‘இந்து தீவிரவாத வன்முறையின் மிக முக்கிய  முகமாக’ அசீமானந்தா விளங்குகிறார். குண்டுவெடிப்புக்களின் முன் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர்கள், அசீமானந்தாவை அசாதாரணமான கொடூரனாக, பொறுத்துக் கொள்ளவே முடியாத மனிதனாக என்னிடம் விவரித்தார்கள். அந்தச் சிறையின் இருளடைந்த ஆவணக் காப்பறையில் நான் கண்ட மனிதன் சிறைவாசத்தால் தளர்ந்து போனவராக, ஆனால் செய்த தவறுகளுக்காக வருத்தப் படாதவராகவும் இருந்தார். ‘எனக்கு எது நேர்ந்தாலும் அது இந்துக்களுக்கு நல்லது. அது மக்களிடையே ஹிந்துத்வா உணர்வைக் கிளறிவிடும்’என அவர் என்னிடம் கூறினார். (லோகோன் மே ஹிந்துத்வா கோ பாவ் ஆவே கா)
                                                                 
2007 பிப்ரவரி 18 இரவில் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில் நிலையச் சந்திப்பில் அதன் வழக்கமான பிளாட்பாரம் 18ல் இருந்து புறப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இரண்டு ரயில்வண்டித் தடங்களில் ஓடும் ஒரேயொரு வண்டி ‘ஃப்ரண்ட்ஷிப் எக்ஸ்பிரஸ்’ என்றழைக்கப்படும் ‘சம்ஜுதா எக்ஸ்பிரஸ்’. அந்த இரவில் 750 பயணிகளில் ஏறத்தாழ முக்கால் பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் பாகிஸ்தானியர்கள். அந்த வண்டி தன் பயணத்தைத் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பின்-நள்ளிரவுக்குச் சில நிமிடங்கள் முன்- முன்பதிவில்லாத 16வது பெட்டியின் இரண்டு கம்பார்ட்மெண்ட்களில் தீவிர வெடிதிறன் கொண்ட குண்டுகள் (ஐ.இ.டி) வெடித்தன. அந்த இரவில் சீறி வெடித்த குண்டுகளால் ரயிலில் தீப்பிடித்துக் கொண்டது. குண்டுவெடிப்பால் வெளியேறும் வாயில்கள்  அடைபட்டுப் போனதால் பயணிகள் வெளியேற முடியாமல் உள்ளேயே முடக்கப்பட்டனர். 

‘அது மிகவும் பயங்கரமாக இருந்தது’ என ரயில் பாதை ஆய்வாளர் ஒருவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இதழிடம் தெரிவித்தார். அந்தப் பெட்டி எங்கிலும் முழுவதும் எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூட்கேஸில் வெடிக்காத குண்டுகள் (ஐ.இ.டி), பிஇ டிஎன், டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகிய இரசாயனங்களின் கலவைகளாக இருந்தன. இந்தத் தாக்குதலில் 68 பேர் இறந்தனர்.

அசீமானந்தா சம்பந்தப்பட்ட ஐந்து தாக்குதல்களில் இதுதான் இரண்டாவதும், மிகப் பயங்கரமானதும் ஆகும். இப்போது அவர் சம்ஜுதா ரயில்குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாகவும், மே 2007ல் 11பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் மூன்றாவது குற்றவாளியாகவும், அக்டோபர் 2007ல் 3பேரைக் கொன்ற ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் ஆறாவது குற்றவாளியாகவும் உள்ளார். மேலும், செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008ல் 37 உயிர்களைப் பறித்த மஹாராஷ்ட்ரா மாலேகான் தாக்குதலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இன்னும் குற்றச்சாட்டு அளிக்கப்படவில்லை.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை பல்வேறு காலகட்டங்களில், மும்பை தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு (ஏ.டி.எஸ்), ராஜஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு, மத்தியப் புலனாய்வுக்குழு (சி.பி.ஐ) மற்றும் தேசிய புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ) உள்ளிட்ட பல்வேறு குழுக்களால் புலனாய்வு செய்யப்பட்டன. இந்த ஐந்து வழக்குகளிலும் குறைந்தபட்சம் அரை டஜன் குற்றக்குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 31பேர்களில் அசீமானந்தாவுடன் இணைந்து செயல்பட்டவர்களில் பா.ஜ.க.வின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரயாக் சிங் தாகூர், இந்தூர் மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுனில் ஜோஷி ஆகியோர் அடங்குவர். எல்லாப் புலனாய்வுக்குழுக்களும் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அசீமானந்தா மையப் பாத்திரத்தை வகித்தவர் என உறுதிப்படுத்தியுள்ளன. அசீமானந்தா தனது சொந்தக்கணக்கில் சதித்திட்டக் கூட்டங்கள் நடத்தினார். தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.

2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரியில் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள நீதிமன்றங்களில் அசீமானந்தா இரண்டு ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தார். அவற்றில் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். அவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது தமக்குச் ‘சட்டப்பூர்வ உதவிகள் தேவை இல்லை’ என அவற்றை மறுத்தார். அவர் நீதிமன்றக் காவலில் 48மணி நேரம் இருந்தார். புலனாய்வுக் குழுக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள்மீது ஒவ்வொரு வாக்குமூலத்தையும் பதிவு செய்வதற்கு முன் அவர் தன் மனதை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் தரப்பட்டன. அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதில் உறுதியாக இருந்தார். அவரது வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. அவரது ஒப்புதல் வாக்குமூலமும் அவரது கூட்டுச்சதிகாரர்களான இருவரின்  வாக்குமூலங்களும் ‘அந்தத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் ஆர்.எஸ். எஸ்.ன் மூத்தத் தலைவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது தெரிந்தே வகுக்கப்பட்டன’ என்றன.

2011 மார்ச் 28அன்று அசீமானந்தா சட்ட உதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால், மறுநாளே முன்னர் அவர் ஒப்புக்கொண்ட அனைத்தையும் ‘சித்ரவதை செய்து பலவந்தமாக வாங்கப்பட்டவை’ எனப் பின்வாங்கினார். விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தில் ‘அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆழ்ந்த கவனத்துடன் செய்யப் பட்டதாகவும் உள்ளது. இது அரசியலாக்குவதாகவும், வழக்கு நடத்துவதாகப் பாசாங்கு செய்வதாகவும், ஊடகங்கள் மூலம் ஒரு முடிவை உருவாக்குவதாகவும், அதன்மூலம் உலகளவில் இந்து தீவிரவாதம் பற்றி ஒரு முன்னோட்டத்தை உருவாக்குவதாகவும் ஆளும்கட்சியின் நோக்கங்களுக்காகத் திட்டமிட்டதன் ஒருபகுதியாகவும் உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டது. அசீமானந்தாவுக்காக  சம்ஜுதா வழக்கில் ஆஜராகி வாதாடும் பலவழக்கறிஞர்களும், ‘எல்லா வழக்கறிஞர்களும் சங் அமைப்பின் உறுப்பினர்கள் தான்’ என்றும், ஆர்.எஸ்.எஸ்.-ன் சட்டப்பிரிவான ‘அகில பாரதிய அதிவக்தா பரிஷத்’தின் கூட்டங்களில் முடிவெடுத்து இந்த வழக்குகளை நடத்துகிறோம்’ என்றும் என்னிடம்  தெரிவித்தார்கள்.

நான் அசீமானந்தாவைப் பேட்டி கண்டபோது அவர் சித்ரவதை செய்யப்பட்டதை மறுத்தார். அத்துடன் அவரது வாக்குமூலங்கள் வற்புறுத்திப் பலவந்தமாகப் பெறப்பட்டவை என்பதையும் மறுத்தார். குண்டுவெடிப்புகளுக்காக அவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டபோது ‘அதுதான் எல்லாவற்றையும் சொல்வதற்கேற்ற நல்ல நேரம்’ என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார். ‘எனக்குத் தெரியும், நான் தூக்கிலிடப்படுவேன் என்று. ஆனால் நான் ஏற்கனவே கிழவனாகிவிட்டேன்.’

எங்களது தொடர் உரையாடல்களின் போது, அவர் சம்பந்தப்பட்ட சதித்திட்டத்தின் விவரங்கள் முழுமையாக வெளிவந்தன. மூன்றாம், நான்காம் நேர்காணல்களில் அவரது தீவிரவாதச் செயல்பாடுகள் அனைத்தும் இப் போது ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவராக, அப்போது பொதுச்செயலாளராக இருந்த மோகன் பகவத் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டவையே என்று தெரிவித்தார். வன்முறைத் தாக்குதல்கள் பற்றி பகவத் என்னிடம் சொன்னார்: ‘‘நீங்கள் இதில் வேலை செய்யலாம். ஆனால் இதில் நாங்கள் தொடர்புபடுத்தப்படக்கூடாது. நீங்கள் இதைச் செய்தால் நாங்களும் உங்களுடன் இருப்பதாகக் கருதலாம்.” 

ஜூலை 2005ல் நடைபெற்றதாகக் கூறப்பட்ட ஒரு கூட்டம் பற்றி என்னிடம் கூறினார். சூரத் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப்  பின் மூத்த சங் தலைவர்களான பகவத், அவ்வமைப்பில் அதிகாரம் படைத்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் எழுவரில் ஒருவரான இந்திரேஷ் குமார் உள்ளிட்டோர் குஜராத்- டேங்க்ஸ்-ல் உள்ள ஒரு கோவிலுக்குப் புறப்பட்டனர். அந்தக் கோவிலிலிருந்து இரண்டு மணி நேரக் கார் பயணத்தில் அடையக்கூடிய ஆற்றங்கரையிலுள்ள ஒரு கூடாரத்தில் அசீமானந்தா வசித்துவந்தார். மோகன் பகவத், இந்திரேஷ்குமார் இருவரும் அசீமானந்தா வையும் அவரது கூட்டாளியான சுனில்ஜோஷியையும் சந்தித்தனர். ஜோஷி, பகவத்திடம் ‘இந்தியாவிலுள்ள பல முஸ்லீம் இலக்குகளைத் தாக்குவதற்கான திட்டங்களை’ விவரித்தார். அசீமானந்தாவின் கூற்றுப்படி அந்த இரு தலைவர்களும் அந்தத் திட்டங்களை ஏற்று அங்கீகரித்தார்கள். இந்திரேஷ் அசீமானந்தாவிடம் ‘நீங்கள் இந்தத் திட்டத்தில் சுனிலுடன் இணைந்து செயல்படுங்கள். நாங்கள் இதில் சம்பந்தப்பட மாட்டோம். ஆனால், நீங்கள் செய்தால் நாங்கள் உங்களுடனேயே இருப்பதாகக் கருதலாம்” என்றுகூறினார்.

அசீமானந்தா தொடர்ந்து கூறினார்: ‘சுவாமிஜீ! நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன்பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இக்குற்றத்தைச் செய்தோம்’ என்று மக்கள் கூறமாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு’ என்றார் மோகன் பகவத்.

புலனாய்வுக்குழுக்களின் குற்றக்குறிப்புக்கள் இந்திரேஷ் குமார் சதிகாரர்களுக்குத் தார்மீகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஆதரவு தெரிவித்தார் எனக் குறிப்பிட்டுள் ளன. ஆனால் மோகன்பகவத் போன்ற மூத்தத் தலைவர்கள் ஒருவரையும் தொடர்புபடுத் தவில்லை. சிபிஐயால் இந்திரேஷ் குமார் ஒருமுறை குறுக்கு விசாரணை செய்யப்பட்ட பின் இவ்வழக்கு தேசியப் புலனாய்வுக் குழுவால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அது அசீமானந்தா மற்றும் பிரக்யா சிங் ஆகியோரைத் தாண்டி இந்தச் சதித்திட்டம் பற்றி பரிசீலிக்கவில்லை. (இந்தச் சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை, யார்யாரெல்லாம் குண்டுகளை வைத்தார்களோ அவர்களையெல்லாம் இணைக்கும் சரடாக இருந்த சுனில் ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.)

இந்தத் தாக்குதல்களில் இந்திரேஷ் குமாருக்குப் பங்கு உண்டு என்று 2010ன் பிற்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது முதல் ஆர்.எஸ்.எஸ். அவரைச் சுற்றியிருந்த தொடர்புகளை மூடி மறைத்தது. மோகன் பகவத்-ஒரு சர்சங் சாலக் முன்னெப்போதும் மேற்கொள்ளாத நடவடிக்கையாக - குமார் மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கும் தர்ணாவில் பங்கேற்றார். பி.ஜே.பி.யின் ஆதரவும் அவருக்கு இருந்தது. பி.ஜே.பி.யின் தேசிய செய்தித் தொடர்பாளரான மீனாட்சி லேகி, குற்றச்சாட்டில் இந்திரேஷ் குமார் பெயர் இடம் பெற்றிருந்தது முதலே அவரது வழக்கறிஞராக இருந்தார். குற்றம் சாட்டப் பட்டிருந்தவர்களில் ஒருவரின் வழக்கறிஞர், ‘இந்திரேஷ்குமார் மிகவும் பதவி ஆசை கொண்டவர்’ என்றும், ‘அவர் சர்சங் சாலக் ஆவதற்காகக் காத்திருப்பவர்’ என்றும் என்னிடம் கூறினார்.

உள்துறை அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையை ஆய்வு செய்ய புலனாய்வுக்குழுக்களின் அதிகாரி ஒருவர் (தனது பெயர் தெரியக்கூடாது என்ற நிபந்தனையுடன்) எனக்கு அனுமதி தந்தார். அந்த அறிக்கை, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம், அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதால் அந்த அமைப்பை ஏன் தடைசெய்யக்கூடாது? என விளக்கம் கேட்குமாறு உள்துறை அமைச்சகத்தை  கேட்டுக்கொண்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரைகளின் அடிப் படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1948ல் காந்தியின் படுகொலைக்குப் பின்னும், 1975ல் அவசரநிலைக் காலத்திலும், 1992ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னும் தடை செய்யப்பட்டதுபோல் மீண்டும் தடை வந்துவிடுமோ என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு ஏற்பட்டது. எப்பொ ழுதெல்லாம் தீவிரவாத வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் தனது உறுப்பினர்கள் மீது சுமத் தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம்- நாதுராம் கோட்சே விஷயத்தில் மேற்கொண்ட தந்திரத்தைப்போல்-‘அவர் களெல்லாம் சங் அமைப்பிலிருந்து முன்பே விலகிவிட்டார்கள் அல்லது தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் அல்லது வன்முறையைத் தழுவியதால் தனிமைப்பட்டுவிட்டார்கள். எனவே, அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று கூறும் தந்திரத்தைக் கையாண்டு வந்தது.

அசீமானந்தா இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஒரு தீவிரப் பிரச்சனையானார். 1952ல் வன்வாசி கல்யாண் ஆசிரமம் துவங்கியதிலிருந்து அது சங் குடும்பத்தின் உட்கருவாக விளங்கி வந்துள்ளது. அசீமானந்தா தனது இளமைக்காலம் முழுவதையும் இவ்வமைப்புக்கு அர்ப்பணித்திருந்தார். அவர் தாக்குதல்களைத் திட்டமிட்ட நேரத்தில் ‘வன்வாசி கல்யாண் ஆசிரம’த்தின் மதச் செயல்பாடுகளுக்கான பிரிவில் அவருக்காகவே உரு வாக்கப்பட்டிருந்த தேசியத் தலைமைப்பொறுப்பில் பத்தாண்டுகளாக இருந்து வந்தார். தீவிரவாதத் தாக்குதல் திட்டங்கள் துவங்குவதற்கு முன்பேகூட வன்முறைக் கலவரங்கள்- ஒருங்கிணைந்த மதக்கலவரங்கள் ஆகிய அனைத்தும் அவரது நன்கறியப்பட்ட வழிமுறையின் பகுதிகளாக இருந்தன. 2005ன் மத்தியில் நிகழ்ந்த சதித்திட்டங்களில் அசீமானந்தாவின் ஈடுபாட்டை மோகன் பகவத்தும் இந்திரேஷ் குமாரும் மிகவும் நன்றாக அறிந்திருந்தனர். அசீமானந்தா அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படவில்லை. அந்த ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘ஆர்கனைசரி’ல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி அசீமானந்தா ஆர்.எஸ். எஸ்.-ன் மரியாதைக்குரிய தலைவரான எம்.எஸ்.கோல்வாக்கரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில்  ஒரு லட்சம் ரூபாய் நிதியளித்துக் கௌரவிக்கப்பட்டார். பி.ஜே.பி.யின் முக்கிய முன்னாள் தலைவரான முரளி மனோகர் ஜோஷி அந்த விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திரேஷ் குமார் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களின் மீது முழுவிசாரணைக்கு உட்பட்டிருந்தபோதும், அசீமானந்தாவுடன் இந்திரேஷ் குமாருக்கு இருந்த உறவை ஆர்.எஸ்.எஸ். மிக சௌகரியமாகக் கேள்விக்கிடமின்றி மறுத்தது.

புகழ்பெற்ற இந்து சீர்திருத்தவாதியான சுவாமி அக்னிவேஷ், கடந்த பத்தாண்டுகளாக சங் அமைப்பின் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டனம் செய்ததோடு என்னிடம், ‘ஆர்.எஸ். எஸ். அமைப்பினர், இந்து சமூகத்திலுள்ள மற்றவர்களையும், தங்களையும் தீவிர இந்துத்வா மூலம் துன்புறுத்துகிறார்கள். இது கண்டனத்திற்குரியது’ என்று கூறினார். இந்துத்வா பற்றி மூன்று புத்தகங்களை எழுதிய அரசியல் அறிவியலாளர் ஜோதிர்மயா சர்மா ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகளில் தன்னை  முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறது. சிவாஜியின் குருவான ராம்தாஸ் முன்வைத்த ‘தாக்கிவிட்டு ஓடிவிடும்’ கொரில்லா போர் முறை ஆர்.எஸ்.எஸ்.-ன் மையப்புள்ளியாக இருக்கிறது. ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் இந்து மதத்தின் பெயரில் மிகவும் தைரியமாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களை எதிர்க்கக்கூடிய வலுவான அரசியல் கட்சிகளோ, பலம்வாய்ந்த பத்திரிகைகளோ நம்நாட்டில் போதுமான அளவு இல்லை என்பதே’ என்கிறார்.

1948ல் நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவம் முதல் இத்தகைய கண்டனங்களுக்கிடையேயும் சங் அமைப்பு நீண்டதூரம் வந்துவிட்டது. ஆட்களைத் தயார் செய்வதும், இந்து ராஷ்ட்ரத்தை உருவாக்குவதுமான தங்கள் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் இணைப்பு அமைப்புக ளும்- குறிப்பாக பா.ஜ.க.வும் இப்போது இந்தியச் சமூகத் தின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு பெரிய சக்தியாகத் தன்னைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. அசீமானந்தாவும் கூடப் பல்வகைகளில் இம்முயற்சியின் தயாரிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களைப் பூதாகரமான அள வில் பகிர்ந்துகொள்கிறார். ‘உலகளாவிய இந்து ராஷ்ட்ரா தான் தனது நோக்கம்’ என்று அவர் என்னிடம் கூறினார்.

2

இந்துராஷ்ட்ரா மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிவசப்பட்ட நம்பிக்கையும், அதை
அடைவதற்கான வழியாக அவர் ஏற்றுக்கொண்ட வன்முறை வெறியும் அடிப்படையிலேயே இரண்டு வேறுபட்ட சிந்தனைப் போக்குகளிலிருந்து - இராமகிருஷ்ணா மிஷன் உபதேசித்த ‘உலக கர்மாயோகம்’ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்துத்வா ஆகியவற்றிலிருந்து தோன்றியதே ஆகும். இந்த இரண்டு போக்குகளாலும் அசீமானந்தா உருவாக்கப்பட்டார். இராமகிருஷ்ணா மிஷனின் துறவு வாழ்வை ஆர்.எஸ்.எஸ்.-ன் தீவிர மதவாத அரசியலோடு இணைத்தார். இது அவரை உள்ளூர் ஆர்.எஸ்.எஸ்.சாகாவில் பங்கேற்க -அதேநேரத்தில் தனது தந்தையின் மதிப்பீடுகளை மறுக்க- வைத்தது. இதுஅசீமானந்தாவின் கணக்குப்படி இந்துயிசத்தை ஒரு அரசியல் சக்தியாகத் தட்டியெழுப்பும் வழிமுறை ஆனது.

அசீமானந்தா 1951ன் பிற்பகுதியில் மேற்குவங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ‘நாபா குமார் சர்க்கார்’ ஆகப் பிறந்தார். சுதந்திரப்போராட்ட வீரரான விபூதி பூஷன் சர்க்காரின் ஏழு மகன்களில் இரண்டாவது மகன் இவர். ‘காந்திதான் எனது கடவுள்’ எனத் தனது குழந்தைகளிடம் கூறிய காந்தியவாதி இவர்களின் தந்தை. அவர்கள் வாழ்ந்த காமர்பூர் தான் 19ஆம் நூற்றாண்டின் ஞானியான இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊராகும். அவர் ‘கடவுளை அடைய பல நம்பிக்கைகள், பல பாதைகள்’ என உபதேசித்தவர். இராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்பெற்ற சீடரான சுவாமி விவேகானந்தர் 1877ல் இராமகிருஷ்ணா மிஷனை ‘சுயநலமற்ற தொண்டின் மூலம் கர்மயோகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக’ ஸ்தாபித்தார். இராமகிருஷ்ண பக்தர்களின் புனிதத்தலமாக விளங்கிய அந்த மிஷனின் உள்ளூர்க் கிளை அருகில் மாலை நேரங்களில் சாமியார்களின் பக்திப்பாடல்களைக் கேட்டு அசீமானந்தா வளர்ந்தார்.

விபூதிபூஷண் சர்க்காரும், அவரது மனைவி பிரமிளாவும் பல்வேறு வங்காள பக்திக் குடும்பங்களின் பெருமைக்குரியதாக விளங்கிய இராமகிருஷ்ணா மிஷனின் புனிதப் பணிகளில் தங்கள் மகன் சேரவேண்டும் என விரும்பினர். ஆனால், அசீமானந்தாவும், அவரது சகோதரர்களும் எம்.எஸ்.கோல்வாக்கரின் தலைமையில் வேகமாகப் பரவிவந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பால், சொந்தமாக உருவாக்கப்பட்ட சமூக சேவைகளால் ஈர்க்கப்பட்டனர். ‘நான் எனது இளமையில் அவர்களது கொள்கைகளின் பின் சென்று  அவர்களோடு வாழ்ந்து வந்தேன்’ என்ற அசீமானந்தா, தனது தந்தை ‘நீங்கள் ஒரு கொள்கையினால் ஈர்க்கப்பட்டு அதைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புவதை நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் காந்தியைக் கொலை செய்த அமைப்பு. எனவே, அதற்கு எதிராக உங்களை எச்சரிக்க வேண்டியது எனது கடமை’ என்று கூறியதையும் நினைவுகூர்ந்தார். ஆனால் அந்தப் பையன்கள் அதற்கு மாறாக உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களோடு நெருங்கிப் பழகி வளர்ந்தார்கள். அவர்களோடு தங்கள் (சர்க்கார்) வீட்டில் உணவு அருந்தினார்கள். அசீமானந்தா வின் மூத்த சகோதரர் ஆர்.எஸ்.எஸ்-.ல் முழுநேர ஊழியரானார். கமர்புகூரில் நான் அசீமானந்தாவையும், அவரது இளைய சகோதரர் சுசாந்த் சர்க்காரையும் சந்தித்தபோது, ‘எங்கள் தந்தை எங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறினார்கள். ஆனால், சங் அமைப்பின் உறுப்பினர்களைத் தனக்கு அறிமுகம் செய்யக்கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் எனவும் கூறினார்கள்.

அசீமானந்தாவின் 20ஆம் வயதுகளில் அவரது நம்பிக்கைக்குரிய சங் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களின் அறிவுரைகளால் அவரது எஞ்சிய நம்பிக்கைகளில் திடீரென ஒரு சாய்மானம் ஏற்பட்டது. இருவரில் முதலாம வர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிஜோய் அட்யா. இவர் அசீமானந்தாவின் தீவிர இந்துத்வா அடிப்படைவாத அரசியலுக்கு வழிகாட்டினார். பிஜோய் அட்யா தனது கொல்கத்தா அலுவலகத்தில் (இப்போது அவர் ஆர்.எஸ். எஸ்-ன் வங்கமொழி வார இதழான ‘ஸ்வஸ்திகா’வின் ஆசிரியராக உள்ளார்.) அசீமானந்தாவை 1976ல் முதன்முதலாகச் சந்தித்ததாக என்னிடம் கூறினார். அசீமானந்தா உள்ளூர்ப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டப்படிப்புப் படித்துவந்தார். தொடர்ந்து முது கலைப் பட்டமும் பெற்றார். “அவரது பெற்றோர் அசீமானந்தாவைத் தங்களது மற்ற பிள்ளைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் என்பதை உணர்ந்தே இருந்தார்கள்” என்று கூறும் அட்யா ‘‘மற்ற சகோதரர்களைப்போல் சராசரி வாழ்வை அவர் மேற்கொள்ளமாட்டார் என அவர்கள் அறிந்திருந்தனர்’’ என்கிறார். அசீமானந்தா தொடர்ந்து வழக்கம்போல இன்னும் இராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்றுவந்தார். ‘விவேகானந்தரின் பெரும்பாலான இலக்கியங்களை நான் அவர்கள் வீட்டிலிருந்து தான் படித்தேன்’என்றார் அடியா.

சர்க்கார் வீட்டு நூலகத்திலிருந்த புத்தகங்களில் ஒன்று ‘இந்து தேசத்திற்காக ஒரு துயிலெழுப்பும் குரல்’ என்ற விவேகானந்தரின் எழுத்து மற்றும் உரைகளின் தொகுப்பு. இந்துத்வா இயக்கத்தின் மிக முக்கியமானவரான ஏக்நாத் ரானடே தொகுத்திருந்தார். இவர் காந்தியின் படுகொலைக்குப் பின் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவராகச் செயல்பட்டவர். அவருடன் இருந்தவர்களால் ‘தலைமறைவு சர்சங் சாலக்’ என்ற புனைபெயரில் அழைக்கப்பட்டவர். இந்துக்களுக்கு விவேகானந்தர் விடுத்த அழைப்பான  “எழுமின்! விழிமின்!! இலக்கை அடையும்வரை நிறுத்தன்மின்!!” என்ற அழைப்புக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தது இந்தப் புத்தகம். ‘இராமகிருஷ்ணா மிஷன் அரசு நிதியைப் பெறுவதற்காக விவேகானந்தரை ‘மதச்சார்பற்றவர்’ எனத் தவறாக ஆக்கியது. ரானடேவின் மூலவாக்கியங்களை ஏற்று அதைத் திருத்திக்கொண்டது’ என அட்யா கூறினார். (ஆர்.எஸ். எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வாக்கரின் கட்டளையை ஏற்று கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட விவேகானந்தா நினைவுப்பாறையின் கட்டுமானப் பணிகளை ரானடே மேற்பார்வையிட்டார். ரூ.1.35 கோடி செலவில் 1970ல் இப்பணி நிறைவுபெற்றது) அட்யா இந்தப்புத்தகத்தைப் படிக்குமாறு அசீமானந்தாவை உற்சாகப்படுத்தினார்.

‘இராமகிருஷ்ணா மிஷன் கொள்கைப்படி எல்லா மதங்களும் சமமானவையே. அவர்கள் கிருஸ்துமஸ், ஈத் பண்டிகைகளையும் கொண்டாடினார்கள். நானும் அதையே பின்பற்றினேன். விவேகானந்தர் போதித்தது இதுவல்ல என்று அட்யா கூறியபோது அதை நான் நம்பவில்லை’ என்று அசீமானந்தா என்னிடம் கூறினார். பின் அவர் ரானடேயின் மூலவாக்கியத்தை எடுத்துப் படித்தார். அதிலிருந்த விவேகானந்த ரின் ஒற்றைவரி அசீமானந்தாவை ஆட்டிப்படைத்தது. “இந்து மதத்தை விட்டு ஒவ்வொரு மனிதனும் விலகிச் செல்லும்போது, ஒரு மனிதன் குறைகிறான் என்பதல்ல பொருள். ஒரு எதிரி அதிகமாகிறான் என்பதே”

‘நான் இதைப் படித்தவுடன் பேரதிர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து பல நாட்கள் நான் இதைப் பற்றியே சிந்தித்தேன். என்னிடம் உள்ள குறைந்த ஆற்றலைக்கொண்டு விவேகானந்தரின் போதனைகளை முழுவதும் உணரவோ, ஆராய்ச்சி செய்யவோ முடியாது என்பதை அறிந்தேன். ஆனால் அவர் அப்படிச் சொல்லியிருப்பதால் அதை என் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்” என்றார் அசீமானந்தா. அதற்குப்பின் அவர் இராமகிருஷ்ணா மிஷனுக்கு மீண்டும் செல்லவே இல்லை.

விவேகானந்தருடையது என ரானடே குறிப்பிட்ட வியாக்கியானம் அசீமானந்தாவின் உயிர்நாடியான அரசியல் சங்கல்பமாகியது. அதற்கான வடிவத்தை ஆர்.எஸ்.எஸ். ஊழியரும் துறவியுமான பசந்த்ராவ் பட் தந்தார். இவர் 1956ல் நாக்பூரில் இருந்து கல்கத்தா வந்து ரானடேவின் கீழ் பணியாற்றி வந்தார். பட் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை களுக்கு மூர்க்கத்தனமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆனால், மென்மையானவர். வசீகரத் தன்மை கொண்டவர். பசந்த்ராவ் பட் போன்றவர்களெல்லாம் வேலை செய்கிற ஓர் அமைப்பு மோசமானதாக இருக்கும் என்று நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது என்று தனது தந்தைகூட ஒருமுறை கூறியதாக அசீமானந்தா என்னிடம் சொன்னார். படிப்படியாக மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவராக உயர்ந்தார் பசந்த்ராவ்பட். ஆர்.எஸ்.எஸ்.-ன் தத்துவங்களை இராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் மேற்கொண்டுவரும் மதச் சேவைகளோடு இணைப்பதில் பசந்த்ராவ் பட் ஒரு முன்மாதிரியாக இருப்பதை அசீமானந்தா கண்டார்.

1975ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்து ஆர்.எஸ்.எஸ்.ஐத் தடை செய்தார். அதன் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அசீமானந்தா உட்பட ஆயிரக்கணக்கான சங் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பட் தனது குருநாதரைப் பின்பற்றித் தலைமறைவாக இருந்து வேலைசெய்ததோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை அளித்து வந்தார். நெருக்கடிநிலையின் முடிவில் தடை நீக்கப்பட்டபோது வங்கத்திலும், வட கிழக்குப் பகுதிகளிலும் தங்கள் வேலைகளைச் செய்ய ‘வன்வாசி கல்யாண் ஆஷ்ரம்’ என்ற ஒரு புதிய பிரிவை பட் துவக்கினார். அசீமானந்தா அவரோடு சேர்ந்து அந்த அமைப்புக்குள் முழுநேர ஊழியராக வேலை செய்யத் துவங்கினார். 1978ல் அவர்கள் நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் மேற்கு வங்கத்தின் புரூலியா அருகில் உள்ள பாக்முந்தி காடுகளில் தங்களது முதல் வன்வாசி கல்யாண் ஆசிரமத்தைத் துவக்கினார்கள்.

வடகிழக்குப் பகுதியை நோக்கிய அவர்களது நகர்வு பழங்குடியினரின் பகுதிகளுக்குள் தங்களது வன்வாசி கல்யாண் ஆசிரமத்தை நாடுதழுவிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகும். தற்போது சத்திஸ்கரிலுள்ள ஜாஷ்பூரில் அது துவக்கப்பட்டது முதல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலசாஹேப் தேஷ்பாண்டே 12 ஓரோன் பழங்குடிக் குழந்தைகளுடன் தனது வேலைகளை ஆரம்பித்தார். இந்த அமைப்பு கிறிஸ்தவ மிஷினரி களின் செல்வாக்கையும், பழங்குடியினரை மதமாற்றம் செய்வதையும் எதிர்த்துக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. வடகிழக்குப்பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களைப் போல் தேசத்தின் ஒருங்கிணைப்புக்கு கிறிஸ்தவம் ஆபத்தானது என சங் அமைப்பு நம்புகிறது. கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்டுகளின் வெற்றிகரமான மாதிரிகளிலிருந்து வன்வாசி கல்யாண் ஆஷ்ரமின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. விளையாட்டுக் குழுக்கள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், விடு திகள் மற்றும் மருத்துவச்சேவைகளை நடத்தினார்கள். இவை மதமாற்றத்திற்கான மையங்களாகவும் விளங்கின. இதன் நோக்கம் இந்துத்வாவை வளர்ச்சி பெறச் செய்து அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் கலாச்சார அரசியல் தலைமையிடமாக அதை மாற்றுவதே.

அசீமானந்தா அடுத்த 10ஆண்டுகள் புரூலியாவில் இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைகளைச் செய்தார். அத்துடன் அவரது பெற்றோர் விரும்பிய ஒருவகையான சந்நியாசப்பாதையைப் பின்பற்றவும் முடிவு செய்தார். 31ஆம் வயதில் சந்நியாசத்தை ஏற்கவும் தீர்மானித்தார். பசந்த்ராவ் பட் அவரிடம் பழங்குடியினரோடு இணைந்து வேலைசெய்வதும், சங் அமைப்புக்காகப் பாடுபடுவதும்தான் அவருக்குத் தரப்பட்ட பணி என்பதால், அவர் புனிதப்பணியில் சேரவேண்டியதில்லை எனக் கூறினார். ஆனால், அசீமானந்தா தனது மனதிற்குள் ஒரு முடிவு எடுத்து புரூலியாவிலிருந்த வங்காள குரு பரமானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்றார். ‘அவர்தான் எனது குரு என்று முடிவு செய்தேன். ஏனெனில் அவரும் இராமகிருஷ்ணர் போதனைகளைப் பின்பற்றியவர். அவர் முதன்மையாக தலித்துகளுடன் வேலைசெய்தார். ஆனால், இந்துயிசத்தைப் பிரச்சாரம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்’ என்றார் அசீமானந்தா. நாபா குமார் சர்க்காருக்கு பரமானந்தா சந்நியாசப் பிரமாணம் செய்துவைத்தார். ‘எல்லையற்ற ஆனந்தம்’ என்ற பொருள் தரும் ‘அசீமானந்தா’ என்ற பெயரையும் சூட்டினார்.

சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டபின் அசீமானந்தா பழங்குடியினரிடையே வேலை செய்வதற்காக புரூலியா திரும்பினார். அவரது வாழ்க்கை வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் உயர்மட்டத் தலைவர்களுடன்-  தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவராகவும், வன்வாசி கல்யாண் ஆஷ்ரமின் அகில இந்திய அமைப்புச் செயலாளராகவும் இருந்த கே.எஸ்.பாஸ்கர ராவ் உள்ளிட்டோருடன்- தொடர்ந்தது. கேரளாவில் இன்று எந்த ஒரு மாநிலத்தையும் விட அதிகமாக 4,000 சாகாக்கள் உள்ளன. அசீமானந்தாவின் செயல்பாடுகளை மனதில் பதித்துக்கொண்ட பாஸ்கரராவும் வ.க.ஆஷ்ரம் தலைவர் ஜெகடேவ் ராம் ஓரோனும் வ.க.ஆஷ்ரமின் மத விழிப்புணர்வு வேலைகளை விரிவுபடுத்த அவரை அந்தமானுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

காலனியாட்சிக் காலங்களிலிருந்து அந்தமான்-நிக்கோபாரில் இருந்த 500க்கும் மேற்பட்ட தீவுகளில் தாய்நாட்டிலிருந்த இந்தியர்கள்தான் குடியமர்ந்திருந்தார்கள். அவர்களுக்காக நகரியங்களைக் கட்ட சதிஸ்கரிலிருந்து பழங்குடியினர் கப்பல்களில் அனுப்பப் பட்டார்கள். ‘அந்தமானுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் கிறிஸ்தவ மிஷனரிகளால் கவரப்பட்டு இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் எதிரிகளாக வளர்ந்துவிடுவார்கள் என 1970களில் சங்பரிவாரங்கள் அஞ்சின’ என அசீமானந்தா என்னிடம் கூறினார். பாராளுமன்றத்தில் இந்தத் தீவுகளின் பிரதிநிதியாக மனோரஞ்சன் பக்தா என்ற ஒரு காங்கிரஸ்காரர்தான் 10ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்தார். எனவே  ஆர்.எஸ்.எஸ்.-ன் காலடியைப் பதிக்க அசீமானந்தா அங்கே செல்ல நேர்ந்த்து.

‘நான் முதன்முறையாக அந்தமானில் இறங்கியபோது அங்குவேலை செய்வதற்கு ஓர் இடமுமில்லை. இணைந்து வேலை செய்வதற்கும் யாருமில்லை’ எனச் சொன்னார் அசீமானந்தா. பழங்குடியினரின் தன்மையோடும், மதரீதியான ஆர்வத்தைப் பூசி மெழுகாமலும் பழங்குடியினரோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவர் அந்தமானிலும் பழங்குடியினரிடம் வன்முறை அச்சத்தை ஏற்படுத்திப் பலவந்தமாக அவர்களை இந்துயிசத்தைத் தழுவவைத்தார் என அதுபற்றிய விளக்கங்களுக்குச் செல்லாமல் என்னிடம் சொன்னார். இத்தகைய மாற்றங்களை அவர் ‘வீடு திரும்புதல்’ (கர் வாபஸி) என அழைத்தார். (பழங்குடியினர் எல்லாரும் அடிப்படையில் இந்துக்கள். அனிமிஸ்ட் அல்ல என்று சங் அமைப்பு எப்போதும் கருதுகிறது. எனவே ‘மீண்டும் மதமாற்றம்’ என்பதை வலியுறுத்துகிறது)

அசீமானந்தா மேலும் எளிமையான வழிகளைத் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். அவர் பழங்குடி மக்களிடையிலேயே புதிய மதத்தோடு முற்றிலும் இணைந்து போகாத அந்தச் சமுதாயத்தின் வயது முதிர்ந்த பெரியவர்களோடு வாழ்ந்தார். ‘அவர்கள் என்னிடம், ‘நாங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினாலும், எங்கள் திருவிழாக்களையும், நடனங்களையும், பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து உயிருடன் பாதுகாக்கவே விரும்புகிறோம்’ என்றார்கள். ‘இவற்றை நிறைவேற்றுவதுதான் எனது வேலை’ என்று அவர்களிடம் நான் சொன்னேன்’ என்று அசீமானந்தா கூறினார்.

இந்தச் சமுதாயத்தின் மூத்தவர்களின் நல்லெண்ணத்தைக் கவசமாகக் கொண்டு 6 இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களை கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரத்துக்குப் பஜனைகளைக் கற்றுக்கொள்ளவும் அனுமன் மீது நம்பிக்கை கொள்ளவைக்கவும் அனுப்பினார். பின்னர் அவர்களை ஜஸ்பூரிலுள்ள வ.க. ஆஷ்ரமத்தின் தலைமை இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர்கள் இந்துக்கலாச்சாரம் பற்றி மூன்று மாதங்கள் படித்தார்கள். அதன்பின் அசீமானந்தாவும், அந்தப் பெண்களும் ஒருவகையான வீதி நிகழ்ச்சிகளை நடத்தி அந்தமானில் உள்ள எல்லாக்கிராமங்களிலும் பஜனை களை நடத்தவும், அடுத்த ஒரு அணிக்காகக் குழந்தைகளைத் தேர்வுசெய்யவும் துவங்கினார்கள். தனியொரு இளம்பெண்கள் அணியுடன் மட்டும் தனது பிரச்சாரப் பயணம் நடைபெறுவது சரியல்ல என்று அசீமானந்தா கருதினார். ஏனெனில், இந்தபெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பிறகு அந்தப் பிரச்சாரம் தொடர குழந்தைகளுக்குப் பயிற்சி தரவேண்டும்; அவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் 8 வயதினராக இருக்க வேண்டும்.

அதன்பின் அசீமானந்தா இந்துச்சமுதாயத்தை முறைப்படுத்த வழிபாட்டிற்கான நிரந்தர இடங்களைக்கட்டவும், அவற்றை நிர்வகிக்க அலுவலர் அமைப்புக்களை உருவாக்கவும் செய்தார். போர்ட் பிளேயரில் ஆர்.தாமோதரன் என்பவர் உள்ளூர் கோவில்குழுவின் தலைவராகவும், விஷ்ணுபாத ரே என்ற வங்காளி செயலாளராகவும் ஆனார்கள்.

1990களின் துவக்கம்வரை அசீமானந்தா அந்தமானிலேயே முழுநேரமும் வாழ்ந்து வந்தார். அங்கே அவர்செய்த முயற்சிகள் 1999ல் அந்தப்பகுதியின் முதல்பி.ஜே.பி. பாராளுமன்ற உறுப்பினராக விஷ்ணுபாத ரேவை ஆக்கும் களப்பணியாக அமைந்தன. ‘அரசியலுக்கு வருவது நல்லது’ என நான் அவரிடம் சொன்னேன். எனவே அவர் டெல்லி சென்றார். வாஜ்பாயையும் சந்தித்தார். அரசியலும் நாங்கள் செய்யும் வேலைகளின் ஒரு பகுதிதான். 2007ல் போர்ட்பிளேயர் நகராட்சித் தலைவராக தாமோதரன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அசீமானந்தா கூறினார்.

அந்தமானை விட்டு வந்த பிறகும் அசீமானந்தா அடிக்கடி அங்கு வந்தார். இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து  உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஒப்படைக்கவும் வந்தார். ஆனால் அவரது நிவாரண உதவிகளை ‘யார் யாரெல்லாம் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொண்டார்களோ அவர்களுக்கு மட்டுமே தரவேண்டும்’ என்று மிகக் கடுமையாக வரையறுத்தார்.  2004ல் சுனாமி வந்தப் பிறகு நிகழ்ந்த ஒரு கதையை என்னிடம் சொன்னார். “ஒரு கிறிஸ்தவப் பெண் தனது குழந்தைக்குப் பால் வேண்டும் என்று வந்தாள். எனது ஆட்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். அந்தக் குழந்தைக்கு மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்கவில்லை கொஞ்சம் பாலாவது தராவிட்டால் அந்தக் குழந்தை இறந்துவிடும் என்று அந்தப்பெண் கெஞ்சினாள். அதன்பின் எங்கள் ஆட்கள் ‘சுவாமிஜியிடம் சென்று கேள்’ என்றனர். நான் அந்தப் பெண்ணீடம் ‘அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் சரி. உனக்கு இங்கே பால் கிடைக்காது’ என்று கூறினேன்”  இந்தக் கதையைத் திரும்பத்திரும்பக் கூறுவதை அசீமானந்தா பெரிதும் விரும்பினார். 
         
3

டேங்க்ஸ். மஹாராஷ்ட்ராவைக் கிழக்கிலும், மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட குஜராத்தின் தெற்கு வால்பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய, மிகவும் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம். இதன் 75% மக்கள், தோராயமாக 2 இலட்சம் பேர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள். இவர்களில் 93% பேர் ஆதிவாசிகள். பிற பழங்குடிஇனப் பகுதிகளைப் போலவே அதன் செல்வாதாரங்களையும், விருப்பங்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளாததால் ஏற்பட்ட சச்சரவுகளை இங்கும் காணமுடிந்தது. பிரிட்டிஷார் 1830ல் வளமான தேக்குமரங்கள் நிறைந்த அந்த டேங்க்ஸ் வனப்பகுதியைச் சுரண்டுவதற்கான உரிமையை பழங்குடி இன அரசர்களைத் தங்கள் ஆட்சிக்கு உட்படுத்திப்  பெற்றார்கள். 1842ல்அந்த வனப்பகுதி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டத்தைத் தன்னுள் கொண்டிருந்தது. ஆதிவாசிகளிடையே செல்வாக்குப்பெற்று, அந்த நிலங்கள் தங்களுக்குரியது என்ற உணர்வை ஆதிவாசிகளிடம் ஏற்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, கிறிஸ்தவ மிஷினரிகளைத் தவிர மற்ற சமூகநலப் பணியாளர்களை யும், அரசியல் செயல்பாட்டாளர்களையும் தடை செய்தது. 1905ல் முதல் மிஷினரிப் பள்ளி ஆவாவில் துவக்கப்பட்டது. அப்போதுமுதல் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்டுகள் மிகுந்த எண்ணிக்கையில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்கள். அசீமானந்தாவின் கூற்றுப்படி டேங்க்ஸை அவர்கள் ‘மேற்கு நாகாலாந்து’ ( பச்சிம் கா நாகலாந்த்) என்றழைத்தனர். ‘வடகிழக்கில் உள்ளதுபோலவே இந்த அச்சுறுத்தல் மிகவும் பெரியது’ என்றார் அசீமானந்தா.

வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் சார்பில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது 1996ல் முதன்முதலாக அசீமானந்தா டேங்க்ஸ்க்கு வந்தார். அந்த அமைப்பின் தலைவர்கள் இந்தியாவிலுள்ள பழங்குடியினர் பகுதிகள் ஒவ்வொன்றிலும் அவரது மதமாற்றப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்காக அவர்கள் ‘நம்பிக்கையை மீட்டெடுக்கும்’ அமைப்பாக ‘ஸ்ரத்தா ஜாக்ரண் விபாக்’ ஐ நிறுவினர். அசீமானந்தாவை அதன் தலைவர் ஆக்கினர். ஆனால், அசீமானந்தாவோ தனிப்பட்ட ஒருபகுதியில் வேலை செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தார். டேங்க்ஸ்சில் ஒரு வலிமையான தூண்டுதலை உணர்ந்தார். ‘டேங்க்ஸ்ல் பழங்குடியினரோடு தங்கியிருப்பது, அவர்களோடு வேலைசெய்வது என்ற ஒருவிதமான பணியைச் சிறப்பாகச் செய்தேன்’ என்றார் அவர். ‘ஒருவர் தான் எதில் திருப்தி அடைகிறாரோ அந்த வேலையையே எப்போதும் செய்து வரவேண்டும். வடகிழக்குப் பகுதிகளைப்போல அல்லாமல் டேங்க்ஸ்வாசிகளை கிறிஸ்தவத்திலிருந்து மீட்பதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன’ என்று அசீமானந்தா என்னிடம் கூறினார்.

அசீமானந்தா சங்அமைப்புக்கு முதலாவதாகவும், முதன்மையாகவும் விசுவாசம் மிக்கவராக இருந்த போதிலும், குஜராத்தின் வனப்பகுதியிலிருந்து கொண்டு அவருக்கான தேசியக் கட்டளைகளை நிறைவேற்ற முடியாது என அவரது மேலதிகாரிகள் கவலைப் பட்டனர். 1998 வரை டேங்க்ஸ் பகுதியில் தனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தத் தன்னை அனுமதிக்க வேண்டும் என அவர்களை ஒப்புக்கொள்ளவைக்க முடியவில்லை. ‘எவாஞ்சலிஸ்ட்டுகளைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வன்முறையில் பலவந்தப் படுத்துதல்’ ஆகியவற்றின் இணைப்பாக சங் ஊழியர்களை மின்சாரம்போல ஊடுருவ வைத்து, அசீமானந்தா தனது மேலதிகாரிகளின் பதற்றம் தேவையற்றது என நிரூபித்தார். வ.க.ஆஷ்ரமின் அமைப்புச்செயலாளரும், கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவருமான பாஸ்கரராவ் அசீமானந்தாவின் இந்தச் செயல் ‘தேசம் முழுமைக்குமான ஒரு முன்னுதாரணம்’ என வர்ணித்ததை அசீமானந்தா நினைவுகூர்ந்தார்.

டேங்க்ஸில் ஆதிவாசி சமூகத்தினரிடையே மத வேறுபாடுகள் ஏற்கனவே பரஸ்பர நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருந்த 1998ல், அசீமானந்தா வ.க.ஆஷ்ரமத்தில் தங்கியிருந்தார். 1970களின் முன் அந்தப்பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றம் குறைவாகவே இருந்தது. ஆனால், 1991முதல் அங்கு கிறிஸ்தவர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகைக் கணக்கின்படி தோராயமாக 9% என்ற அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. பெற்றோர் இறந்துவிடும்போது எந்த வகையில் இறுதிச்சடங்குகளை மேற்கொள்வது என்பது பற்றி ஒரு சகோதரர் இன்னொரு சகோதரரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அசீமானந்தா அங்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் அந்த மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீது 20 தாக்குதல்கள் நடைபெற்றன. 1998ல் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்தன.

ஒவ்வொரு ஆண்டும் 24 பழங்குடியினச் சிறுவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் ஆகியவற்றைத் தந்து வ.க. ஆஷ்ரமத்தில் தங்கவைத்தனர். அங்கிருந்து அவர்கள் உள்ளூர் அரசுப்பள்ளிகளுக்குச் சென்றார்கள். ஒரு நாள் அந்த ஆஷ்ரமத்தில் ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவக்குகள் தங்கள்  சாகாக்களின் துவக்கத்தில் பாடும் பாரதமாதா பாடல் முதல் காந்தி, கோல்வாக்கர் முதலான புகழ் பெற்ற இந்தியர்களைப் போற்றிப்பாடும் -ஏக்தா மந்த்ரா- ஆகியவற்றை  அசீமானந்தா அந்த மாணவர்களுக்குத் தலைமையேற்றுப் பாடவைத்தார். அந்த ஆஷ்ரமத்தின் மாணவர்களில் ஒருவரான பூல்சந்த் பாப்லோவை அசீமானந்தா சந்தித்தார். டேங்க்ஸில்   தனது வேலை களை வெற்றிகரமாகச் செய்வதற்கு ஒருவகையில் வழிகாட்டுபவனாகவும், முகாம் உதவியாளனாகவும் பாப்லோ உதவியதாக அசீமானந்தா கூறினார்.

‘சென்ற ஆண்டு நான் வாகாய் ஆஷ்ரமத்திற்குச் சென்ற போது பாப்லோ தனது கிராமத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்தான். குண்டான, உருண்டையான புன்னகை தவழும் முகம் கொண்ட அவனது கண்களில் உற்சாகம் மின்னியது. இத்தகையவனை அந்தப்புதிய இடத்தில் எனக்கு வழிகாட்டக்கூடியவன் என நம்பிக்கை கொண்டேன். பாப்லோ என்னிடம் சொன்ன மிகவும் கவலைப்படக்கூடிய கதைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தன’-அசீமானந்தா

அசீமானந்தாவின் வழிமுறைகள் அந்தமானில் அவர் பயன்படுத்தியவைகளை ஒத்திருந்தன. ‘எங்கெல்லாம் தனக்கு வரவேற்பு கிடைக்குமோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்தினரை அடைய வழிகாட்ட வும், அந்த வனப்பகுதி முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தக்கூடிய உதவியா ளர்களை நியமித்துக் கொள்ளவும் பாப்லோவை நம்பினார்.  அதன்பின் அவரும், அவரது தொண்டர்களும் தொலைதூரப் பழங்குடியினர் கிராமங்களுக்கு விரைந்தனர். அங்கே ஒரு வாரம் வரை முகாமிட்டனர். ஆதிவாசிக ளோடு அவர்களது குடிசைகளிலேயே உண்டு, உறங்கினர். அசீமானந்தா இந்துமதப் போதனைகளைச் செய்தார். இனிப்புக்களையும், அனுமன் லாக்கெட்டுக்களையும், அனுமன் கதைப்பிரசுரங்களையும் குழந்தைகளுக்குக் கொடுத்தார். பஜனைப் பாடல்களைப் பாடினார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறக்கூடாது எனக் கிராம மக்களிடம் கூறினார். ஒவ்வொரு கிராமத்திலும் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியலை அவரும் அவரது உதவியாளர்களும் தயாரித்தனர். அவர் அடுத்த குடியிருப்புக்குச் சென்ற பிறகு அவரது உதவியா ளர்கள் ஒவ்வொரு ஆதிவாசியின் குடிசையிலும் சங் அமைப்பின் காவிக்கொடி பறப்பதை உத்தரவாதப்படுத்தினர்.

பயந்துகிடந்த மக்களிடையே இத்தகைய மென்மையான அணுகுமுறைகளை அசீமானந்தா கடைபிடித்தார். வங்காளத்தின் எல்லைகளிலிருந்த மாவட்டங்களின் உண்மையான வாழ்நிலைகளை அவர் பேசினார். ‘அங்கே அடுத்த பக்கங்களிலிருந்து முஸ்லிம்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால் இந்து மதத்தினர் அனைவரும் ஓடிப்போய் விட்டார்கள்’ என்று பாப்லோ கூறினான். அசீமானந்தா அச்சிட்டு அந்த மாவட்டம் முழுவதிலும் விநியோகித்த ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களில் கிறிஸ்தவர்களைக் கடுமையாகச் சாடினார். 1998 ஜூனில் ‘ஒரு மாபெரும் பேரணி நடைபெறும்’ என்ற அறிவிப்பைச் செய்த வாகனத்தின் முகப்பில் ‘இந்துக்களே வாருங்கள். திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கை இடம் பெற்றிருந்தது. கடுமையான வார்த்தைகளின் தாக்குதல்கள் கீழ்க் கண்டவாறு இருந்தன:  “டேங்க்ஸ் மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சனையே கிறிஸ்தவப் பாதிரியார்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் தான். சேவை என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்தச் சாத்தான்கள் ஆதிவாசிகளைச் சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றுதல்களுமே அவர்களது மதம்.’ அசீமானந்தா மிக விரைவில் இந்தத் திட்டுதல்களை வன்முறைத் தாக்குதல்களாக மாற்றினார்.

1998 கிறிஸ்துமஸ் நாள் மாலையில் ஆவாவில் இருந்த ‘தீப் தர்ஷன் உயர்நிலைப் பள்ளி விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி), பஜ்ரங் தள், வ.க.ஆஷ்ரமத்தின் உறுப்பான  இந்து ஜாக்ரண் மஞ்ச் உறுப் பினர்களால் தாக்கப்பட்டது. அந்தப்பள்ளியை நடத்தி வந்த கார்மல் கன்யாஸ்திரிகளில் ஒருவரான சகோதரி லில்லி, ‘நூற்றுக்கு மேற்பட்ட, கைகளில் கற்களை ஏந்தியவர்கள் இந்தக் கொடூரமான வன்முறையில் பங்குபெற்றார்கள். ஜன்னல்களை உடைத்து, பழங்குடியின மாணவர்களின் விடுதிக்கூரைகளை அழித்துக் கொடூரமான வன்முறைத் தாக்குதல் களை நிகழ்த்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்னும் அந்தக் காட்சிகள் கண்களில் நிழலாடுகின்றன. அந்த நாளன்று நான் மிகவும் பயந்து போயிருந்தேன்’ என்று நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவரைப் பார்த்தபோது கூறினார்.

30 கி.மீ. தள்ளி சுபீர் கிராமத்தில் இன்னொரு பள்ளியும் தாக்கப்பட்டது. அங்கிருந்த தானியக் கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டுத் தீயால் எரிக்கப்பட்டது. காத்வி கிராமத் தில் 200க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பல் உள்ளூர் தேவாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கித் தீயிட்டுக் கொளுத்தியது. அடுத்தநாள் வாகி கிராமத்தில் இருந்த சர்ச் நொறுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு வனத்துறையைச் சார்ந்த ஒரு ஜீப் பயன்படுத்தப்பட்டது. அதற்கடுத்த நாள் டேங்க்ஸில் இருந்த ஆறு கிராம சர்ச்சுகள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவப் பழங்குடியினரின் வீடுகளில் கற்கள் வீசப்பட்டன. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் வர்த்தகம் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவப் பழங்குடியினர் தாக்கப்பட்டார்கள்.

இத்தகைய அழித்தொழிப்பு வேலைகள் 10 நாட்கள் நடைபெற்றன. 1998 டிசம்பர் மத்தியிலிருந்து 1999 ஜனவரி மத்திவரை 40,000 கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்கு மாற்றப்பட்டார்கள். ‘நாங்கள் 30 சர்ச்சுகளை இடித்துக் கோவில்களைக் கட்டினோம். அங்கு ஒருவகையான அமைதியின்மை நிலவியது’ என அசீமானந்தா பெருமையுடன் அந்த நிகழ்ச்சிகளுக்கு உரிமை கொண்டாடினார்!

அசீமானந்தாவின் திட்டமிட்ட இந்த வன்முறை வெறியாட்டம் கிறிஸ்துமஸ் நாளன்று காலையில் ஆவாவில் ஒன்றும், அருகிலிருந்த இரண்டு தாலூகாக்களிலும் இந்து ஜாக்ரண் மஞ்ச் நடத்திய ஊர்வலங்களோடு துவங்கியது. டேங்க்ஸ் பகுதி பா.ஜ.க.வின் அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த தசரத் பவார் கூற்றுப்படி, திரிசூலங்களையும் குண்டாந்தடிகளையும் ஏந்திய சங் அமைப்பின் 3500 உறுப்பினர்கள் ஆவா ஊர்வலத்தில் பங்கேற்றனர். அசீமானந்தாவின் கிறிஸ்தவத்திற்கு எதிரான  ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டு எதிரொலித்தன. நகரின் முக்கிய வீதிமுழுவதும் காவிப்பதாகைகள் தொங்கின. உள்ளூர்ப் பாதிரியார்கள் மாவட்ட ஆட்சியர் பரத் ஜோஷியைத் தலையிடுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ நிலைமையைக் கட்டுக்குக் கொண்டுவந்து அமைதி ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஆவா ஊர்வலத்தை மேடையில் தோன்றி வாழ்த்திப் பேசினார்.

அந்த ஊர்வலங்களைத் தொடர்ந்து நடைபெற்ற ஏராளமான கொள்ளைச் சம்பவங்கள் அசீமானந்தாவின் அமைப்புத்திறமைக்குப் பெரும்பங்களிக்கும் சான்றுகளாக விளங்கின. அவர் அங்கு வருவதற்கு முன் அந்த மாவட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே சங் அமைப்பின் ஊழியர்களாக இருந்தனர். அசீமானந்தா இந்துத்வா இயக்கத்திற்குச் சக்தி ஊட்டியதோடு ஆயிரக்கணக்கானவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பெரும் சக்தியாகவும் மாற்றினார். ‘உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிற இந்துத்வா உணர்வைத் தட்டி யெழுப்பக்கூடிய சக்திமிக்கவை அவரது சொற்கள்’ என்று பவார் கூறுகிறார்.

அசீமானந்தா என்னிடம் கூறினார், ‘மதமாற்றத்தைத் தடுப்பது ஒரு எளிதான வேலை. மதவெறியைப் பயன் படுத்துங்கள். இந்துக்களை வெறியர்களாக்குங்கள். மீதி வேலைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!’

இந்த நோக்கத்திற்காக முற்றிலும் பழங்குடி மக்களின் அமைப்புபோலத் தோற்றம் அளிக்கக்கூடிய ‘ஹிந்து ஜாக் ரண் மஞ்ச்’ (ஹெச்.ஜே.எம்) என்ற அமைப்பைத் துவக்கியதை, நிறைவேற்றி முடித்தவைகளில் முக்கியமான ஒன்றாக அசீமானந்தா உரிமை கொண்டாடினார். ‘இந்த நடவடிக்கைகளில் வன்முறைச் செயல்கள் உள்ளடங்கியிருப்பதால் சங் அமைப்பின் எல்லா  வேலைகளையும் வ.க.ஆஷ்ரம் மூலம் செய்யமுடியாது என்பதற்காகவே நாங்கள் பழங்குடியினரைக் கொண்டு ஹெச் ஜே.எம். ஐ உருவாக்க வேண்டியிருந்தது. ஹெச்.ஜே.எம்.மின் தலைவராக வெளிப்படையாகத் தெரியக்கூடியவரான இந்த ஜானுபாய்க்கு ஒன்றும் தெரியாது. என்ன செயல்திட்டம் எடுத்துக்கொள்ளப்படுகிறது? துண்டுப்பிரசுரங்களில் எதை அச்சிடுவது? என்ற எல்லா முடிவுகளும் எங்களால் தான் எடுக்கப்படுகின்றன. நாங்கள் அவரை வெறும் ஒரு முக அடையாளமாகத்தான் வைத்திருக்கிறோம். ஏனெனில் அவரொரு ஆதிவாசி. சங் அமைப்பின் எல்லா வேலைகளையும் செய்திடப் பழங்குடியினர் பயன்படுத்தப்படுகிறார்கள்’.

அசீமானந்தாவின் ‘வீடு திரும்புதல் நிகழ்ச்சி’ மனங்களைத்  தூண்டுவதாலோ அல்லது அச்சுறுத்துதல்கள் மூலமாகவோ தொடர்ந்து பிரபலமாகி வந்தது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எப்போதெல்லாம் 50 முதல் 100 செயல்திறன்மிக்கவர்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டதோ அப்போதெல்லாம் அவர்களை அவரது உதவியாளர்கள் ஒருங்கிணைத்துத் திறந்த வாகனங்களிலும், திறந்த ஜீப்களிலும் ஏற்றி சூரத்திலுள்ள உனாய் கோவிலுக்கு அழைத்துச் சென்று கோவிலை அடுத்துள்ள வெந்நீர் ஊற்றுக்களில் குளிக்கவைத்து, திலகபூஜை நடத்திப் பழங்குடியினரை ‘இந்துக்கள்’ என்று பிரகடனம் செய்தார்கள். அவர்கள் மீண்டும் வண்டிகளில் ஏற்றப்பட்டு அனுமன் படமும், அனுமன் கதைப்பிரசுரங்களும் கைகளில் தரப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். திரும்பும் வழியில் வண்டிகளிலிருந்து பஜனைகள் அலறின. இவ்வாறு அந்த முழு நிகழ்ச்சியும் அதிசயத் தோற்றம் அளித்தது. இந்தக் களியாட்டங்கள் வாஹாய் ஆஷ்ரமத்தில் நிறைவுபெற்றன. அங்கு அசீமானந்தா விருந்து உபச்சாரம் செய்து மதம் மாறியவர்களுக்கு அனுமன் லாக்கெட்டுகளைக் கொடுத்தார்.

பழங்குடியினர் மீதான அசீமானந்தாவின் அனுசரணை அவர்கள் ஏசுகிறிஸ்துவை வழிபடுகிறார்களா, அல்லது ராமனை வழிபடுகிறார்களா என்பதையும் தாண்டி அரிதாக விரிவடைந்தது. ‘தி வீக்’ இதழுக்கு அசீமானந்தா அளித்தப் பேட்டியில் ‘வறுமையை அகற்றுவதிலோ, வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதிலோ நாங்கள் அக்கறை செலுத்துவதில்லை. நாங்கள் பழங்குடியினரின் மத உணர்வுகளை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம்’ என்று தெரிவித்தார். இந்த அணுகுமுறை உள்ளூர் மக்கள் சமுதாயத்தில் பங்கேற்க அசீமானந்தாவுக்குப் பலம் வாய்ந்த அழைப்புக்கு வித்திட்டது. “சுவாமிஜியைப் போல மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்த எந்த ஒரு மனிதனையும் நான் பார்த்ததில்லை” என்று பாப்லோ கூறினான். “மிக உயர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், மிகவும் பிற்பட்ட சமுதாய மக்களிடம் சென்று, அவர்களுடன் தங்கி, உண்டு அவர்களோடு கலந்துவிடுகிறார். இவ்வாறு அவர்களைத் தன்சொந்த மக்களாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மக்களும் நமக்காகப் பாடுபடும் ஒருவரை நாம்பெற்றுவிட்டோம் என்று நம்பிக்கை கொள்கிறார்கள்.”

டேங்க்ஸ் இந்தியாவின் மிகவும் அழகான இடங்களில் ஒன்று என அசீமானந்தா என்னிடம் விவரித்தார். 1990ன் பிற்பகுதியில் அங்கு பணியாற்றிய எனது பத்திரிகை நண்பர்கள் பலரும் அதை ஒத்துக்கொண்டார்கள். 2013 ஜூனில் நான் சென்றபோது அந்த வனப்பகுதி வெறுமையாகவும் காய்ந்தும் கிடந்தது. (நீங்கள் பருவகாலத்தில் அந்தப் பகுதிக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று அம்பாலா சிறையில் அசீமானந்தா என்னிடம் கூறினார்.) மலை களைக் குடைந்து உயர்ந்த தரத்தில் பல மைல்கள் நீளம் அமைக்கப்பட்டிருந்த சாலைகள் அந்தப்பகுதியில் என் முன் நீண்டன. அவை அசீமானந்தா வின் மிகமுக்கிய அரசியல் பாதுகாவலரான நரேந்திர மோடியின் அரசால் போடப்பட்டவை!

1998ன் துவக்கத்தில் அசீமானந்தா டேங்க்ஸ்க்குச் சென்ற காலகட்டத்தில் பி.ஜே.பி. அரசியல்வாதியான கேசுபாய் படேல் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மிக நீண்டகாலமாக இம்மாநிலம் காங்கிரஸின் பலம்வாய்ந்த கோட்டையாக- 1995ல் கேசுபாய் படேலும் ஏழுமாதங்கள் அதற்குத் தலைமை ஏற்றிருந்தபோதிலும் - விளங்கியது. 1998 மார்ச்சில் வாஜ்பாய் பிரதமரான போது - அவரது அரசு கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்த போதிலும் - ஆர்.எஸ்.எஸ். பிரிவினரிடையே இந்தியாவுக்கான தங்கள் பார்வை நிதர்சனமாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அலைகள் எழுந்தன.

அவர்கள் விரும்பிய மாறுதல்களுக்கு ஒரு சிறிய அளவில் கட்டியம் கூறுவனவாக டேங்க்ஸில் கிறிஸ்தவக் கலவரங்கள் தோன்றின. அசீமானந்தாவின் வெற்றியின் முன்னோட்டமாக சோனியா காந்தி வருகை அமைந்தது. ஆவா பகுதியில் பயணம் செய்த அவர் “நெஞ்சை வெடிக்கச் செய்யும் கொடூர வன்முறை” என்று அங்கு நிகழ்ந்தவற்றைக் கண்டனம் செய்தார். மற்ற அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் அதையே வழிமொழிந்தனர். பத்திரிகைகளில் வெளிவந்த அசீமானந்தா பற்றிய செய்திகள் சங்அமைப்புக்குள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவரது மதிப்பை உயர்த்தின. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் கோல்வாக்கர் பெயரில் அமைந்த ‘ஸ்ரீகுருஜீ’ என்ற இன்னொரு கௌரவத்தை அசீமானந்தாவுக்கு அளித்தது.

அசீமானந்தாவின் வன்முறை வெறியாட்டங்களால் டெல்லியில் கலவரம் மூண்டபோது அதை மட்டுப்படுத்துவதற்காக அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார். ‘எனது மதமாற்றக் கதைகள் தேசிய அளவில் செய்திகளான போதும், சோனியாகாந்தி பறந்து வந்து எனக்கு எதிராகப் பேசியபோதும் பத்திரிகைகளில் ஏராளமான விவாதங்கள் இடம் பெற்றன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி கேசுபாய் படேலிடம் என்னை அடக்கிவைக்குமாறு கூறினார். எனவே, அதன்பிறகு நாங்கள் வேலைசெய்வதைத் தடுத்ததோடு, எங்கள் ஆட்களைக் கைதும் செய்தார்’ என்ற அசீமானந்தா ‘ஆனால், மோடி ஏற்கனவே தனது கத்திகளை கூர்தீட்டியவாறு பதவிக்காகக் காத்துக் கொண் டிருந்தார்’ என்றும் தெரிவித்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற முக்கியமான மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூட்டத்தில் மோடி தன்னை அணுகி, “உங்களை கேசுபாய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். சுவாமிஜி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை. நீங்கள் உண்மையான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. நான் வந்தபின் நானே உங்கள் வேலைகளைச் செய்வேன். அதுவரை ஓய்வில் இருங்கள்’ என்று தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா தெரிவித்தார். (இது பற்றி மோடியிடம் தொடர்புகொள்ள அவரது அலுவலகம் மூலம் திரும்பத்திரும்ப மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.)

2001 அக்டோபரில் மோடி முதலமைச்சர் ஆனார். அடுத்துவந்த பிப்ரவரி கடைசியில் முஸ்லீம்களுக்கு எதி ரான கலவரங்களில் 1200 குஜராத்திகள் கொல்லப்பட்ட கலவரங்கள் துவங்கியபோது,டேங்க்ஸின் வடக்கில் பஞ்ச்மால் மாவட்டத்தில் அசீமானந்தா தனது சொந்தத் தாக்குதல் திட்டங்களை அரங்கேற்றினார். ‘அந்தப் பகுதியிலிருந்து முஸ்லீம்களைத் துடைத்தெறியும் வேலைகளை நான் மேற்பார்வையிட்டேன்’ என்று உரிமை கொண்டாடினார்.

அந்த ஆண்டின் இறுதியில் மோடி அசீமானந்தாவின் செல்வாக்கை ஒருங்கிணைக்க டேங்க்ஸ்  வந்து உதவினார். 2002 அக்டோபரில் அசீமானந்தா, புராணத்தில் கூறப்பட்ட ராமரின் 14 ஆண்டு வனவாசத்தின்போது அவருக்கு உதவியதாக நம்பப்படும் பழங்குடியினப் பெண்களுக்கு அர்ப்பணம் செய்ய புனித‘சபரிதாம்’ கட்டத் துவங்கினார். அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆஷ்ரமத்தையும், கோவிலையும், அதன் மையப் புள்ளியாக ராமர் சிலையையும் நிர்மாணிக்க நிதிதிரட்டுவதற்காக பிரபல கதாகாலட்சேபகரான மொராரி பாபுவின் ராம் கதா (இராமாயணத்தை விவரிக்கும்) என்ற 8 நாட்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சி குறைந்த பட்சம் 10,000 பேரை ஈர்த்தது. முஸ்லீம்கள் மீதான கலவரங்களைத் தொடர்ந்து ஜூலையில் மோடி அரசு கலைக்கப்பட்டது. தனது முதல்வர் பதவியை மீண்டும் பெறுவதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில் மோடி இந்த நிகழ்ச்சிக்கும் வந்து மேடையில் தோன்றி அதை முன்னெடுத்துச் செல்ல உதவினார்.

அந்த ஆண்டில் மோடியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக ‘குஜராத் மதமாற்ற மசோதா’ இருந்தது. அந்த மசோதா ‘எல்லா மதமாற்றங்களும் மாவட்ட நீதிபதியால் ஏற்பளிக்கப்பட வேண்டும்’ என்ற முன்மொழிவைக் கொண்டிருந்தது. அசீமானந்தாவின் நிதிதிரட்டும் நிகழ்ச் சிக்கு 4 மாதங்களின் பின் மோடியின் நம்பிக்கைக்குரிய வரான அமீத் ஷா அந்த மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்; மசோதா நிறைவேறியது. 2003 ஏப்ர லில் சட்டமாகியது. உடனடியாக அசீமானந்தா மொராரி பாபு, மோடி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் டேங்க்ஸில் மிகப்பிரமாண்டமான ‘வீடு திரும்புதல்’ (கர் வாபஸி) நிகழ்வுக்குத் திட்டமிடத் துவங்கினார்.

ராம் கதாவின் முடிவில் சபரிதாமில் ஒரு புதிய கும்பமேளா நடத்தவேண்டும் என மொராரிபாபு முன்மொழிந்தார். தயாரிப்புவேலைகளுக்கு 4 ஆண்டுகள் தேவைப் பட்ட அந்த மேளா மதமாற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாகவும், இந்துத்வாவைப் போற்றும் கொண்டாட்டங்களாகவும் உருவாகிவந்தது. அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து தாமே அந்த மேளாவைப் பொறுப்பேற்று நடத்த ஒப்புக்கொண்டார்.

2006 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பத்தாயிரக்கணக்கான இந்தியர்கள் அசீமானந்தாவின் சபரிதாமில் உள்ள ஆசிரமத்திற்கு 6 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதி கிராமமான சுபீர்-க்கு சபரி கும்பமேளாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திரண்டனர். முந்தைய நான்கு கும்பமேளாக்களில் நடைபெற்றதுபோல- பழங் குடியினர் தாங்கள் இந்து கட்டமைப்புக்குத் திரும்பி வந்ததைக் குறிக்கும் வகையில் உள்ளூரில் பாயும் ஆற்றில் முழுகிப் புனிதம் பெறும் சடங்கின் ஒரு நிகழ்வு சபரி கும்பமேளாவில் மையப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய இந்தியா முழுவதிலும் பழங்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் டிரக்குகளில் ஏற்றிக் கொண்டுவரப் பட்டார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நான் அனுப்பிய விண்ணப்பத்திற்கு வந்த பதிலில் ‘குஜராத் அரசு  கூட்டத்தினர் ஆற்றில் முழுகி எழப் போதுமான அளவு ஆற்றுக்குத் தண்ணீரைத் திருப்பி விடக் குறைந்த பட்சம் ரூ.53 இலட்சம் செலவிட்டது.

சபரி கும்பமேளா இந்துமதத் தலைவர்களிடையேயான ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. மூன்று நாட்களும் மேடையில் பிரபலமான மதத்தலைவர்கள் மொராரி பாபு, ஆஷ்ரம் பாபு, ஜெயேந்திர சரஸ்வதி, சாத்வி ரிதாம்பரா ஆகியோரும், ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவாரின் உயர்மட்டத் தலைவர்கள், இந்திரேஷ்குமார், தீவிரத் தன்மை கொண்ட விஷ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் பிரவிண் தொகாடியா, அசோக் சிங்கால், மூத்த பி.ஜே.பி.அரசியல்வாதிகளான ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் வீற்றிருந்தார்கள். நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும்  நிகழ்ச்சிகளை நிர்வகித்தார்கள். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டதைப்போல ‘சபரி கும்பமேளா சாதுக்கள், சங், சர்க்கார் (அரசு) ஆகியவற்றின் சங்கமமாக விளங்கியது.’

விழாவின் துவக்கநாளில் மோடி பார்வையாளர்களிடம், ‘பழங்குடியினரை இராமரிடமிருந்து பிரிக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும்’ என் றார். மேடையின் பின்னணியில் பத்துத்தலை இராவணனை நோக்கி அம்புவிடும் இந்துக் கடவுளின் பிரம் மாண்ட வண்ண ஓவியம் அமைந்திருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் மிகவும் கடுமையான போர்க்குரலில் ‘முஸ்லீம் மற்றும் கிறிஸ் தவ அடிப்படைவாதிகளின் கபட யுத்தததிற்கு எதிராக நாங்கள் எழுகிறோம். நம் அதிகாரத்தின்கீழ் உள்ள எல்லாவற்றையும் கொண்டு எதிர்க்கவேண்டும்’ என்றார். சுதர்சனின் உதவித்தலைவரான மோகன்பகவத் (2009 மார்ச்சில் சுதர்சன் ஓய்வுபெற்றபின் இவர் சர்சங் சாலக் ஆனார்.) அந்தக்குழுவினரிடம் ‘நம்மை எதிர்ப்பவர்களின் பற்கள் நொறுக்கப்பட வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

பத்திரிகைச் செய்திகளின்படி 1,50,000 பேர் முதல் 5,00,000 பேர் வரை கும்பமேளாவில் கலந்துகொண்டார்கள். சில மதமாற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. இன்று சபரிதாம் கோவிலுக்குப் பக்தர்கள் யாரும் வருவதில்லை. அந்தக் கோவிலாலும் தனது ஊழியர்களைப் பராமரிக்க முடியவில்லை. அசீமானந்தா வாழ்ந்த ஆசிரமம் இடிக்கப்பட்டு விட்ட்து. இந்தக் கோவிலின் தலைமைப்பூசாரியின் உதவியாளரான பிரதீப் படேல் ‘அசீமானந்தாவின் தொடர்புகளால் இந்தக் கோவில் கெட்டபெயர் எடுத்துவிட்டது. அதனால் நல்ல உள்ளம் கொண்ட எல்லா குஜராத் நன்கொடையளர்களிடமிருந்தும் தனிமைப்பட்டு விட்டது. எப்போதாவது கோவிலுக்கு வரும் மகாராஷ்டிரா மக்கள் டேங்க்ஸ் வருவதற்கே தங்கள் பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டுக் கோவில் உண்டியலில் வெறும் பத்து ரூபாயை மட்டும் போடுகிறார்கள்’ என்று வருத்தத்துடன் கூறினார். அசீமானந்தா ‘இது என்னுடைய தவறுதான். நான் அதை முறையாகக் கட்டவில்லை’ என்று என்னிடம் கூறினார்.
இந்தப்பகுதியில் உணர்வுபூர்வமான செயல்பாடுகள் எதுவுமில்லை. கோவில்தான் அந்தப்பகுதியின் மிக முக்கியமான தேவை என்று குஜராத் அரசு நினைக்கிறது, எனவே டேங்க்ஸ் தன்னுடைய தேவைகளை மதச்சார்பான சுற்றுலாக்களின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். இதற்காக குஜராத் அரசு 2012ல் ‘ராமர் முன்னோட்டத் திட்டம்’ என்பதைத் துவக்கியது. புராணக்கதையான இராமாயணத்தில் வரும் பாத்திரங்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துவது அரசின் முன் முயற்சியாகும். இந்தத் திட்டத்தில் சபரிதாம் முக்கிய இடம் பெற்றது.

ராமர் முன்னோட்டத் திட்டம் பற்றிய தகவல்களை அறிய நான் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கான பதிலில் ‘ஒரு சிவன் கோவிலையும்,  நான்கு நீரூற்றுகளையும், சென்று வருவதற்கான பாதை, வாகனங்களை நிறுத்துவதற்கான ஒருபெரிய இடம், பக்தர்கள் அமரும் இடம், துப்புரவுப்பணிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட சபரிதாம் அரசிடமிருந்து ரூ.13 கோடி பெற்றுள்ளது. அதேநேரத்தில் டேங்க்ஸ் பகுதியிலுள்ள பிற்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ‘பிற்பட்ட பகுதி மான்யத் திட்ட’த்தின் கீழ் அளித்த ரூ.11.6 கோடிக்கான திட்ட முன்வடிவை மோடியின் அரசு இன்றுவரை சமர்ப் பிக்கவில்லை. ‘ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ நிறுவனங்கள் அரசால் மூடப்பட்டு விட்டன. ‘1998ல் இருந்து காந்தி நகரில் நாங்கள் கறுப்புப்பட்டியலில் வைக்கப் பட்டுள்ளோம்.’ என்று கவலையுடன் தெரிவித்த தீப் தர்ஷன் பள்ளியின் சகோதரி லில்லி ‘பள்ளிக்கான புதிய மான்யத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புதிய விண்ணப் பங்களைப் பதிவு செய்கிறோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு எதையுமே அளிக்கவில்லை’ என்றார்.

அசீமானந்தா மிகப்பெரிய அளவில் மதமாற்றங்களைச் செய்த நவ்சாரியில் உள்ள உனாய் கோவில், ராமர் முன்னோட்டத் திட்டத்தின்கீழ் ரூ.3.63 கோடி பெற்றுள்ளது. 2013 ஜூனில் நான் சென்றபோது முதன்மைக் கட்டடத்தின் வேலைகள் முடிவடைந்திருந்தன. புதிய கட்டட அமைப்பு மகத்துவம் மிக்கதாகவும், கம்பீரமானதாகவும், மனதில் பதியத்தக்கதாகவும் உள்ளது. அதன் சுவர்களுக்குப்பின்னே அசீமானந்தா பழங்குடி அணியை மதமாற்றம் செய்வதற்காகக் கொண்டுவந்த பழைய கோவில் மறைந்து கிடக்கிறது. அந்தக் கோவிலிலிருந்த புரோகிதர் ‘அண்மைக்காலங்களில் கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனால், வெந்நீர் ஊற்றுக்கள் முதன்முறையாக வறண்டுவிட்டன’ என்று என்னிடம் முணுமுணுத்தார்.


4     

சபரி கும்பமேளாவுக்கான   தயாரிப்புப் பணிகளில்  ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோதே மதமாற்றங்ளை விட, கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு மிகவும் வருத்தம் தந்த ஒரு பிரச்சனை பற்றி அசீமானந்தா நீண்டகால சங் ஊழியர்கள் பலரையும் சந்தித்து விவாதித்துக்கொண்டிருந்தார். அந்தக்குழுவின் மையப்புள்ளிகளாக ஏ.பி.வி.பி.யின் செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகூரும், இந்தூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் ஜோஷியும் இருந்தனர்.

2003ன் துவக்கத்தில் டேங்க்ஸ்ல் அப்போதைய பொதுச் செயலாளரான ஜெயந்திபாய்கேவட்-ன் தொலைபேசி அழைப்பை அசீமானந்தா பெற்றார். கேவட் அவரிடம் சொன்னார், ‘பிரக்யா சிங் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.’ அடுத்த மாதம் கேவட், நவ்சாரில் உள்ள தனது வீட்டில் அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அசீமானந்தா 1990ன் பிற்பகுதியில் போபாலில் ஒரு வி.ஹெச்.பி.ஊழியர் வீட்டில் பிரக்யா சிங்கைச் சந்தித்த நினைவுகளில் மூழ்கினார். அவருடைய வெட்டப்பட்ட முடி, டி சர்ட், ஜீன்ஸ், கோபம் கொண்ட பேச்சுத்திறன் (2006க்குப்பின் ஒருசமயம் தனது இயல்பான வசைமாரிப் பேச்சில் பிரக்யா சிங், ‘நாம் தீவிரவாதிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஒரு முடிவு கட்டி, அவர்களைச் சாம்பலாக்குவோம்’ என்றார்.) என்ற தோற்றத்தைக் கண்டு திகைத்தார். நவ்சாரியில் வ.க.ஆ. வாஹாய் ஆசிரமத்தில் இன்னும் ஒருமாதத்தில் அசீமானந்தாவைச் சந்திப்பதாக பிரக்யா சிங் கூறினார். 

‘இந்துக்களுக்கான வேலை’ (ஹிந்து கா காம்) என்ற அசீமானந்தாவின் கனல் தெறிக்கும் போராட்டப்பாதை தன்னை அவரிடம் ஈர்த்தது’ என்ற பிரக்யாசிங், ‘நாட்டுக்காகப் பணியாற்றிவரும் அவர் ஒரு மாபெரும் தியாகி’ என்று கடந்த டிசம்பரில் போபாலில் சந்தித்தபோது என்னிடம் கூறினார். 

நவ்சாரி சந்திப்புக்குப்பின் தான் உறுதியளித்தபடி பிரக்யா சிங் டேங்க்ஸ் வந்தார். அவருடன் மூன்றுபேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் சுனில் ஜோஷி.

சுனில் ஜோஷியை நன்கறிந்தவர்கள், அவன் ஓரிடத்தில் தங்காமல் அலைந்து திரிபவன்; அதீதச் செயல்களில் ஈடுபடுபவன்’ என்று செய்தியாளர்களிடம் விவரித்தார்கள்.  அவன் ஒரு சகோதரன் போன்றவன் என்றும் ஆர்.எஸ். எஸ். மூலம் அவனைச் சந்தித்ததாகவும் பிரக்யா சிங் என்னிடம் கூறினார். சுனில் ஜோஷிக்கு அசீமானந்தா சபரிதாமில் அடைக்கலம் கொடுத்த பிந்தைய ஆண்டுகளில், அசீமானந்தா காடுகளில் சுற்றிப் பழங்குடியினரைச் சந்தித்து வந்த நேரங்களில், சுனில் ஜோஷி நாள் முழுதும் பஜனை செய்து பூஜைகளைச் செய்துவந்ததை அசீமானந்தா நினைவுகூர்ந்தார். அந்தச்சமயத்தில் சுனில் ஜோஷியும், பிரக்யா சிங்கும் தங்கள் நேரங்களை அசீமானந்தாவு டன் கழித்தனர். சுனில் ஜோஷி மத்தியப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியினக் காங்கிரஸ் தலைவரையும், காங்கிரஸ்காரரின் மகனையும் கொலைசெய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்தவர். அந்த ஒரு குற்றத்திற்காக ஆர்.எஸ். எஸ். அவரை நீக்கிவிட்டதாகக் கூறிக்கொண்டது.

அவர்கள் குழுவில் விரைவில் இன்னொருவரும் சேர்ந்தார். கனடாவில் ஒரு நிர்வாகத் துறை அலுவலராக பரத் ரதேஷ்வர் வேலை செய்து வந்தபோது டேங்க்ஸில் அசீமானந்தா செய்துவரும் வேலைகளைக் கேட்டு அவருக்கு உதவிசெய்ய வெளிநாட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்ப முடிவெடுத்தார். வைசாத் மாவட்டத்திற்கு அருகில் ஒருவீட்டைக் கட்டினார். அந்த வீட்டில் அசீமானந்தாவின் கூட்டாளிகள் ஆசிரமத்துக்குச் செல்லும்வழியில் தங்கிச் செல்வார்கள்.

அசீமானந்தா, பிரக்யா சிங் இருவரும் கும்பமேளாவை எதிர்நோக்கியிருந்த ஆண்டுகளில் தாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாக  என்னிடம் கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத் தல் என்று அசீமானந்தா கருதிய முஸ்லீம் மக்கள்தொகை நாட்டில் பெருகிவருவது பற்றி விவாதித்தார்கள். ‘கிறிஸ்தவர்களோடு நாம் எப்போதும் இணைந்து நிற்கமுடியும்; அவர்களை அச்சுறுத்தவும் முடியும்’ என்று அசீமானந்தா என்னிடம் கூறினார். ‘ஆனால் முஸ்லீம்கள் வேகமாகப் பெருகி வருகிறார்கள்’ என்ற அவர் ‘தலிபான்கள் மக்களை வெட்டிக்குவிக்கும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம். நான் இதைப்பற்றி கூட்டங்களில் பேசியிருக்கிறேன். முஸ்லீம்கள் இவ்வாறு பல்கிப் பெருகினால் அவர்கள் சீக்கிரமே இந்தியாவை ஒரு பாகிஸ்தானாக மாற்றிவிடுவார்கள். இங்குள்ள இந்துக்கள் அதே போன்ற சித்திரவதைக்கு உள்ளாவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்’ என்ற அவர் தொடர்ந்து ‘அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழியை இந்தக்குழு கண்டுபிடித்து விட்டது’ என்றார். அவர்கள் குஜராத்தில் கங்கா நகரில் உள்ள அக்சர்தாம் கோவில் போன்ற இந்து வழிபாட்டுத்தலங்களில் முஸ்லீம் தீவிரவாதத் தாக்குதல்களால் ஏற்கனவே ஆத்திரம் கொண்டிருந்தார்கள். 2002ல் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 30பேர் கொல்லப்பட் டார்கள். இந்தப் பிரச்சனைக்கான அசீமானந்தாவின் தீர்வும், அவர் அடிக்கடி வலியுறுத்தி வந்ததும், ‘அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராகப் பதிலுக்குப்பதில் பழிவாங்க வேண்டும்’ என்பதுதான். அவர் கூறுவது,’குண்டுக்குப் பதில் குண்டுதான்’- (பாம் கா பத்லா பாம்).

அசீமானந்தா கும்பமேளாவுக்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது, இக்குழுவினரின் கலந்துரையாடல்கள் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றன. அசீமா னந்தா என்னிடம் தந்த விவரங்களின்படி இச்சதித் திட்டங்களுக்கு மோகன் பகவத்தும், இந்திரேஷ் குமாரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள். அவர்கள் கும்ப மேளாவில் பிற இந்துத்தலைவர்களுடன் விழாவின் மையப்பகுதியில் இருந்தபோது அசீமானந்தா தனது ஆசிரமத்திலேயே உள்ளடங்கியிருந்தார். சங் அமைப்பில் அவருக்கிருந்த முதன்மைக்கும் பிரபலத்திற்கும் மாறாக மோகன் பகவத், இந்திரேஷ்குமார் ஆகிய இருவரிடத்திலும் பொதுஇடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விலகியிருக்க ஒப்புக்கொண்டார். ‘அந்த நேரத்தில் நாங்கள் கையாண்ட தந்திரம் அது’ என்ற அசீமானந்தா கும்பமேளாவில் பங்கெடுக்காமல் இரகசியமாக தாக்குதல் திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்தினார்.

சபரி கும்பமேளாவுக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள்ளா கவே வாரணாசியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. 38 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிகுண்டுகளில் ஒன்று இந்துக் கோவிலின் நுழைவாயிலில் வைக்கப்பட்டது. அசீமா னந்தா, பிரக்யா சிங், சுனில் ஜோஷி, ரத்தேஷ்வர் குமார் ஆகியோர் உடனடியாக சபரிதாமில் கூடி அங்கே ஒரு பதிலைத் தயாரிக்கும் ஜாலவித்தையில் ஈடுபட்டனர்.

அசீமானந்தா தந்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, சுனில் ஜோஷியும், ரத்தேஷ்வர் குமாரும் ஜார்கண்ட் சென்று துப்பாக்கிகளையும், டெடனேட்டர்களில் பயன்படுத்த சிம் கார்டுகளையும் வாங்கிவர ஒத்துக்கொண்டனர். அசீமானந்தா அவர்களிடம் ரூ.25,000 கொடுத்தார். இந்தச் சதித் திட்டத்தில் ஆர்வம்கொண்ட சாதுக்களையும் சேர்த்துக்கொள்ள அவர்களுக்கு ஆலோசனை தந்தார். (முடிவில் அவர் நியமித்த ராமபக்தர்கள் துத்தம் அடைப்பதைத் தேர்வுசெய்தனர்.) ஜார்கண்ட்டில் சுனில் ஜோஷி தனது நண்பரும், ஜமதா மாவட்ட ஆர்.எஸ்.எஸ், தலைவருமான தேவேந்தர் குப்தாவைத் தொடர்பு கொண்டு சிம் கார்டுகளை வாங்குவதற்குப் போலி டிரைவிங் லைசென்ஸ்களைப் பெற்றார்.

ஜூன் 26ல் அந்தக்குழு ரத்தேஷ்வர் வீட்டிற்கு வந்தது. சுனில் ஜோஷியும், பிரக்யா சிங்கும் சதி ஆலோசனைக்கு நான்கு புதிய உறுப்பினர்களோடு வந்தார்கள். சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங் கரா, லோகேஷ் சர்மா மற்றும் அமீத் என்றறியப்பட்ட ஒரு வர். சந்தீப் டாங்கே மத்தியப் பிரதேசம் சஜாபூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர். இவரது புனைபெயர் ‘ஆசிரியர்’. ராம்சந்திர கல்சங்கரா இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்.

குற்றப்பத்திரிகையின்படி, சுனில் ஜோஷி குண்டுகளை வெடிக்கச் செய்ய மூன்று குழுக்களை அமைத்தார். ஒரு குழு- குண்டுகளை வைக்க அவர்களால் நியமிக்கப்படும் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டுவதும், பாதுகாப்புக்கான இடமளிப்பதும். இன்னொரு குழு- வெடிகுண்டுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு. மூன்றாம் குழு- குண்டுகளை ஒருங்கிணைத்துத் தயாரிப்பதற்கும், தாக்குதல்களை நடத்துவதற்கும். சுனில்ஜோஷி இந்தச் சதித்திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் இணைக்கும் நபராகச் செயல்பட ஒப்புக் கொண்டார். சுனில் ஜோஷி அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தானியரைக் கொல்ல சம்ஜுதா எக்ஸ்பிரஸைத் தங்கள் தாக்குதல் இலக்காகக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை தந்தார். அசீமானந்தா மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தார்.

டேங்க்ஸில் பலமாதங்கள் எந்தவிதச் செய்திகளும் இல்லாமல் போயின. பின் தீபாவளிப் பண்டிகையின் போது சுனில் ஜோஷி அசீமானந்தாவைச் சந்திக்க சபரிதாம் வந்தார். அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் படி, செப்டம்பர் 8ல் மாலேகானில் 31 பேரைக் கொன்ற இரண்டு குண்டுவெடிப்புக்களுக்கு சுனில் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். சந்தீப் டாங்கேயும், ராம்சந்திர கல்சங்கராவும் குண்டுகள் தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் தாக்குதல்களை நிறைவேற்றவும் சுனில் ஜோஷிக்கு உதவினர் எனக் குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

2007 பிப்ரவரி 16 சிவராத்திரி அன்று சுனில் ஜோஷியும், அசீமானந்தாவும் குஜராத்தின் பல்பூரிலுள்ள கர்த்மேஷ் வர் மகாதேவ் மந்திரில் மீண்டும் சந்தித்தனர். ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, சுனில் ஜோஷி அசீமானந்தாவிடம் ‘அடுத்த சிலநாட்களில் ஒரு நல்ல செய்தி வரப்போகிறது’ என்று கூறினார். இரண்டு நாட்களுக்குப்பின் சம்ஜுதா எக்ஸ்பிரஸில் குண்டுகள் வெடித்தன. அதற்கு ஒருநாள் கழித்து சுனில் ஜோஷியும், அசீமானந்தாவும் அந்த மாபெரும் சதித்திட்டத்தின் சில உறுப் பினர்களும் ரத்தேஷ்வர் வீட்டில் சந்தித்தனர். அங்கு அந்தத் தாக்குதல்களுக்கு சுனில் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் அசீமானந்தாவிடம் சந்தீப் டாங்கேயும், அவரது உதவியாளர்களும் குண்டுவெடிப்புக் களுக்கு உதவினார்கள் என்று தெரிவித்தார். அடுத்த எட்டு மாதங்களிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன. மே மாதத்தில் இந்தக் கும்பல் ஹைதராபாத் மெக்கா மசூதியிலும், அக்டோபரில் அஜ்மீர் தர்காவிலும் குண்டுகளை வெடித்தது.

2007 பிப்ரவரி 19 அன்று பிரக்யாசிங் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றிய உடனடிச் செய்தியைப் பார்க்க (-நீராசிங் பின்னர் அளித்த சாட்சியத்தின்படி-) தனது சகோதரி மற்றும் தனது உதவியாளர் நீராசிங் உடன் அமர்ந்திருந்தார். நீரா சிங் குண்டு வெடிப்பின் பேரழிவுக் காட்சிப் படங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். பிரக்யா சிங் நீராவிடம் ‘இறந்தவர்கள் எல்லாம் முஸ்லீம்கள்; எனவே அழவேண்டாம்’ என்றார். இறந்துபோனவர்களில் சில இந்துக்களும் இருப்பதை நீரா சுட்டிக்காட்டிய போது பிரக்யா சிங், ‘தானியங்களோடு சில புழுக்களும் நிலத்தில் விழுந்துவிட்டன’ என்றார். பின் தனது சகோதரிக்கும், நீராவுக்கும் ஐஸ்கிரீம் கொடுத்து உபசரித்தார்.

2007ன் முடிவில் சதியாலோசனைக்குழுவின் நிலை மோசமான திருப்பத்தைச் சந்தித்தது. டிசம்பர் 29 அன்று மத்தியப்பிரதேசம், தேவாசில் உள்ள தனது தாயாரின் வீட்டருகே சாலை ஓரத்தில் சுனில் ஜோஷி சுடப்பட்டு இறந்துகிடந்தார். சுனில் ஜோஷியுடன் அவரது உதவியாளர்கள் ராஜ், மெஹுல், கன்ஷியாம் மற்றும் உஸ்தாத் ஆகிய நால்வரும் எப்போதும் இருந்துவந்தனர். (ராஜ் மற்றும் மெஹுல் இருவரும் 2002 குஜராத் கலவரங்களில் 14 பேரைக் கொன்ற பெஸ்ட் பேக்கரி தீவைப்பு வழக்கில் போலீசால் தேடப்படுபவர்கள்) சுனில்ஜோஷி கொல்லப்பட்டபின் இந்த நால்வரும் மர்மமான முறை யில் காணாமல் போய்விட்டனர்.

சுனில் ஜோஷியின் மரணத்தை அறிந்தபோது அசீமானந்தா, ஜோஷி கொல்லப்பட்ட தகவல்களை அறிந்திட புலனாய்வு இராணுவ அதிகாரியின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டார். லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் என்ற இந்த அலுவலரை நாசிக்கில் தீவிர ஆர்.எஸ்.எஸ். போராளியான அபிநவ் பாரத் பங்கேற்ற கூட்டத்தில் அசீமானந்தா சந்தித்திருந்தார்.

ஸ்ரீகாந்த் புரோஹித் ஒரு மர்மமான நபர். கடந்த மூன்று ஆண்டுகளாக 2008ல் நிகழ்ந்த இரண்டாவது மாலேகான் குண்டுவெடிப்பைத் திட்டமிட்டதற்காக சிறையில் இருந்து வருகிறார். இராணுவ மேலதிகாரிகளின் உத்தரவுப்படி இரட்டை உளவாளியாக நடித்து வந்ததாக மீண்டும் மீண்டும் கூறி வருபவர். ‘நான் எனது வேலைகளைக் கச்சிதமாகச் செய்து எனது மேலதிகாரிகளை தப்ப வைத்தேன்’ என்று 2012ல் ‘அவுட் லுக்’ இதழில் கூறியுள்ளார். பிரக்யா சிங்கின் வழக்கறிஞர் கணேஷ் சோவானி, ‘இதை அறிந்துகொள்ள யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு உண்மை தெரியும்’ என்றும், புரோஹித்தின் நடவடிக்கைகளில் கவனமாக இருப்பதாகவும், ‘அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியாது’ என்றும் என்னிடம் கூறினார். அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, சுனில் ஜோஷி பழங்குடியின காங்கிரஸ்காரரின் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கை யாக இது இருக்கலாம்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு மகராஷ்டிராவிலும், குஜராத்திலும் மூன்று குண்டுகள் வெடித்தன. இரண்டு மாலேகானிலும், ஒன்று மடோசாவிலும். குறைந்தபட்சம் ஏழு பேரைக் கொன்று, சுமார் 80 பேரைப் படுகாயப்படுத்தியது. அசீமானந்தா உடனடியாக சந்தீப் டாங்கேயின் தொலைபேசி அழைப்பைப் பெற்றார். டாங்கே தனக்கு சபரிதாமில் சிலநாட்களுக்கு அடைக்கலம் வேண்டினார். குஜராத்தில் உள்ள நாடியாத்துக்குச் சென்றுகொண்டிருந்த அசீமானந்தா, தான் இல்லாதபோது ஆசிரமத்தில் டாங்கேயை விட்டுச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல என்று நினைத்தார். சபரிதாமில் இருந்து 70கி.மீ. தொலைவில் உள்ள வியதா பஸ் டெப்போவில் தன்னை ஏற்றிக்கொண்டு பரோடாவில் இறக்கிவிடுமாறு டாங்கே அசீமா னந்தாவைக் கேட்டுக்கொண்டார். அங்கு மிகவும் கவலையோடு இருந்த டாங்கேயையும், ராம்சந்திர கல்சங்கராவையும் அசீமானந்தா சந்தித்தார். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து வந்ததாகக் கூறினார்கள். பரோடாவுக்குச் சென்ற மூன்றுமணி நேரப்பயணம் முழுவதிலும் மௌனமாகவே இருந்தார்கள் எனப் பின்னர் போலீசாரிடம் அசீமானந்தா நினைவுகூர்ந்தார்.

மாலேகானில் நடைபெற்ற இரண்டாவது குண்டு வெடிப்புக்குப் பிறகு 2008 அக்டோபரில் பிடிபட்ட முக்கியச் சதிகாரர்களில் முதலாமவர் பிரக்யா சிங். மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படை, குண்டுவெடிப்புக்கு பிரக்யா சிங் ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்தது. போலீஸ் காவலில் பிரக்யா சிங் மிகவும் கடுமையாகச் சித்ரவதை செய்யப் பட்டதாக உடனடியாகப் புகார் எழுந்தது. இந்தச் செய்தி அசீமானந்தாவை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. நவம்பர் முதல்வாரத்தில் மும்பை ஏ.டி.எஸ். இந்த வழக்கில் இன்னொரு முக்கியமானவ ரான புரோஹித்தைக் கைதுசெய்தது. புரோஹித் மீது பயங்கரவாதிகளுக்குக் குண்டுகளைச் செய்யப் பயிற்சியளித்தார் என்றும், அவர்களுக்கு இராணுவக் கிடங்கிலிருந்து ஆர்.டி.எக்ஸ்.கொடுத்தார் என்றும் குற்றம் சாட்டியது. அந்த மாத இறுதியில் தயானந்த் பாண்டே என்ற சதிகாரரை தீவிரவாத எதிர்ப்புப்படை கைது செய் தது. இந்தப்புலனாய்வுக்குத் தலைமை தாங்கிய புகழ் பெற்ற மும்பை தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவரான ஹேமந்த் கர்கரே மும்பை தீவிரவாதிகளால் நவம்பர் 26 தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின் தீவிரவாதிகளைக் கைது செய்வது திடீரென நிறுத்தப்பட்டது.

2010 ஏப்ரல் வரை எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை அஜ்மீர் குண்டுவெடிப்புப் புலனாய்வின்போது சுனில் ஜோஷி, ரத்தேஷ்வர் மற்றும் இருவருக்குப் போலி அடையாள அட்டை பெற்றுத்தந்த ஜார்கண்ட் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவேந்திர குப்தாவைக் கைது செய்தது. அந்த ஆண்டு ஜூலையில் சம்ஜுதா வழக்கை தேசியப் புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ) எடுத்துக்கொண் டது. அந்த நேரத்தில் சி.பி.ஐ. மெக்கா மசூதி வழக்கைப் புலனாய்வு செய்து அசீமானந்தா உள்ளிட்ட சதியாலோசனைக் குழு உறுப்பினர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் எல்லாம் முடிவுக்கு வருவதை அசீமானந்தா அறிந்தார். கைது செய்யப் படுவதற்கு முந்தைய மாதங்களில் அசீமானந்தா மிகவும் கவலைப்பட்டார் என பூல்சந்த் பாப்லோ என்னிடம் கூறினான். ‘அவர் மௌனமாக இருந்தார். செய்திகள் மற்றும் புலனாய்வுகள் பற்றி உறுதியான மௌனத்தைக் கடைபிடித்தார். நாங்கள் அவரிடம் எதையும் கேட்கவில்லை’ என்ற பாப்லோ அந்த நேரத்தில் 60 வயதை அடைந்திருந்த அசீமானந்தா கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க சபரிதாமை விட்டு நீங்கி நாடு முழுவதும் பயணம் செய்தார். தொடர்ந்த பயணங்கள் அவரைப் பலவீனப் படுத்தின. அவரது உடல்நலம் குறைந்தது. அதனால், ஹரித்துவாருக்கு வெளியில் ஒரு கிராமத்தில் வேறு பெயருடன் சி.பி.ஐ. அவரைக் கண்டுபிடிக்கும் வரை தங்கி வாழ்ந்தார். ‘அவர்கள் சுனில் ஜோஷியுடன் தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொருவரையும் கைதுசெய்தார்கள். கடைசி யில் பிடிபட்டவன் நான்தான்’ என்று அசீமானந்தா என்னிடம் தெரிவித்தார்.

அசீமானந்தா ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். ‘சி.பி.ஐ.க்கு முழுக்கதையும் தெரியும்’ என்றார் அவர். ஒப் புதலளிக்க அவர் ஏன் முடிவு செய்தார் என்பது பற்றி அவர் அளித்த ஒரு விளக்கம் ஆச்சரியம் தருவதாக இருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட சிலநாட்களுக்குப் பிறகு அதே சிறையிலிருந்த கலீம் என்ற பெயர் கொண்ட ஒரு முஸ் லீம் சிறுவனை அவர் சந்தித்தார். அசீமானந்தா திட்டமிட்டுத் தந்த மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் அவனும் குற்றம் சாட்டப்பட்டிருந் தான். அசீமானந்தாவுக்காகச் சிறுசிறு வேலைகளை கலீம் செய்து வந்தான். அவனது அன்பு அசீமானந்தாவின் மனசாட்சியை உலுக்கியது. தவறுகளுக்காக வருத்தப்படாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை எங்கள் முதல்பேட்டியில்  நான்  குறிப்பிட்டபோது அசீமானந்தா என் மீது ஒருவிஷமத்தனமான பார்வையை வீசினார். ‘அப்படியானல் கலீமைப் பற்றிய செய்தி அவ்வளவு பெரியதா?’ என்று கேட்டார். அந்தக் கதை முழுவதும் போலீசால் இட்டுக்கட்டப்பட்டவை என்றார். ‘கலீமுக்குத் தெரியும், நான் அந்தச் சிறையில் தான் உள்ளேன் என்று. ஆனால் நான் அவனைச் சந்திக்கவில்லை.’ அசீமானந்தா சொன்னார், ‘நான் எப்படி இத்தகையவற்றை ஒரு முஸ்லீம் பையனிடம் சொல்வேன்?’
தனது ஒப்புதல் வாக்குமூலத்திற்குப்பிறகு அசீமானந்தா இரண்டு கடிதங்களை எழுதினார்: ஒன்று, சம்ஜுதா குண்டுவெடிப்புக்களுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு இந்தியக் குடியரசுத்தலைவருக்கு. இன்னொன்று, பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு. அதில், ‘குற்றவியல் சட்ட நடைமுறைகள் என்னைத் தூக்கிலிடும் முன் பாகிஸ் தானில் உள்ள ஹபீஸ் சையத், முல்லா ஒமர், பிற ஜிகாதி தீவிரவாதத் தலைவர்கள் மற்றும் ஜிகாதி தீவிரவாதி களைத் திருத்துவதற்கான ஒருவாய்ப்பை எனக்குத் தர வேண்டுகிறேன். நீங்கள் அவர்களை என்னிடம் அனுப்பலாம். அல்லது என்னை உங்களிடம் அனுப்புமாறு இந்திய அரசை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்’

5

தேசியப் புலனாய்வுக்கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான
மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்  விஷால் கார்க் அலுவல ம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச்சுவரின் எதிரில் ‘அஜ்மீர் குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா குண்டுவெடிப்பு’, ‘சுனில் ஜோஷி கொலை’ மற்றும் ‘எழுது பொருள்கள்’ என்று தலைப் பிடப்பட்ட நான்கு இழுப்பறைகள். விஷால் கார்க்கின் மேசையின் பின்பக்கம் உள்ள ஒரு வெண்பலகையில் கார்க் புலனாய்வு அதிகாரியாக உள்ள சம்ஜுதா மற்றும் அஜ்மீர் வழக்குகளின் நீதிமன்ற விசாரணைத் தேதிகள் இடம் பெற்றுள்ளன. இன்னொரு சுவரில் இன்றுவரை காணாமல் போயுள்ள சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல் சங்கரா படங்களுடன் ‘வாண்டட்’ சுவரொட்டி. டாங்கேயையும், கல்சங்கராவையும் கைதுசெய்யத் தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.10,00,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது கார்க் சொன்னார், ‘நாங்கள் இங்கே ஆருஷி வழக்கை அடிக்கடி மேற்கோள் காட்டுவோம். குற்றம் நடந்த மூன்று நாட்களுக்குப் பின் அந்த வழக்குக் கொடுக்கப்பட்டு சி.பி.ஐ. குற்றம் நடந்த இடத்திற்குச் சென்றது. நீங்களே கற்பனை செய்துபாருங்கள். எவ்வளவு மதிப்புமிக்க தடயங்கள் தொலைந்திருக்கும் என்று.’ அணிந்திருந்த கண்ணாடியை தாழ்த்தி மேலிருந்து கீழாகப் பார்த்தபோது, தீவிரவாதச் செயல்களை எதிர்கொண்டு ஒடுக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தார் கார்க். ‘குற்றம் நடந்த மூன்றாண்டுகளுக்குப்பின் சம்ஜுதா வழக்கை எடுத்துக்கொண்டோம். இந்தப் புலனாய்வு எங்களுக்கு எவ்வளவு சிக்கலாக இருக்கும் என்பதை நீங்கள் நினைத்துப்பாருங்கள்.’ என்று சொன்னார்.’

கார்க் தொடர்ந்தார் ‘இதுவரை இதில் நடைபெற்ற பணப்பரிமாற்றத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில், வங்கி மூலமான பணப்பரிமாற்றங்களாகவோ அல்லது எழுத்து மூலமானதாகவோ இல்லை. புலனாய்வின் வரம்பு இது என நீங்கள் சொல்லலாம். அசீமானந்தா சுனில் ஜோஷியிடம் பணம் கொடுத்தார் என்பது எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் எவ்வளவு என்பது தெரியவில்லை. இந்தக் குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது இன்னும் விசாரணையில் உள்ளது.’ ‘வாண்டட்’ சுவரொட்டியைச் சுட்டிக்காட்டிய கார்க், ‘ரூ.10,00,000 என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இளைஞர்கள் இந்தக் குற்றத்தின் மூளையாகவும், செயல்படுத்தியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதுபற்றிய ஒரு தெளிவான சித்திரத்தைக் காண நாங்கள் அவர்களைப் பிடிக்கவேண்டியுள்ளது.’

தேசிய புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ) ஏராளமான தடைகளைச் சந்தித்து வருகிறது. 2012 ஜூலையில் சுனில் ஜோஷி கொலையில் பிரக்யா சிங்கை என்.ஐ.ஏ. குறுக்கு விசாரணை செய்வதை - இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, என்.ஐ.ஏ.வின் தோற்றத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற தொழில்நுட்பக் காரணத்தின் அடிப்படையில்- உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட இன்னொருவரான லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீராம் புரோஹித்தை விசாரணை செய்வதையும் தடைசெய்துள்ளது. என்.ஐ.ஏ.வின் குற்றச்சாட்டு வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான அஹமது படேல் எல்லா வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து, ஒரே நீதி மன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினார். ஆனால், இதுபற்றிய அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

என்.ஐ.ஏ. மேலும் பல சதியாளர்களின் பெயர்களைச் சேர்த்துத் துணைக் குற்றப் பத்திரிக்கையை விரைவில் தாக்கல் செய்வோம் என்கிறது. கார்க் மிகவும் கடுமையாக வேலைசெய்து வருவதாகச் சொன்னார். ‘சென்ற வாரம் எனது உதவியாளர்களில் ஒருவர் லிஃப்டில் என்னைச் சந்தித்து, ‘சார், இன்று நீங்கள் மிகவும் அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்கள்’ என்றார்; ‘நான் அவரிடம் நீங்களும்கூடத் தூக்கத்தை விட்டுவிட்டால் ஸ்மார்ட்டாகத் தோன்றுவீர்கள் என்றேன்’ எனப் பலமாகச் சிரித்தார். பிறகு அவர், ஒருமுறை தனது மேலதிகாரி தான் தூங்கினால் தன்னால் சந்தேகிக்கப் படுபவர்களைக் கனவில் கண்டு தேடிப்பிடிக்க நல்ல நேரத்தைக் காணமுடியும் என்று அடிக்கடி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றார்.

இந்திரேஷ் குமாரை இதுவரை என்.ஐ.ஏ. ஏன் கேள்விக்குட்படுத்தவில்லை? என்று நான் கேட்டதற்கு ‘அது உள்விஷயம். அதுபற்றி விவாதிக்கக்கூடாது’ என்றார் கார்க்.

2008ல் பிரக்யா சிங் கைதுசெய்யப்பட்டதும் பி.சிதம்பரம், திக்விஜய சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ‘காவி பயங்கரம்’ என்று குற்றம்சாட்டத் துவங்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.தலைவர்கள் இந்தக் கறையிலிருந்து தங்கள் அமைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள முதலில் குற்றவாளிகளைக் கண்டிக்கவும், பிறகு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் விரைந்தார்கள்.  

பிரக்யாசிங் கைதைத் தொடர்ந்து பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் உமா பாரதி, ‘நான் அதிர்ச்சி அடைந்தேன். பிரக்யா சிங்குக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பி.ஜே.பி.யும் அதனுடைய பிற எல்லா அமைப்புகளும் விலகிச் செல்வது  வெட்கக் கேடானது. அவர்களுக்குத் தேவைப்பட்டபோது பிரக்யா சிங்கைப் பயன்படுத்திக் கொண்டார்கள்’ என்றார். இதை மறுத்த பி.ஜே.பி.யின் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத், ‘அவரைச் சொந்தம் கொண்டாடுவது அல்லது விலக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் பிரக்யா சிங் ஏ.பி.வி.பி.யை விட்டு 1995-96 லேயே விலகிவிட்டார்’ என்றார். ஆனால், பிரக்யா சிங், பி.ஜே.பி.தலைவர் ராஜ் நாத்சிங், சிவராஜ் சிங் சௌகான் ஆகியோருடன் இருந்த சமீபத்திய புகைப்படங்கள் வெளியிடப்பட்ட போது அந்தக் கட்சி தர்மசங்கடத்துக்குள்ளானது. இன்னொரு படம் குஜராத் கலவரங்களுக்குப்பின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் நரேந்திர மோடியுடன் பிரக்யா சிங் மேடையில் வீற்றிருந்ததைக் காட்டியது.

பிரக்யாசிங் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற புகார் எழுந்ததும் பி.ஜே.பி தனது நிலையை மாற்றிக்கொண்டது. எல்.கே.அத்வானி, பிரக்யா சிங் மீது நடைபெற்றது ‘காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை’ என்று கண்டனம் செய்தார். அரசியலால் ஏவிவிடப்பட்ட புலனாய்வு அமைப்பு தொழில்நெறி சாராத வகையில் செயல்படுவது தெளிவாகிவிட்டது என்றும் கூறினார். (அரசியல் அறிஞர் பானுபிரதாப் மேத்தா, ‘எல்.கே.அத்வானி கடந்த தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட கலைநயமற்ற, உணர்ச்சி வசப்பட்ட போக்கில் இப்போது எதுவும் குறைந்துவிடவில்லை; பிரக்யா சிங்கைப் பாதுகாப்பதிலும் அது இருந்தது’ என்று பின்னர் விமர்சனம் செய்தார்.)

2010 நவம்பரில் அசீமானந்தா கைது செய்யப்படுவதற்கு ஒன்றரை வாரத்திற்கு முன் இந்தப் புலனாய்வில் இந்திரேஷ் குமார் பெயர் அடிபட்டுப் பத்திரிகைகளில் இடம் பெற்ற போது ஆர்.எஸ்.எஸ். கடுமையான எதிர்ப்பைப் பொதுஇடத்தில் (அதன் வரலாற்றில் மிகவும் பெரிய ஒன்றாக) காட்டியது. சங்அமைப்பின் மூத்த தலைவர்கள் நாடுதழுவிய அளவில் எதிர்ப்பைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். ‘ஆர்கனைசர்’ இதழின்படி நாடு முழுவதும் 700 இடங்களில் நடைபெற்ற தர்ணாக்களில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணி மேடைகளில் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.யின் ஒட்டுமொத்தத் தலைவர்களும் காணப்பட்டனர். லக்னோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோகன் பகவத் இந்திரேஷ் குமாரைப் பாதுகாக்கத் தாமே நேரடியாகக் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறினார். ‘இந்த அமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக சர்சங் சாலக் தர்ணாவில் கலந்துகொண்டது மட்டுமல்ல, கூட்டங்களிலும் பேசுவது ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு பயங்கர வாதத்தை இணைக்கும் இரகசியத் திட்டம் உருவாகி வருவதால்தான்’ என்றார். அந்த மேடை மோகன்தாஸ் காந்தியின் முகம் கொண்ட பெரிய படத்தால் அமைக்கப் பட்டிருந்தது. பகவத் மேலும் கூறினார், ‘ஹிந்து சமாஜ், காவி நிறம் மற்றும் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் என்ற எல்லாச் சொற்களும் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கு எதிரான அர்த்தம் கொண்டவை’.

குண்டுவெடிப்புக்களில் இந்திரேஷ் குமாரின் பங்கைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் அரிய தகவல்களையும், சாட்சியங்களையும் சி.பி.ஐ. மற்றும் ஏ.டி.எஸ். புலனாய்வுகள் முன்வைத்தன. என்.ஐ.ஏ.வின் குற்றப்பத்திரிக்கை இந்திரேஷ் குமார்தான் இரகசிய சதிகளில் ஈடுபட்ட முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் (குறிப்பாக சுனில் ஜோஷிக்கு) அனுபவம்மிக்க, நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்தார் எனக் குறிப்பிட்டது. 2011 ஜூலை பிற்பகுதியில் சி.பி.ஐ. அவரைக் குறுக்குவிசாரணை செய்தது. என்.ஐ.ஏ.வும் கூட இந்திரேஷ் குமாரை விசாரிக்கப் போவதாகப் பெருமளவுக்குப் பேசப்பட்டது. ஆனால், இந்திரேஷ் குமார் ஏற்கனவே புலனாய்வுக்குழுக்களின் மீது பத்திரிகைகளில் வசைமாரி பொழிந்துகொண்டிருந்தார். ‘பயங்கரவாதச் செயல்களில் எனக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் என்.ஐ.ஏ.விடம் இருக்குமானால் அது ஏன் என்னைக் கைது செய்யவில்லை?’ என்ற அவர், பிரக்யா சிங், அசீமானந்தா ஆகியோருடன் தாமும் தவறாகத் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டார். என்.ஐ.ஏ. இன்னும் அவரை விசாரிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.-ம், பி.ஜே.பி.யும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நடைபெற்றுவரும் புலனாய்வுகள் எல்லாம் காங்கிரஸ் தலைமையிலான அரசால் நடத்தப் படும் சூனியக்கார வேலை என்று வர்ணிக்கப் பயன்படுத்திக் கொண்டன. இது உண்மை என்றால், இந்த வழக்குகள் அரைமனதாகக் கையாளப்படுவதைப் பார்க்கும்போது, அரசுக்கு இந்தக் குழுக்களின்மீது என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற ஆச்சரியத்தை எழுப்புகிறது.

சென்ற ஆண்டு நான் இந்திரேஷ் குமாரைப் பேட்டி கண்ட போது, பத்திரிகையாளர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் பற்றி மட்டுமே கேள்வி கேட்கிறார்கள். அவர்கள், இந்த அமைப்பின் சமுதாயத்திற்கான முன்னெடுப்புகளின் மீது ஆர்வம் காட்டுவதில்லை என்று முறையிட்டார். ‘பிறகு அவர்கள் அந்தக் கேள்விகளை மட்டும் அச்சிட்டு எங்கள் பணிகளைப் பற்றிய செய்திகளைக் கொலை செய்துவிடுகிறார்கள்’ என்றார். இப்போது ஊடகங்கள் சங் போன்ற பன்முகப்பட்ட அமைப்புக்களைப் புறக்கணித்தது தவறு என்று மெதுவாக உணரத் துவங்கியிருக்கின்றன என்றும் கூறினார். குண்டுவெடிப்பில் அவரது பங்குபற்றி எங்களது உரையாடல் மாறியபோது, ‘என்னைப்பற்றி அவர்கள் எழுதும் போது, அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன்’ என்றார் அவர். அவரது குரல் சண்டைக்குரலாக ஒலித்தது. பின்னர் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மோகன் பகவத்தும், அவரும் வாழ்த்துகள் சொன்ன கூட்டத்தைப்பற்றிக் கேட்டபோது அவர் முற்றிலும் மௌனமாகிப் போனார். மோகன் பகவத் அலுவலகம் அவர்கள் கருத்தைத் தெரிவிக்க மின்னஞ்சல் அனுப்புமாறு என்னிடம் சொன்னது. ஆனால் இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும்வரை அவர்களிடமிருந்து எந்தப் பதிலுமில்லை.

ஜனவரி 24 வெள்ளியன்று ஹரியானா மாநிலம், பஞ்ச் குளாவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் சம்ஜுதா வெடிகுண்டு வழக்கில் அசீமானந்தாமீது குற்றச் சாட்டுக்கள் தொகுக்கப்பட்டன. அம்பாலா சிறையில் மூன்றாண்டுகள் கழித்தப்பிறகு, 31 மாதங்கள் சட்ட விசாரணைக்குப் பின் இறுதியாக அவர் மீதான விசாரணை ஜெய்பூரிலுள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவர் 2013 செப்டம்பர் முதல் அஜ்மீர் வழக்கில் விசாரணையில் இருந்து வருகிறார். மெக்காமசூதி வழக்கில் அவர் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை. கடந்த நவம்பரில் இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக அசீமானந்தா விசாரணை செய்யப்பட ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

2008 மாலேகான் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளியாக உள்ள பிரக்யா சிங் பம்பாய் உயர் நீதிமன்றத்தை - என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்ட விதம் பற்றி ஆட்சேபிப்பதற்காக- அணுகியுள்ளார். அவர் தான் புற்றுநோயால் அவதிப்படுவதாகவும், போபாலில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த பல்வேறு ஜாமீன் மனுக்களையும் என்.ஐ.ஏ. எதிர்த்துவருகிறது.

இந்தத் தருணத்தில் மேலும் பல ஆண்டுகளுக்கு விசாரணை இழுத்தடிக்கப்படும் என்று தோன்றுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாகி வருவதற்கு இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒருவர் மீது ஒருவர் குறைகூறி வருகிறார்கள். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பஞ்ச்குளா நீதிமன்றத்திற்குச் சென்றுவந்த போதிலும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும்வரை குறிப்பிடத்தக்க செய்திகள் ஏதுமில்லை.

அம்பாலாவில் அசீமானந்தா சிறப்பு ‘பி’ வகுப்பு அறையில் ராம்குமார் சௌத்திரி என்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருடன் (இவர் 2012 நவம்பரில் ஹரியானாவில் 24 வயதுப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்) இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு சமையல்காரரைத் தங்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மட்டுமே பூட்டிய அறையில் வைக்கப்படுகிறார்கள்.

2014 ஜனவரியில், எங்களது கடைசிப் பேட்டியின்போது, அசீமானந்தா என்னிடம் கொஞ்சம் டீ குடிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்பே ஒரு ஒல்லியான பதின்வயதுச் சிறுவன் - சில்லறைக் குற்றங்களுக்காகச் சிறைக்காவலில் உள்ளவன்- எனது கைகளில் இனிப்பான டீ நிறைந்த பிளாஸ்டிக் கப்பைத் திணித்தான். அசீமானந்தா அவனைத் தன் அருகில் இழுத்து, ‘இவன் எனது சிறுவன். விரைவில் விடுதலையாகிவிடுவான்’ என்றார். அந்தப் பதின்வயதுச் சிறுவனின் முகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னார்; ‘இந்த டீக்காரன் நரேந்திரமோடி அளவுக்கு வளர்ச்சி பெறுவான்’.

எங்கள் நேர்காணல்களின் போது சிறை அதிகாரிகள் அசீமானந்தா எப்படி இருக்கிறார் என்று கேட்டுச் செல்ல அடிக்கடி வந்து நின்று செல்வார்கள். ‘அவர்கள் எல்லாரும் என்னிடம் ‘எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருங்கள்’ என்பார்கள்’ என்றார் அசீமானந்தா. நடந்தது எதுவானாலும் நல்லதே. ‘இதை நான் செய்தேனா? இல்லையா? என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், யார் அதைச் செய்திருந்தாலும், சரியானதைத்தான் செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்’ என்றார்.

மேற்கு வங்கத்தில் உள்ள அசீமானந்தாவின் காமர்பூர் கிராமத்திற்கு நான் சென்ற போது அவரது குடும்பத்தினர் என்னிடம் பேசவே மறுத்தார்கள். ஆனால், நான் அங்கிருந்து திரும்பும் போது அசீமானந்தாவின் இளைய சகோதரர் சுசாந்த் என்னிடம், ‘இன்னும் சில மாதங்கள் பொறுத்திருங்கள். மோடிஜீ ஆட்சிக்கு வந்ததும், எங்கள் கிராமத்தின் நடுவில் ஒருமேடையை அமைத்து, ஒலிபெருக்கியில் ‘இவை எல்லாம் அசீமானந்தாவால்  நடந்தவை’ என்று சத்தமிட்டுச் சொல்வேன்’ என்றார்.

எங்கள் சந்திப்புகளில் ஒன்றில் அசீமானந்தா, நாதுராம் கோட்சேவின் கடைசி வார்த்தைகளைச் சுட்டிக்காட்டினார்; ‘எனது எலும்புகள் கடலில் கரைக்கப்படாமல் இருக்கட்டும், மீண்டும் சிந்துநதி இந்தியாவின் வழியாகப் பாயும்வரை.’ அசீமானந்தா, தன் மீதான விசாரணைகள் நீண்டகாலம் எடுத்துக்கொண்டாலும் ‘உறுதியாக விடுதலை ஆவேன்’ என்று பூல்சந்த் பாப்லோவிடம் உறுதியளித்துள்ளார். அதை என்னிடமும் சொன்னார்: தன்னைப் போன்ற பிரக்யாசிங், சுனில் ஜோஷி போன்றோரின் வேலைகள் மீண்டும் தொடரும். “அது நடக்கும்! சரியான நேரத்தில் அது நடந்தே தீரும்!!" 

புதுவிசை - 44 வது இதழ்                                  

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...