ஞாயிறு, ஜூன் 28

நெருக்கடிநிலை, சங் பரிவாரம், சுப்பிரமணியன் சுவாமி - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் முதல் உள்நாட்டு நெருக்கடி நிலையை காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த நாற்பதாண்டு நிறைவையொட்டி 2015 ஜூன் 25,26,27ஆம் நாள்களில் ‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டில் தொடர்ச்சியான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 25 இதழின் 9 ஆம் பக்கத்தில் ‘நெருக்கடி நிலையின் 40 ஆண்டுகள்- கருப்பு நினைவுகள்’ என்ற கட்டுரைக்குக் கீழே ‘நெருப்பாற்று நாயகர்கள்’ என்ற தலைப்பில் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியவர்கள் என்று சில அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ராம்நாத் கோயங்காவும் ‘சோ’ ராமசாமியும் ஆவர். அரசியல் தலைவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளவர்களில் மு.கருணாநிதி, ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் ஆகியோரை மட்டுமின்றி எல்.கே.அத்வானியையும்கூட ‘பத்திரிகையாளர்கள்’ என்று கூறமுடியும். அந்த மூவரும்கூட பத்திரிகைகளை நடத்தியவர்கள்தாம். அதிலும் குறிப்பாக, நெருக்கடி நிலைக்கால நெருக்கடிகளை சமாளித்து, ‘முரசொலி’ நாளேட்டை நடத்திச் சென்ற மு.கருணாநிதியின் சாதுரியத்தை விளக்கத் தனியொரு நூலே எழுதவேண்டும்.

தமிழகத்தில் நெருக்கடிநிலைக்கு எதிரான உறுதியான, முரணற்ற எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி வந்த காலஞ்சென்ற இரா.செழியனைப் பற்றிய குறிப்பு ஏதும் ‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரைகள் எதிலும் காணப்படாத நிலையில், சென்னை சிறையில் அடைக்கப்பட்ட திமுகவினர் மீதும் திராவிடர் கழகத்தினர் மீதும் நடத்தப்பட்ட சித்திரவதைகளைக் கண்டனம் செய்து சென்னை மத்திய சிறையிலிருந்த கைதிகள் போராடும்படி செய்த நக்ஸலைட் தலைவர்களின் பெயர்களை ( ஏ.எம்.கோதண்டராமன் போன்றோர்)  யாரும் குறிப்பிடாததில் வியப்பொன்றுமில்லை. அதேபோல, நெருக்கடி நிலையை முழுமூச்சாக ஆதரித்ததுடன், எங்கே தமது கட்சியைப் பிரிவினைவாதக் கட்சி என்று இந்திரா காந்தி அரசாங்கம் சொல்லிவிடுமோ என்று அஞ்சி அதனை ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிய எம்ஜிஆரின் ‘துணிச்சலான’ செயலைப் பற்றியும் யாரும் குறிப்பிடவில்லை.

நெருக்கடிநிலைக்காலத் தணிக்கை முறைகளுக்குத் தாக்குப்பிடித்து, இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியை மறைமுகமாக எதிர்த்து நின்ற ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமப் பத்திரிகைகளின் அதிபர் ராம்நாத் கோயங்கா, இந்திரா காந்தி 1980இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டியவரானார். ஏனெனில், மும்பை (அப்போது பம்பாய்) நகரில் நாரிமன் பாயிண்ட் என்னுமிடத்திலுள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அடுக்குமாடிக் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறி அப்போது மகாராஷ்டிராவில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்ததுதான்.

இந்திரா காந்தி  நெருக்கடிநிலை காலத்தில் கொண்டு வந்த ‘மிசா’ சட்டத்தைவிடப் பன்மடங்கு கொடுமையான சட்டங்கள் -  குண்டர் சட்டம், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்  போன்றவை - எதனையும் எதிர்த்து ‘சோ’ ராமசாமி ஒரு சொல்கூடப் பேசியதில்லை என்பது ஒருபுறமிருக்க, அடிப்படையான ஜனநாயக மரபுகளைத் துச்சமாக மதிக்கும் ஜெயலலிதாவையும் நரேந்திர மோடியையும் உறுதியாக ஆதரித்து வந்திருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியை விமர்சித்து ‘துக்ளக்’ இதழில் ஒரு சில கட்டுரைகள் எழுதியதன் காரணமாக, தமிழக சட்டமன்றத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் மிரட்டிய போது, ராஜிவ் காந்தியை நாடினார். ஆக, அவரது காங்கிரஸ் எதிர்ப்பும்கூட உறுதியாக இருந்ததில்லை.

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலையை எதிர்த்த  ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘துக்ளக்’ ஆகியவற்றின் தரத்திற்கும்கூட ‘ தி ஹிந்து’ குழுமத்தால் உரிமை கொண்டாட முடியாது.  நெருக்கடிநிலை காலத் தணிக்கையாளர்களின் விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தந்தது ‘தி ஹிந்து’.

நெருக்கடிநிலையைத் துணிச்சலுடனும் உறுதி தளராமலும் முரணற்ற வகையிலும் எதிர்த்த சக்திகளாகப் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இப்போது உரிமை கொண்டாடி வருகின்றன. இந்திரா காங்கிரஸைத் தோற்கடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கதம்பக் கட்சியான ஜனதா கட்சியில் இருந்த சோசலிஸ்டுகளும், மதசார்பற்ற சக்திகளும்  அந்தக் கட்சி பிளவுண்ட பிறகு  வெவ்வேறு முகாம்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதால், நெருக்கடி நிலையை எதிர்ப்பதில் உண்மையான உறுதியைக் காட்டிய அவர்களது வரலாற்றை எழுதுவதற்கு ஆள் இல்லாமல் போய்விட்டது.

குஜராத்திலும் பிஹாரிலும் இருந்த  காங்கிரஸ் அரசாங்கங்களின் ஊழல்களை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயண்  தொடங்கிய போராட்டம் வெகுமக்கள் தன்மையைக் கொண்டிருந்ததால், அதில்  சங் பரிவாரத்தினர் எளிதாக   ஊடுருவினர். சுதந்திரப் போராட்டத்தில் ஜெயப்ரகாஷ் நாராயண் வகித்த முக்கியப் பாத்திரம், காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிசப் போக்கைப் பிரதிநிதித்துவம் செய்ததில் அவருக்கிருந்த பங்கு, சுதந்திரத்திற்குப் பின் எவ்வித அரசியல், அரசாங்கப் பதவியையும் நாடாமல் இருந்த அவரது  மனப்பாங்கு ஆகியன அவருக்கு இந்தியாவில்- குறிப்பாக வட மாநிலங்களில்- பெரும் செல்வாக்கை ஈட்டித் தந்திருந்தன. எனவே அவரது ஆளுமையைத் தமக்கான அரசியல் நிழலாகப் பயன்படுத்திக் கொண்ட சங் பரிவாரத்தின் உண்மையான முகத்தை அவர் காலங்கடந்தேனும் புரிந்து கொள்ளத் தவறவில்லை.

1974இல் ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் தலைமையில் நடந்த அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், ஊழலுக்கு எதிராக ஜெயப்ரகாஷ் நாராயண் நடத்திய இயக்கம் ஆகியன இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவிப்பதற்கான முக்கியக் காரணங்களாக இருந்தன.  ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய நவ் நிர்மாண் இயக்கத்தில் ஊடுருவி, மக்கள் நலன் காப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்ட சங் பரிவாரத்தினர்,  நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது ‘வீரப் பட்டத்தை’ அவர்கள் பெறுவதற்கு வழிகோலியது. அதாவது இந்திய அரசியலின் முதன்மை நீரோட்டத்திற்கு சங் பரிவாரத்தினர் வந்து சேர்வதற்கு இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலைதான் உதவியது! எனவே அவர்கள் இந்திரா காந்திக்குத்தான் எப்போதும் நன்றி சொல்லக்கூடியவர்களாகவே இருக்க வேண்டும்.

இந்திரா காந்தியின் ‘நெருக்கடிநிலை’க்கு எதிர்ப்புக் காட்டியவர்கள் யாராக இருந்தாலும்,  அவர்களை ‘வீரர்களாக’ப் பார்க்கும் மனோபாவம், இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்த மக்கள் பிரிவினரிடம்  இருந்து வந்தது.  அதனால்தான் எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பலர் சுப்பிரமணியன் சுவாமியை பெரும் வீரராகக் கருதினர்.  நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில்,   சுப்பிரமணியன் சுவாமி என்னும் ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பதுதான் பலருக்கும்  தெரிந்திருந்ததேயன்றி அவர் அப்போது ஆர்எஸ்எஸ். அமைப்பின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்தார் என்பது அல்ல. நெருக்கடிநிலை காலத்துக்  கெடுபிடிகளையும் பாதுகாப்பு விதிகளையும் மீறி அவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று, அங்கு இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்துவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி வந்து, மாநிலங்களவைக் கூட்டமொன்றில் கலந்துகொண்டதும், அப்போது மாநிலங்கள் அவைத் தலைவராக இருந்த குடியரசுத் துணைத்தலைவர் பி.டி. ஜாட்டி, இறந்துபோன நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் சிலர் பற்றிய இரங்கலுரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு ‘இறந்தவர்கள் பட்டியலில்  ஜனநாயகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு, அவையை விட்டு வெளியேறியதுடன் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குக் சென்றதும், அவர் பெரும் சாகசவாதி என்னும் எண்ணத்தைப் பலரது மனத்தில் ஏற்படுத்தியிருந்தன. அன்று சோவியத் யூனியனின் பக்கம் கூடுதலாக சாய்ந்திருந்த இந்திரா காந்திக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களை அமெரிக்கா ஊக்குவித்து வந்தது என்றும், இந்திய அதிகாரிவர்க்கத்தின் உயர் பிரிவினர் சிலரின் தொடர்பும் ஒத்துழைப்பும் இல்லாதிருந்தால் சுப்பிரமணியன் சுவாமியால் அத்தகைய ‘சாகசங்களை’ நிகழ்த்தியிருக்க முடியாது என்றும் இடதுசாரி வட்டரங்களில் மட்டுமே பேசப்பட்டு வந்தது. தமது அமெரிக்கத் தொடர்புகளைப் பற்றி சுப்பிரமணியன் சுவாமியே பின்வரும் பத்திகளில் குறிப்பிடப்படும் கட்டுரையொன்றில் விரிவாகக் கூறியுள்ளார். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரிவர்க்கத்தின் உயர்நிலைகளிலுள்ள, செல்வாக்குள்ள சிலரின் தொடர்புகள் சுவாமிக்குத் தொடர்ந்து கிடைத்து வரும் போலும்.
ஜனதா கட்சி உடைந்து அதிலிருந்த ஆர்எஸ்எஸ். சக்திகள் (ஜன் சங்) பின்னர் பாஜக என்னும் புதிய அவதாரத்தை எடுத்தபோது, அதில் சுப்பிரமணியன் சுவாமி சேரவில்லை. ஆட்களே இல்லாத ஜனதா கட்சியை நடத்திவந்த அவரால், வி.பி. சிங் ஆட்சியை பாஜக கவிழ்த்தப் பிறகு    56 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்ததும் ராஜிவ் காந்தி காங்கிரஸால் ‘வெளியிலிருந்து’ ஆதரிக்கப்பட்டு வந்ததுமான  சந்திரசேகர் அரசாங்கத்தில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்க முடிந்தது. தமிழ்நாட்டில் ஒரு நகராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான வலு கூட இல்லாத ஒரு கட்சியின் தலைவராக இருந்த அவரால் திமுக அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரவும் முடிந்திருக்கிறது.

மேலும், மதச்சார்பற்ற, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆதரிக்கின்ற ஜனநாயக வாதியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளும் முயற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி,  நெருக்கடிநிலையைத் தாங்கள்  சங் பரிவாரத்தினர்  உறுதியாக எதிர்த்ததாக உரிமை பாராட்டிக் கொள்வது நேர்மையற்ற செயல் என்றும்கூட அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுற்றபோது நெருக்கடிநிலையை உறுதியாக எதிர்த்த வீரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள பாஜக- ஆர்எஸ்எஸ். சக்திகள் பெரும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் சுவாமி எழுதிய ‘நெருக்கடி நிலையின் கற்றுக்கொள்ளப்படாத கொள்ளாத பாடங்கள்‘ (Unlearnt Lessons of the Emergency http://www.thehindu.com/2000/06/13/stories/05132524.htm ) என்னும் கட்டுரையை  அவருக்கு எப்போதும் மிகை முக்கியத்துவம் தந்து வரும் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளேடு 13. 06.2000 அன்று வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் அவர் கூறிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு: 

1.ஆர்எஸ்எஸ்., பாஜக தலைவர்களில் பெரும்பாலோர் நெருக்கடிநிலைக்கு எதிரான போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தனர். புனெவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ். தலைவர் பாலாசாஹெப் தேவ்ரஸ்,  தமது அமைப்பை ஜெயப்ரகாஷ் நாரயணின் இயக்கத்திலிருந்து விலக்கிக் கொள்வதாகவும், இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்திற்கு ஆர்எஸ்எஸ். முழு ஒத்துழைப்புத் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறி பல மன்னிப்புக் கடிதங்களை இந்திரா காந்திக்கு அனுப்பினார். ஆனால் அவற்றில் ஒன்றுக்குக்கூட இந்திரா காந்தி பதிலளிக்கவில்லை.  இந்தத் தகவல்கள் மகாராஷ்டிரா சட்டமன்ற அவைக்குறிப்புகளில் உள்ளன. வேறோரு சிறையில் இருந்த வாஜ்பாயியும்  இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார். அவற்றுக்கு செவிமடுத்த இந்திரா காந்தி,  நெருக்கடி நிலை காலகட்டத்தின் பெரும்பகுதியை வாஜ்பாயி பரோலில் கழிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.  மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஆர்எஸ்எஸ்., பாஜக தலைவர்களைப் பற்றிய விவரங்கள் அகாலிதளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகத்தில் உள்ளன (1)

2. மாதவ்ராவ் முலெ, தத்தோபந்த் தெங்கடி, மோரோபந்த் பிங்ளெ ஆகிய மூன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைத் தவிர அந்த அமைப்பு முழுவதுமே இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை ஏற்றுக்கொண்டு அவரிடம் முழுமையாக சரணடைய முடிவு செய்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, இந்திரா காந்தி 1977இல் நெருக்கடிநிலை அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்துவதாக அறிவித்ததால்தான், அவரிடம் முழு சரணாகதி அடையும் நிலையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். காப்பாற்றப்பட்டது.
இந்திரா காந்தியிடம் முழு சரணாகதி அடைய ஆர்.எஸ்.எஸ். தயாராக இருந்தது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுவதை உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களை நம்பகத்தன்மை வாய்ந்த வரலாற்று அறிஞர் ஏ.ஜி. நூரானி வழங்குகிறார்:  இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியவுடன் பதவி விலக மறுத்த இந்திரா காந்தி, பிரதமர் பதவியிலிருப்பவர்களுக்கு தேர்தல் விதிமுறைகளிலிருந்து விதிவிலக்குத் தரும் வகையில் அரசியலைப்புச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து அதை நாடாளுமன்றத்தில் தமக்கிருந்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நிறைவேற்றச் செய்தார். அந்தத் திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்புக் கூறியது. அந்தத் தீர்ப்புக்குப் பாராட்டுத் தெரிவித்து இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதிய தேவ்ரஸ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான தடையை நீக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கங்களுக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், நாட்டின் மேம்பாட்டிற்காக இலட்சக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சேவையை பிரதமருக்குத் தருவதாக 1976ஜூலை 16இல் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறிய தேவ்ரஸ், பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் உறவுகளை மேம்படுத்த இந்திரா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்று எழுதினார்.  வினோபா பாவெவுக்கு எழுதிய கடிதமொன்றில், பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியன தொடர்பாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் பங்கேற்க விரும்புவதாகக் கூறினார். தமது கடிதங்கள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே விடுத்தாரேயன்றி நெருக்கடி நிலையை நீக்க வேண்டும் என்றோ, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றோ கேட்கவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வமான ஹிந்தி ஏடான ‘பஞ்சஜன்யா’ (1975 டிசம்பர் 21) இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி அரசியலில் நுழைந்ததை வெகுவாகப் பாராட்டியது.

1977இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியும் அவரது கட்சியும் படுதோல்வி அடைந்த பிறகு, அவரை மன்னிக்கும்படியும் நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் செய்த தவறுகளை மறக்கும்படியும் ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு அறிவுரை கூறிய  தேவ்ரஸ், இந்திரா காந்தி 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரஸுடன் ஆர்எஸ்எஸ் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்திரா காந்தியிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருடைய கட்சியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குக் கருத்துநிலை வேறுபாடுகள் ஏதுமில்லை என்றும் கூறினார். அரசியல் போக்கிரியான சஞ்சய் காந்தி மரணமடைந்தபோது, ‘தேசிய அரசியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர்” என்றும் அதற்கு அவருடைய தனிப்பட்ட பண்புகளும் ஆளுமையும்தான் காரணம்’ என்றும் கூறினார். ஆர்எஸ்எஸ். இன் அதிகாரபூர்வமான ஆங்கில ஏடு  ‘ஆர்கனைஸர்’ (1983 ஜூலை 3) இந்திரா காந்தியை ‘ ஓர் அரசியல் ஹிந்து’ என்று பாராட்டியது. தேவ்ரஸ் மட்டுமல்ல, அவருக்கு முன்பிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரும்கூட இந்திரா புகழ் பாடத் தயங்கியதில்லை. பங்களாதேஷ் போர் முடிந்த பிறகு 1971 டிசம்பர் 22இல் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் “ இந்த சாதனைக்கான பெருமை பெருமளவுக்குத் தங்களுக்கே உரியது” என்று கூறினார். இந்திராவும் தமது  பதில் கடிதத்தில் எழுதினார்: “ தேச நலன் பொருட்டு காங்கிரஸ்-ஆர்எஸ்எஸ் ஒற்றுமை காக்கப்பட வேண்டும்”.   ( A.G.Noorani, The RSS and the BJP: The Division of Labour, pp 320-41).

நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட சரணாகதிப் போக்கு பற்றி சுப்பிரமணியன் சுவாமி கூறுவதை உறுதிப்படுத்த  நேர்மை தவறாத ஆராய்ச்சியாளர் ஏ.ஜி. நூரானியின்  ஆதாரபூர்வமான கூற்றுகள் ஒருபுறம் இருக்கின்றன. மறுபுறமோ, இந்திரா காந்தி, நெருக்கடி நிலையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு தமது தவறுகளுக்கு மனம் வருந்துவதற்குக் காரணமாக இருந்தவர்கள் காலஞ்சென்ற காஞ்சிப்  ‘பரமாச்சாரியார்’ சந்திரசேகர சரஸவதியும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஆவர் என்று சுப்பிரமணியன் சுவாமி மேற்சொன்ன கட்டுரையில் கூறுவதற்கு வேறு சான்றுகள் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை! ஆக, சுவாமியின் கூற்றுப்படி நெருக்கடிநிலை போன்றவற்றை எதிர்த்து முறியடிக்க மக்கள் போராட்டங்கள் ஏதும் தேவையில்லை; ‘துறவி’களும் தத்துவவாதிகளும் மட்டுமே போதும்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருந்த 2000ஆம் ஆண்டில் எழுதப்பட்டதுதான் மேற்சொன்ன கட்டுரை. அதில் சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார்: “ஜனநாயகத்தைக் காப்பதில் 1975-77இல் இருந்ததைவிட இன்று நாம் மேலும் பலகீனமான நிலையில் இருக்கிறோம்”. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார்: சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த சாதி-சார்பற்ற தலைவர்கள் யாரும் இப்போது இல்லை என்பது ஒரு காரணம். “ஊழியர்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு பாசிஸ்ட் அமைப்பு அதிகாரத்தின் நெம்புகோல்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இன்னொரு காரணம்… இந்த அமைப்பு, பாதுகாப்பாற்ற மதத்தொண்டர்களைக்கூடக் (missionaries) கொல்லத் தயங்காத லும்பன்களைக் கொண்ட முன்னணி அமைப்புகளைத் தோற்றுவித்துள்ளது”

இந்திய ஜனநாயகத்துக்குக் குழிபறிக்கும் நோக்கத்துடன்தான், இந்திய அரசமைப்புச் சட்டம் முழுவதையும் மாற்றியமைப்பதற்கு பாஜக முயற்சி செய்துவருகின்றது என்று இக்கட்டுரையில் எழுதும் சுவாமி, அந்தக் கட்சி வரலாற்றைத் திருத்தி எழுதத் தொடங்கிவிட்டது என்றும் அதனுடைய சகோதர அமைப்புகளான வி.எச்.பி., பஜ்ரங் தளம் ஆகியன சமுதாயத்தின் நுண் மட்டங்களில் அச்சந்தரக்கூடிய பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளன என்றும் கூறுகிறார். இப்படிப்பட்ட பாஜகவால் ஜனநாயகத்தைக் காப்பது பற்றி எப்படிப் பேச முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். 

இந்திய சமுதாயத்தை ஒரேபடித்தன்மையாக்குதல் என்பது மட்டுமீறிச் செல்கையில், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகிவிடும் என்று தமது கட்டுரையைத் தொடங்கும் அதே சுவாமிதான், அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும் என்பது போன்ற ‘ஜனநாயகக்’ கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

நெருக்கடிகாலக் கொடுமைகளின் வரலாற்றைச் சொல்வதில் ‘தி ஹிந்து’ குழுமத்தினருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், குறைந்தபட்சம், சுப்பிரமணியன் சுவாமி 2000த்தில் எழுதிய கட்டுரையைத் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும். அல்லது அதன் ஆங்கில மூலத்தை மறுவெளியீடாவது செய்ய வேண்டும்.




[1] பர்லானா, பின்னாளில் தமிழ்நாடு ஆளுநராக இருந்தவர்; அகாலிதளம் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாகவே பாஜகவின் அரசியல் கூட்டாளியாக இருந்துவருகின்றது. எனவே அகாலி தளத்தினராலும் நெருக்கடிநிலைக்காலத்தில் சங் பரிவாரத்தின் செயல்பாடுகளைப் பற்றி எழுத முடியாது.

புதன், ஜூன் 10

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை – ஆதவன் தீட்சண்யா


ப்போதெல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன்முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம் முடிந்து எங்கள் ஊருக்கு சுசீலாக்கா வரும்போது எப்படி இருந்தாளோ… அப்படி. அப்போது பிரபலமாக இருந்த யாரோ ஒரு நடிகையின் சாயலில் அவள் உடுத்தி இருந்தாள். அவளது சிகை அலங்காரம் கூட அப்படித்தான் இருந்தது. அடிக்கடி ஜடையை முன்பக்கம் எடுத்துப் போட்டுக்கொள்வாள். அதன் நுனியைப் பிரித்தும் பின்னிக்கொண்டும்தான் பேசுவாள். ‘அவளும் சினிமாக்காரியைப் போல் டோப்பா வைத்து இருக்கிறாளோ’ என்கிற சந்தேகம் எங்கம்மாவுக்கும்கூட முதலில் இருந்தது. ஆனால், ஒருநாள் சுசீலாக்கா பம்ப்செட்டில் குளித்துவிட்டு ஈரமுடியின் நுனியில் நீர் சொட்ட வருவதைப் பார்த்தப் பிறகு, அதிசயமாகிப் போனாள். உண்மையில் அவளுக்கு தரை தொட நீண்டு இருந்தது கூந்தல். பனங்கொட்டைக்கு நார் சிலுப்பியதுபோல முடி வைத்திருந்த எங்கள் ஊர் பொண்டுகளுக்கு, அவள் கூந்தல் அற்புதம்போல் தெரிந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

அவளது புருசன், மாமியார், குழந்தைகள் எல்லோரையும் விட்டுவிட்டு தன்னந்தனியாகத்தான் என் கனவுக்குள் வருவாள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் இவளைக் காணவில்லை என்று, கனவுக்கு வெளியே அலைந்து திரிந்து தேடிக்கொண்டு இருப்பார்களோ என்னவோ? ஆனால், அவள் விடியும் மட்டும் என் கனவுக்குள்தான் இருப்பாள். தூக்கம் இல்லாத வாட்டம் துளியும் இல்லாமல் ஆற்றோரத்துச் செடிபோல அப்படி ஒரு செழிப்பாக அவளால் மட்டும்தான் இருக்க முடியும்.

தனது கல்யாணச் சீதனத்தில் ஒன்றாகக் கொண்டுவந்து இருந்த மர்ஃபி ரேடியோவை அவள் எப்போதும் பிரிகிறவள் இல்லை. ஆனால் நாளாக நாளாக… அது அவளது நினைவில் இருந்து மறைந்துகொண்டு இருந்தது. பாட்டும் இசையும் ரீங்கரித்து வரும் சீர்மையில் அந்த ரேடியோவை டியூன் செய்வதில் சிரத்தை காட்டி வந்த அவள், இப்போது எல்லாம் பிரக்ஞையற்ற ஒரு மூதாட்டியின் அரற்றலைப்போல, அது கரமுரவென்று இரைந்துகொண்டு இருப்பதை பொருட்படுத்துவதே இல்லை. என்றாலும், எனது கனவுக்குள் வரும்போது ஒரு செல்லப் பிராணியைப்போல அந்த ரேடியோவைத் தன் மாரோடு அணைத்துப் பிடித்தபடி  எடுத்து வருகிறாள். ராத்திரியில் மரத்தடியில் உட்காரக்கூடாது என்று சாங்கியம் சொல்லி அதட்டுவதற்கு கனவுக்குள் ஒருவரும் இல்லையாதலால், நாங்கள் மாமரத்தடியில் அமர்ந்து ‘இரவின் மடியில்’ பாட்டு கேட்போம். இருவருமே கண்களை மூடிக்கொண்டு பாடல்களில் லயித்து இருக்கும் தருணங்களில், இசைவயப்பட்டு அவள் தன்னுடலை அசைத்துக் கொள்வது… நாட்டியத்தின் சில அடவுகளை நினைவூட்டும் நளினத்துடன் இருக்கும்.

புத்தகங்களோடு அவள் கனவுக்குள் வரும் நாட்களில் நாங்கள் சந்திக்கும் இடம் நூலகமாக இருப்பது பொருத்தம்தானே. நூலகத்தில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அந்த நூலகம் அவளுக்கென்றே தனியாக கட்டப்பட்டதைப்போன்ற அமைதியுடன் காணப்படும்.  அலமாரியின் வரிசை நேர்த்தி குலையாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை வைத்துவிட்டு, வேறு ஒன்றை எடுத்து அவள் படிக்கத்தொடங்கி விடுவாள். ஒன்று முடிந்து மற்றொன்று. அது முடிந்ததும் இன்னொன்று என… அவளது வாசிப்பு கண்ணி இழைத்துப் போய்க்கொண்டே இருக்கும். புத்தகங்களில் இருக்கிற வெவ்வேறு உலகங்களுக்குள் பாய்ந்து மறைந்து விடுபவளாக இருந்த அவள் திரும்பி வரும்வரை, நான் சைக்கிளை வைத்துக்கொண்டு காத்திருப்பேன். அவ்வப்போது தன் உடல் என்ற கூட்டுக்குத் திரும்புகிற அவள், இதோ கிளம்பிவிடலாம் என்பதுபோல என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்துவிட்டு மறுபடியும் மறைந்துவிடுவாள். அவளுக்குத் தெரியும், அந்தச் சிரிப்பு என்னை என்றென்றைக்கும் நிறுத்தி வைக்கும் என்று.

திடுமென அவள் நர்ஸ், டாக்டர், வக்கீல் என்று விதவிதமாக மாறிவிடுவாள். (ஒருநாள் கனவில் அவள் இந்திரா காந்தியைப்போல வந்ததைச் சொன்னபோது, உனக்கு கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று நையாண்டி செய்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.) வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு ஊரைச் சுத்திட்டு வர்றியா என்று அவளது புருசனோ, மாமியாரோ, கனவுக்குள் வந்து கேட்க முடியாது என்பதால், நாங்கள் மாலை வேளைகளில் நாடகம் அல்லது சினிமா பார்க்கப் போனோம். அல்லது கம்மாய்க்குப் போய் மீன் பிடித்து சுட்டுத் தின்றோம். தந்திக் கம்பத்தின் அடிப்பாகத்தில் காதுவைத்து ரீங்காரம் கேட்டோம். திரும்பும் பாதையின் மருங்கில் இருக்கும் இலந்தை மரத்தை நான் உலுக்குவேன். உற்சாகத்தோடு ஓடியோடி பழங்களைப் பொறுக்கி தன் மடியில் கட்டிக்கொள்ளும் அக்காவைப் பார்த்தால், ஒரு சிறுமியைப்போல் இருப்பாள்.

ஆனால் கனவுதானே என்று நான் அசட்டையாக இருந்துவிடுகிற நாட்களில், அக்காவின் நிழலுக்குள் மறைந்துகொண்டு கதிர்வேல் வந்துவிடுவான். கதிர்வேல், அக்காளின் புருசன் கனகவேலின் தம்பி. ‘வயித்துக்குள்ளப் பூந்து இருக்கிற கருவை மாத்திவைக்க முடியுமா… விதைக்கிறதுதான் முளைக்கும்… இந்தவாட்டி உம்மவன் வந்ததும் கேளு, என்னாடாப்பா விதைச்சேன்னு. அதை விட்டுட்டு பிள்ளைங்களுக்கு ஏதாச்சும் தீம்பு பண்ணினே… அப்புறம் மூத்தப் பொட்டச்சி நீ மொதல்ல சாகுன்னு வெட்டிருவேன் ஜாக்கிரதை’ என்று தன் தாய் மாரியாயியைப்  பார்த்து அவன் போட்ட அதட்டலில்தான் அவள் அடங்கி இருக்கிறாள். தான் பெத்தப்பிள்ளைதான் என்றாலும் கதிர்வேலைக் கண்டால் மாரியாயிக்குக் கொஞ்சம் பயம்தான். சரியான முரடன். நன்றாக படிக்கக்கூடியவனாய் இருந்தும், அவங்கப்பன் செத்தப் பிறகு பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக்கொண்டவன். ஒருத்தன் வெளியேறி வேலைக்குப் போனது போதும், நான் காட்டைப் பாத்துக்கிறேன் என்று பண்ணையத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டவன். பெரும்பாலும் ஊருக்குள் வரவே மாட்டான். காட்டுக் கொட்டாயோடு சரி. ராத்தங்கலும் அங்கேயேதான்.

நிஜத்திலும் அக்காவோடு கதிர்வேல் அதிகம் பேசி நான் பார்த்தது இல்லை. சாப்பாடு எடுத்துவைக்கும் நேரங்களில், ‘போதும் அண்ணி’, ‘இன்னுங் கொஞ்சம்’ என்பது மாதிரி ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசிக் கேட்டிருக்கிறேன். அப்பவும்கூட தண்ணிக்குள் பாயப்போகிற கொக்காட்டம் தலை குனிஞ்சே இருப்பான். வியாழக்கிழமையானால், வாரச்சந்தைக்குப் போகும்போது ‘எதுவும் வாங்கியாரணுமா அண்ணி’ என்று கேட்பதற்கு வாய் திறப்பான். அக்காவும் கொழம்புச் செலவு, பெரிய பிள்ளைக்கு நொறுவாய், கண் மை, பவுடர் டப்பா, சின்னவளுக்கு கிரேப் வாட்டர் அதுஇதுன்னு சொல்லி அனுப்புவாள். சந்தையில் இருந்து திரும்பும்போது, ஸ்கூல் வாசலுக்கே வந்து என்னை கேரியரில் உட்காரவைத்து ஊருக்குக் கூட்டி வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். வழி நெடுக நான்தான் லபலபன்னு ஏதாவது கேட்டுக்கொண்டு வருவேனேயொழிய, அவனாக எதுவும் பேசமாட்டான்.

அப்பேர்ப்பட்ட இந்த கதிர்வேல், என் கனவுக்குள் அவனாகவே வந்தானா அல்லது அக்காவே கூட்டி வந்தாளா என்ற குழப்பத்தை நான் அவர்களிடம் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. எனக்கு அவனைப் பார்க்க ஐயோ என இருந்தாலும், அக்காவுக்கும் எனக்குமேயான கனவில் அவனை ஒரு தொந்தரவாகவே கருதி முகத்தை சிடுசிடுப்பாக வைத்துக்கொள்வேன். அவன் வந்ததை நான் ரசிக்கவில்லை என்பதை அறியாதவள் அல்ல அக்கா. இந்த நேரத்தில் மெல்லிதாக ஒருமுறை சிரித்தால்கூட, நான் சமாதானம் அடைந்துவிடுவேன் என்பது தெரிந்திருந்தும் அவள் சிரிக்கமாட்டாள். தன் சிரிப்பை மலினமாக செலாவணி செய்கிறவள் என்ற தப்பான அபிப்ராயம் எனக்கு வந்துவிடக் கூடாது என்று சிரிக்காமல் தவிர்ப்பதில்தான் சுசீலாக்கா ஜெயிக்கிறாள். எனவே, அவர்கள் இருவரையும் தனித்திருக்க விட்டுவிட்டு, நான் சைக்கிள் ஏறி வேறு பக்கம் கிளம்பிவிடுவேன். இப்போது என் கனவில் நான் இருக்க மாட்டேன். அவர்கள் மட்டுமே இருப்பார்கள். எதுவும் பேசிக்கொள்ளாமலே எதிரெதிராக உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள் வெகுநேரம். விடியப்போகிறது என்று சொல்வதற்காக நான் சைக்கிள் மணியை அடித்து சமிக்ஞை எழுப்பிக்கொண்டே வரும்போது, அவன் என் கனவில் இருந்து வெளியேறிப் போயிருப்பான்.

இப்படித்தான் ஒருநாள் துணி துவைத்துக்கொண்டு வருவதாய் சொல்லிக்கொண்டு பம்ப் செட் கிணற்றடிக்கு நானும் அக்காவும் போகிறோம். எங்களைக் கனவில் யாரும் பின்தொடர்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்தாள் அக்கா. மோட்டார் ஓடிக்கொண்டு இருக்கிறது. வயலில் தாங்கொழுத்துப் பாய்ந்துகொண்டு இருக்கிறது தண்ணீர். மடை ஒன்றையும் திருப்பாமல் இலவ மரத்தடியில் படுத்துக்கிடந்த கதிர்வேல் எங்களைக் கண்டதும் எழுந்து வருகிறான். ஏதோ தீவிரமான யோசனையில் மூழ்கி இருந்திருப்பான் போல. அவனது முகம் இயல்பானதாக இல்லை. எப்போதும் சமன் இழக்காத அக்காவும்கூட அவனது தோற்றத்தைப் பார்த்து சற்றே பதற்றம் கொண்டவளாகிவிட்டாள்.

‘அவங்க எதிர்பார்க்கிறது எதுவோ, அது கிடைக்கிற வரைக்கும் உங்கள நிம்மதியா இருக்க விடமாட்டாங்க.  அது ஏன் கிடைக்கல அல்லது எப்படி கிடைச்சதுங்கிறது அவங்களுக்கு முக்கியமில்ல…’ என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தான். அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பது ஒருவேளை அக்காவுக்கு விளங்கியதோ என்னவோ, எனக்கு துளியும் புரியவில்லை. இருளைத் திரட்டிவைத்தது போன்ற ஓர் இறுக்கம் அங்கே நிலவியது. யாராவது ஒருவர் பேசிக்கொண்டே இருந்தால் சற்றே தேவலாம் எனத் தோன்றியது எனக்கு.

விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. அதற்குள் அவர்கள் என் கனவில் இருந்து வெளியேறித் தத்தமது இடங்களுக்குப் போகாவிட்டால், உள்ளுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதைச் சொல்லி அவர்களை எச்சரிக்கைப்படுத்தினேன். ஆமாம், வெளியேறியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முணுமுணுத்தவன் திடுமென ஓங்காரமெடுத்து அலறினான். என்னவென்று நாங்கள் விளங்கிக்கொண்டு அவனைத் தடுப்பதற்குள்ளாகவே அவன் சூரிக்கத்தியால் தன் வயிற்றை வகிர்ந்து ‘இதை வைத்தாவது அவர்களை சமாளித்துக்கொள்ளுங்கள்’ என்று ஒரு குழந்தையை எடுத்து, அக்காளிடம் கொடுத்துவிட்டு கனவில் இருந்து வெளியேறிப் போய்விட்டான். ரத்தமும் நிணமும் படிந்த உடலோடு வீறிட்டுக்கொண்டு இருந்த குழந்தையை அக்காவிடம் இருந்து வாங்கி நான் துடைக்கிறேன். ‘அது ஆண் குழந்தைதானே’ எனக் கேட்கிறாள் அக்கா. ‘ஆம்’ என்று நான் உறுதிப்படுத்தியதும், ‘அதைக்கொடு, அவர்களது மூஞ்சியில் விட்டெறிந்துவிட்டு வருகிறேன்…’ என்று என்னைத் தன்னந்தனியாய் விட்டுவிட்டு கனவில் இருந்து வெளியேறினாள் குழந்தையோடு.

எனக்கு ஏன் இப்படிக் குழப்படியான கனவுகளே வருகின்றன என்பது  மற்றும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது. ஆனால், எல்லாமே சுசீலாக்காவால் வந்த வினை. ஆய்ந்தோய்ந்துப் பார்க்காமல், ‘கவர்மென்ட் உத்தியோகம், நிலபுலம், ஊரிலேயே அவங்களுடையது மட்டும்தான் பில்லை வீடு, ரெண்டே ரெண்டு பசங்க மட்டுந்தான், நாத்தனார் நங்கை பிடுங்கல் கிடையாது’ன்னு பெத்தவங்க வற்புறுத்தியிருக்காங்க. பெத்தவங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. இந்தக்கா என்ன செய்திருக்கணும்? நிதானமா யோசித்து, ‘டைப்பிஸ்ட்டாகவோ, டீச்சராகவோ போகணும்னு எனக்கு ஆசை இருக்கு, ஏன் ஜில்லா கலெக்டர் ஆகிற யோகம்கூட எனக்கு இருக்கு, நான் மேற்கொண்டு படிக்கணும், அதனால் இந்த சதுர வெட்டுக் கிராப்புக்காரனை வேற இடம் பார்க்கச் சொல்லுங்க’ன்னு தைரியமா மறுத்து இருக்கணும். தன்னோட அறிவுக்கும் அழகுக்கும் அந்தப் பட்டாளத்தானை அக்கா கட்டியே இருக்கக்கூடாது. அட, பொண்ணு கேட்டு வந்துட்டான்னா… அதுக்காகக் கட்டிக்கணுமா என்ன?

எடுத்த எடுப்பிலேயே துளிகூட ஜோடிப்பொருத்தம் இல்லைங்கிறதை கண்திறவா சிசுவும் கூட கண்டுபிடிச்சிரும். அப்படி இருக்கிறப்ப ‘எனக்கேத்த ஆள் இவன் இல்லே’ன்னு பட்டுன்னு சொல்லி இருக்கணும். சரி… ஆள்தான் அப்படின்னா குணமாச்சும் தகுமா? வெத்தலைப் பாக்கு எடுக்கறதுக்கு முந்தியே டைப்பிங் கிளாஸுக்குப் போறதை நிறுத்தச் சொன்னானாமே… அதிலேயே அவன் புத்தி அறிந்து ‘முடியாது சாமி’களேன்னு அக்கா மறுத்து இருக்கணும். இவனைவிட்டால், வேறு மாப்பிள்ளையே வராமலாப் போயிருப்பான்? சுசீலாக்காவின் முகலட்சணத்துக்கு திருஷ்டிப்பொட்டு வெச்சாப்ல வந்து சேர்ந்தானே… இந்தக் காதறுந்த கனகவேல் புருசன் என்று. (இவனை என் கனவுக்குள் நுழைய விடாததற்கான காரணங்கள் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்). அவன் எப்படியும் கிடந்து தொலையட்டும், அவனால்தான் சுசீலாக்கா எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தாள். அந்த மட்டுக்கும் அவனை சகிச்சிக்கலாம்.

எட்டாங்கிளாஸ் படிச்சதுக்கே எங்கள் ஊரிலேயே அதிகம் படித்தவளாகிப்போனாள் சுசீலாக்கா. எங்கள் ஊருக்குள் முன்கொசுவம் வைத்து சீலை கட்டிய முதல் பெண் அவள்தான். முதுகுப் பக்கம் கொக்கிவைத்து ரவிக்கை போட்டவளும் அவள்தான். அது மட்டும் இல்லை, அவள் பயன்படுத்திய குளியல் சோப், புலிமார்க் சீயக்காய்ப்பொடி, வார்வைத்த செருப்பு, ஜடை பில்லைகள்…  இவை எல்லாம் எங்கள் ஊர் முன்பின் கண்டிராதவை. பிடித்தவர்களுக்குக் கொடுப்பதற்கு என்று மாராப்பில் பணத்தை மறைத்துவைத்திருக்கும் பழக்கத்தை அக்காவிடம் இருந்துதான் எங்கள் ஊர் பெண்கள் கற்றுக்கொண்டார்கள். ‘ரோசாப்பூ ரவிக்கைக் காரி’ படத்தில் தீபாவை சுற்றி ஊரே வேடிக்கை பார்க்குமே… அப்படி ஆகிவிட்டது. ஆனால், தனக்கும் ஊர்ப்பெண்களுக்குமான இடைவெளியை சுசீலாக்கா குறைக்க விரும்பினாள் போலும். அதற்காக, அவள் வெளியூர் போகும் தருணங்களைத் தவிர்த்து… மற்ற நாட்களில் ஊர்ப்பெண்களைப்போலவே விசேஷ அலங்காரம் எதுவும் செய்துகொள்ளாமல் இருந்தாள். ஆனால், அதுவும்கூட அவளை இன்னும் அழகாகக் காட்டியது என்றால், அது ரசனை இல்லாத அந்த கூமுட்டைக் கனகவேலின் குருட்டு அதிர்ஷ்டம்தான்.

நாங்கள் படிக்க வரும்போது, சுசீலாக்கா அவங்க வீட்டு வாசலுக்கும் பரவிக் காயும் லைட் வெளிச்சத்தில் பாய் விரித்து அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டோ இல்லையானால் ராந்தலின் கண்ணாடியை திருநீறு தேய்த்துத் துடைத்தபடியோ இருப்பாள். அவள் செய்யும் வேலைகளுக்கு மேஸ்திரியாட்டம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் கனகவேல் முணுமுணுவென்று எதையாவது சொல்லிவிட்டு அவனே சிரித்துக்கொள்வான். அவள் ரசிக்கத்தக்கதாக அவன் பேச்சு இருப்பதில்லை போலும். சில நேரங்களில் நாங்கள் படிப்பதை எங்கள் ஹெச்.எம் மாதிரி பின்பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு மேற்பார்வை செய்வான். சிகரெட் பற்றவைத்துக்கொள்வதும் உண்டு.

பட்டாளத்தில் இருந்து தூக்கி வருகிற அந்தப் பெரிய இரும்புப் பெட்டியில் பாதிக்கும் மேல் சிகரெட்டும் சீமைச்சாராய பாட்டிலும்தான் இருக்கும்னு சிங்கப்பல்லன் மகன் சொல்வது நிஜம்தானாக்கும். கருமம், இவன் தன்கிட்ட நெருங்கி நெருங்கிப் பேசறப்ப, அந்த நாற்றத்தை அந்தக்கா எப்படித்தான் தாங்கிக்குமோ… த்தூ. காற்று பலமா வீசுறப்ப அக்காகிட்ட இருந்து கிளம்பி வரும் வாசனையில் படிக்கும் கவனம் குலைவதை நான் யார்க்கிட்டயும் சொல்லியதே கிடையாது. சொன்னால் அவ்வளவுதான், ஒம்பதாவது படிக்கறப்பவே உனக்கு இந்த நெனப்பான்னு நான் நினைக்காததை எல்லாம் நினைச்சதாகச் சொல்லி, எங்கப்பா சாட்டைக் குச்சியில் விளாசிடுவார்னு எனக்குத் தெரியும். ஆனால், குடிகுரா பவுடரும், மஞ்சளும், மல்லிகையும் சேர்ந்த வாசமாகத்தான் சுசீலாக்கா எனக்குள் எப்போதும் கமழ்ந்திருக்கப் போகிறாள் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்திருக்கவில்லை. அவளை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் என்னைச் சுற்றி பரவத் தொடங்கும் அந்த வாசனையை வீண் பிரமை என்று நான் புறந்தள்ளிவிடுவதில்லை.

படித்தப் பெண் ஒருத்தியின் முன் வாய்விட்டு எதையாவது தப்பாகப் படித்துவிடுவோமானால், மானம் போய்விடும் என்ற எச்சரிக்கை உணர்வு ஆட்டியது எங்களை. அதுவும் இல்லாமல் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளாக்கும் என்று அவளிடம் பேர் வாங்கும் ஆசையும் உள்ளுக்குள் இருந்தது. அதனால், பொங்கலுக்கு சபையேறும் சமூக நாடகத்துக்கு ஒத்திகை பார்ப்பவர்களைப்போல, மனசுக்குள்ளேயே படிப்பது, வெளிச்சம் தெரிகிற தூரம் வரை நடமாடிக்கொண்டே படிப்பது, புத்தகத்தைப் பார்க்காமல் கண்ணை மூடியபடி அதுவரை படித்ததை சொல்லிப்பார்ப்பது என்று ஆகிவிட்டோம். அவள் எங்களைக் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும், நாங்கள் அவளைப் பார்த்துக்கொண்டுதான் படித்தோம். அவள் இன்னாருக்கு என்று இல்லாமல் எங்களைப் பார்த்து எப்போதாவது பொதுவாக சிரித்துவைப்பாள். அந்தச் சிரிப்புக்கு இன்னும் நாலு பாடம் படிப்போம்.

கல்யாணமாகி ஒருமாதம் கழித்து கனகவேல் தன் முரட்டு கால்ஜோடுகளை மாட்டிக்கொண்டு பட்டாளத்துக்குக் கிளம்பிவிட்டான். சிகரெட் பாக்கெட்டும் சீமைச்சாராய பாட்டிலும் தீர்ந்திடுச்சுபோல. ‘போய் வாங்கி ரொப்பிக்கிட்டு வந்துருவான் அடுத்த வண்டியில்’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால், அவன் வர ஒரு வருடமாகும் என்று சுசீலாக்கா சொன்னபோது, ஒழியட்டும் சனியன் என்று இருந்தது. வராமலே இருந்தால்கூட நல்லதுதான், அக்கா நிம்மதியாக விரல் நோகாமல் பூ தொடுத்துக்கொண்டு இருந்துவிடுவாள்.

இப்போதெல்லாம் சுசீலாக்கா வீட்டு வாசலுக்கே போய்ப் படிக்கத் தொடங்கிவிட்டோம். ச்சே, அக்கா மாதிரி அழகா, பிரியமா மனசுக்குப் பிடிச்ச வாசனையோடு சொல்லித் தருகிற ஒரு டீச்சர் இருந்தால், படிக்க எவ்வளவு நன்றாக இருக்கும்? அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் படித்துக்கொண்டே இருக்கலாம். அந்த டீச்சர் பத்தாம் வகுப்புக்கு வரமாட்டாள் என்றால், எப்படியாவது ஃபெயிலாகி ஒன்பதாவதிலேயே தங்கிவிடலாம். ஆனால், அப்படி ஒருத்தியை டீச்சராக ஏற்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டாமலே போய்விட்டது!

முழுப் பரீட்சை லீவ் விடுவதற்கும், சுசீலாக்கா பிரசவத்துக்குத் தாய் வீடு போவதற்கும் சரியாக இருந்தது. எனக்குத்தான் பித்து பிடிப்பதைப் போலாகிவிட்டது. எங்கே இருந்தோ திடீரென்று வந்து ஜடையை முன்பக்கம் தூக்கிப் போட்டபடி சிரிப்பதுபோல் இருந்தது. வெறும் காற்றில் அவளது உருவங்களைக் கண்டடைந்து பித்தானேன். பிள்ளைகள் இல்லாத பள்ளிக்கூடம் போல் ஊரே வெறும் மைதானமாகத் தெரிந்தது.

சுசீலாக்கா குழந்தையோடு வந்தபோது, பத்தாவது கால் பரீட்சை தொடங்கி இருந்தது. அக்கா இப்போது வேறு மாதிரி தெரிந்தாள். அவளோட முகத்தில் இருந்த சிரிப்பில் கொஞ்சத்தை குழந்தைக்குக் கொடுத்துவிட்டாள்போல. அது எப்போது பார்த்தாலும் தூங்கிய நேரம் போக பொக்கையாகச் சிரித்துக்கொண்டே இருந்தது. வாழ்வரசி என்று பெயர் வைத்திருந்தாள். பாலூட்டவும், குளிப்பாட்டவும், தூங்கவைக்கவும், துணிமணி அலசவுமே அக்காவுக்கு நேரம் சரியாக இருந்தது. அதனால், அக்காவைத் தொல்லை பண்ணவேண்டாம் என்று நாங்கள் மீண்டும் கம்பத்தடிக்கே படிக்க வந்துவிட்டோம். ‘இந்த வருஷம் பப்ளிக் எழுதப்போறீங்க, ஏதாச்சும் சொல்லித்தரலாம்னா முடியமாட்டேங்குதே’ என்ற அங்கலாய்ப்பில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லித் தருவாள். ஒருநாள் அதுவும் கெட்டது.

அந்த கனகவேல் அதே இரும்புப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு, ‘இப்பத்தான் லீவ் கிடைச்சது’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்தான். ”விக்ரகமாட்டம் இருக்கு கொழந்தை. அதைக் கொஞ்ச மனசில்லாம, தலைச்சம்பிள்ளையே பொட்டையாப்போச்சேன்னு குதிக்கிறா அந்த மாரியாயி. பத்தாததுக்கு இப்ப மவனும் வந்துட்டான், இன்னும் என்னென்ன ஆட்டங் காட்டப்போறாளோ” என்று அன்றிரவு எங்கப்பாவிடம் புகார் தெரிவித்தாள் அம்மா.

இந்த முறை அவன் எனக்கு ஒரு பேனா கொடுத்தான். ‘உங்கக்காதான்டா உனக்கு வாங்கியாரச் சொல்லி எழுதி இருந்தா’ என்று சொத்தைப்பல் தெரிய சிரித்தான். அவன் இருந்த காலம் முழுவதும் அக்காவைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

கனகவேல் கிளம்பிப் போன கொஞ்ச நாளிலேயே சுசீலாக்கா முன்பு மாதிரியே வாந்தி எடுத்தாள். சுருண்டு சுருண்டு படுத்துக்கொண்டாள். இந்த முறை பிரசவம் இங்கேயே நடந்தது. அப்பன் ஜாடையில் இருக்கிறது குழந்தை என்றார்கள். அதனாலேயே, எனக்கு அதைப் பிடிக்காமல் போய்விட்டது. தகப்பனும் பிள்ளைகளும் பாசமான ஓர் அக்காவை என்னிடமிருந்து தூரம் கடத்திப்போவதை எப்படித்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? அதற்காக மாரியாயி போல, ‘இங்கதான் வந்து பொறக்கணும்னு இந்தச் சனியனை யாரு வேண்டி அழுதா… அதான் ஏற்கெனவே ஒரு பொட்டை இருக்குதே’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு கல்நெஞ்சம் இல்லை. அந்த கதிர்வேல் மட்டும் இல்லேன்னா, இந்நேரம் மாரியாயி குழந்தையை எதுவும் பண்ணியிருப்பாள் என்பாள் அம்மா.

சுசீலாக்கா ரொம்பவும் மெலிந்துகொண்டே இருந்தாள். கண்ணில் வற்றாமல் இருக்கும் அந்த வாஞ்சையை வைத்துதான் அவளை அடையாளம் காண முடியும்போல் இருந்தது. நஞ்சானும் குஞ்சானுமாக ரெண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவளாக இருந்தாள். பொழுதுக்கும் அவளுக்கு வேலை சரியாக இருந்தது. அவள் இருக்கும் தாவாரத்தில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டே இருந்தது.

பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது நான் லைப்ரரியில் எடுத்து வந்து தருகிற மூன்று புத்தகங்களையும் ஒரே நாளில் படித்து முடித்த அவள், இப்போதெல்லாம் எடுத்து வந்து ஒரு மாசமாகியும் ஒன்றையும் படிக்க முடியாமல் வெறுமனே ரெனியுவல் மட்டுமே செய்து கொண்டிருந்தாள். சிலோன் ரேடியோவைத் திருப்பி இரவின் மடியில் கேட்டுக்கொண்டு, கூடவே ஹம் செய்கிற அக்காவை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. இப்போது இருக்கிற அக்கா கனகவேலின் பொண்டாட்டி, அவனது ரெண்டு பிள்ளைகளுக்குத் தாய். மாரியாயின் மருமகள்.

இப்போதெல்லாம் கதிர்வேல் அடிக்கடி வீட்டுக்கு  வரத் தொடங்கி இருந்தான். ‘பொட்டையப் பெத்தவளே, புருசன் வூட்ட அழிச்சவளே’ என்று எந்நேரமும் மொணமொணத்துக்கொண்டு இருக்கிற அவனது அம்மா மாரியாயி, அவன் இருக்கும் நேரங்களில் வாயடக்கிக் கிடப்பது அக்காவுக்கும் ஆறுதலாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அக்காளின் மூத்தப் பிள்ளையை உட்காரவைத்து ரவுண்ட் அடிப்பதற்காக அவன் தனது சைக்கிளில் புதிதாக பேபி ஸீட் பொருத்தி இருந்தான். அந்தப் பிள்ளையும் முட்டைக் கண்ணை உருட்டிக்கொண்டு அவனிடம் ஒட்டிக்கொள்ளத்தான் செய்தது. ராச்சாப்பாடு முடிந்ததும் கொட்டாய் திரும்புவதற்கு முன்புபோல அவன் அவசரம் காட்டுவது இல்லை. பிள்ளைகளில் ஏதாச்சும் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வந்து, லைட் வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருக்கிற எங்களிடம் விளையாட்டு காட்டிவிட்டு பின்னேரத்தில்தான் கிளம்பிப்போனான். அந்த மாதிரியான நேரங்களில் அக்கா, இன்னொரு பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு வெளித் திண்ணையில் உட்கார்ந்து இருப்பது கோட்டுருவாய்த் தெரியும். கதிர்வேல் கிளம்பிப் போன பிறகும் அக்கா வெகுநேரம் அங்கேயே உட்கார்ந்திருப்பதை நான் பல நாட்கள் கண்டிருக்கிறேன்.

இந்த முறை கனகவேல் வந்து ஒரே வாரத்தில் திரும்பிப் போக வேண்டியிருந்தது. ரீ-கால் செய்து தந்தி வந்ததை அடுத்து அவன் கிளம்பிப் போன பிறகு, அக்கா பழைய உற்சாகத்துக்குத் திரும்பியிருந்தாள். காணாமல் போயிருந்த அவளது சிரிப்பு மீண்டும் வந்து விட்டிருந்தது. அவளது வாசனையால் காற்று பழையபடி மணந்தது. ‘இந்த வருஷம் பப்ளிக், கவனமாப் படி’ என்று சொல்லும்போது அக்கா எங்களது டீச்சர்களில் ஒருத்தியாக மாறிக்கொண்டிருக்கிறாளோ என்று நான் கொண்டிருந்த கவலை இப்படியாக நீங்கியது. முன்புபோல வீட்டுப் புழக்கடையில் அல்லாமல், துணிகளைத் துவைத்து வர இப்போது பம்ப்செட் கிணற்றுக்குப் போகத் தொடங்கினாள். அங்கே கதிர்வேல் இருந்தான்!

அக்கா தன் மூன்றாம் பிரசவத்தில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். அது என் கனவில் கதிர்வேலு தன் வயிற்றைக் கிழித்து எடுத்துத் தந்த குழந்தைதான் என்று நான் உறுதியாக நம்பினேன். அதேவேளையில் நிஜத்தில் பிறந்த இந்தக் குழந்தையைத்தான் அவன் தன் வயிற்றைக் கிழித்து எடுத்துக் கொடுப்பதுபோல கனவில் கண்டுவிட்டேனோ என்கிற குழப்பமும் எனக்கு இருந்தது. எப்படியாயினும், தனக்கு என்று பெற்றுக்கொள்ளாத அந்தக் குழந்தையை அக்கா எப்படி வளர்க்கப் போகிறாள் என்று என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. பசியால் வீறிடும் குழந்தைக்குப் புகட்டாமல், நெறி கட்டிய தன் மார்களைப் பிதுக்கி சுவற்றின் மீது பாலைப் பீச்சியடிப்பவளாக என் கனவில் வந்த அக்காவை நான் நிஜத்தில் பார்த்துவிடக் கூடாது என்பதே  என் கவலையாக இருக்கிறது!

நன்றி: ரொம்பநாளைக்கு முந்தைய ஆனந்தவிகடன்

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...