ஞாயிறு, ஜூன் 8

‘1984' - எஸ்.வி.ராஜதுரை


‘உயிர் எழுத்து' ஜூன் 2014 இதழில் வெளிவந்த இக்கட்டுரை, பொற்கோவில் மீதான தாக்குதல் நடந்த நாளிலிருந்து 30 ஆண்டுகளும், ‘அவசர நிலை' அறிவிக்கப் பட்ட  நாளிலிருந்து 39 ஆண்டுகளும் நிறைவுறுவதை மனதில் கொண்டு, கூடுதலான தகவல்களுடன் விரிவுபடுத்தப் பட்ட வடிவத்தில் இங்கு இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகின்றது -எஸ்.வி.ஆர்.)


1
‘இறந்தவர்கள் நாள்' என்று ஆண்டு தோறும் மெக்ஸிய மக்கள் கொண்டாடும் திருவிழாவொன்றுள்ளது. அன்று அவர்கள் வண்ணவண்ணமாய், எலும்புக் கூடுகள் போன்ற உடைகளையும் மண்டையோடு போன்ற முகமூடிகளையும் அணிந்து, ஆட்டமும் பாட்டமுமாக அந்த நாளைக் கழிப்பர். இறந்தவர்கள் உயிரோடு இருக்கையில் என்ன உணவுவகைகளை விரும்பிச் சாப்பிட்டு வந்தார்களோ அவையும் அந்தந்த வீடுகளில்  சமைக்கப்படும்; இன்னும் உயிரோடு இருப்பவர்கள் உண்பதற்காக பெரிய கை கால் எலும்புகளின் வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளும் (‘இறந்தவர்களின் ரொட்டி') மிகப் பக்குவமாகச் சுடப்பட்டு  உணவு மேசை மீது அடுக்கியோ, வரிசைப்படுத்தியோ வைக்கப்படும்; சர்க்கரையால் உருவாக்கப்பட்ட மண்டையோடுகளும்தான்.   துலுக்கமல்லிப்  பூக்களால் அலங்கரிப்பட்ட வீடுகளில் அவற்றை உண்கையில் ஏராளமான ‘ ஜோக்குகள்' சொல்லப்படும்; காலியாகும் மது பாட்டில்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

உலகப் புகழ்பெற்ற கவிஞரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஒக்டோவியா பாஸ் இந்தியாவுக்கான மெக்ஸியத் தூதராகச் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். அந்த நாள்கள் எப்படிப்பட்டனவாக இருந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் கொண்டவராக இருப்பவர் 1984இல் அந்தத் தூதரகத்தின் பண்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்த மிராபெல் என்னும் பெண்மணி. அவரையும் டெல்லியிலுள்ள ‘இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தில்' (ஐஐடி) பணியாற்றி வந்த பேராசிரியர் முனைவர் மோகன் சிங்கின் துணைவியாரும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகமொன்றில் வேலை செய்துவந்தவருமான நெல்லி கவுர் என்னும் மற்றொரு பெண்மணியையும் நெருக்கமான நண்பர்களாக்குகின்றது  தற்செயலாக நடந்தவொரு சந்திப்பு.  ஜஸ்ப்ரீத் சிங் (Jaspreet Singh)  எழுதியுள்ள ‘ஹீலியம்' (Helium) என்னும் ஆங்கில நாவலிலுள்ள (Bloomsbery, London, 2013)முக்கிய கதாபத்திரங்களே மிராபெல், மோகன் சிங், நெல்லி ஆகியோர்.

1984 நவம்பர் 14இல் வந்த ‘இறந்தவர் நாள்' கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள தன் வீட்டிற்கு வருமாறு நெல்லி, அவரது கணவர், அவர்களது இரு குழந்தைகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கிறார் மிராபெல். ‘இறந்தவர்கள் நாள'ன்று தனது  குழந்தைகள் அணிந்துகொள்வதற்காக வண்ணமிகு சிறப்பு ஆடைகளைத் தைத்து வைக்கிறார் நெல்லி. குழந்தைகள் அல்லவா, இன்னும் இரண்டு வாரங்கள் முடியும் வரை அவர்களால் காத்திருக்க முடியவில்லை. மகளுக்குத் தைக்கப்பட்டிருந்த ஆடையை மகனும், அவனுக்குத் தைக்கப்பட்டிருந்த ஆடையை மகளும் வேடிக்கைக்காக அணிந்து கொண்டு ‘இறந்தவர் நாள்' கொண்டாட்டத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அது, அவர்களில் ஒருவருக்கான உண்மையான ‘இறந்தவர் நாளா'கப் போகின்றது என்பதை அப்போது  யாரும் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை.

 பேரண்டம் முழுவதிலும் விரவியுள்ள, மிக அபூர்வமான பண்புகளுடைய ‘ஹீலியம்' வாயு பற்றிய ஆராய்ச்சி மோகன் சிங்கின் பல்வேறு ஆராய்ச்சிகளிலடங்கும். அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராக, அறிவியலாளராகப்  பணியாற்றி வந்த அனுபவமும் அவருக்குண்டு. நேர்மைக்குப் பெயர் போன அவர் வகுப்பறையில் மாணவர்களைத் தனது நண்பர்களாகவே பாவிப்பவர்.  1984இல் டெல்லியில் காவல் துறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரின் மகன் ராஜ்குமார், முனைவர் மோகன் சிங்கின் மிக அபிமான மாணவன். அவரைப் பொருத்தவரை அவன் வகுப்பறையில் மட்டுமல்ல, தனது இல்லத்திற்கே அடிக்கடி அழைக்கப்படக்கூடிய அளவுக்கு அவரது அபிமானத்தைப் பெற்றிருந்தவன். சீக்கியர்களுக்கே உரிய தலைப்பாகையுடனும் தாடியுடனும் எப்போதும் காட்சியளிக்கும் மோகன் சிங்கின் மதப்பற்று, ஆன்மிகமயமானது. இந்தியாவில் சாதியமைப்பை எதிர்த்தவர்கள் பற்றியோ, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் அரசு பன்முகப் பண்பாடுகளையும் பல்வேறு மதப் பிரிவினரையும் அரவணைத்துச் சென்றது பற்றியோ எந்தப் பாடப்புத்தகத்திலிருந்தும் பள்ளி வகுப்பறையிலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருந்ததைப் பின்னாளில் நினைவுகூர்கிறான் ராஜ்குமார். அப்போதுதான் அவனது நினைவுக்கு வருகின்றன சில விஷயங்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்று விழுக்காடுகூட இல்லாத சீக்கியர்கள், தங்களைப் பெரும்பான்மை மக்களாகவே கருதும் செருக்குடையவர்கள்; சிங்கம் போல நடப்பவர்கள்; தங்களைப் பற்றிப் பிறர் சொல்லும் ஜோக்குகளை (‘சர்தார் ஜோக்குகள்') தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டு சிரிக்கும் பெருந்தன்மையுடையவர்கள். இன்றைய நவீன டெல்லி நகரத்தின் உருவாக்கத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள் சீக்கியக் காண்ட்ராகடர்கள்தான். ஆனால், அவன் பள்ளியில் படிக்கும்போதும் சரி, பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோதும் சரி, புதிர் நிறைந்த வகையில் அவனது வகுப்புகளில் எப்போதுமே இரண்டே இரண்டு சீக்கிய மாணவர்கள்தான் இருந்திருக்கின்றனர்.

சீக்கியர்களைப் பொருத்தவரை 1984 ஜூன் 6 ஒர் இருண்ட நாள். அன்று அமிர்தஸரஸ் பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள், தங்களது ஐந்தாவது குருவின் தியாக நாளைக் கொண்டாட வந்திருக்கின்றனர். ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்று சொல்லப்படும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இந்திரா காந்தி ஆணை பிறப்பித்திருந்தார். அகாலி தளம் கட்சியை உடைப்பதற்காக, இந்திரா காந்தியால் அரசியல், நிதி வழங்கப்பட்டு வந்த சாந்த் பிந்தரன்வாலெ, ஒரு கட்டத்தில் இந்திராவுக்கு எதிராகத் திரும்பிவிட்டார். அவரால் வளர்க்கப்பட்ட, பிரிவினைவாத தீவிரவாதிகள் பொற்கோவிலில் பதுங்கியுள்ளதால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் பின்னர் கைது செய்யவும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  இந்திரா காந்தியின் அரசாங்கம் விளக்கம் கூறியது. அந்த நடவடிக்கைக்கு என்னதான் நியாயமோ, நியாயமின்மையோ இருந்தாலும், இரகசியமாகத் திட்டமிடப்பட்டு, முன்னறிவிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட முறை மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களில் போய் முடிந்தது. பழைய செய்தியேடுகளும் ஆவணங்களும் மனித உரிமை இயக்கங்களின் அறிக்கைகளும் தெரிவிக்கும் உண்மை இவை: பொற்கோவிலுக்கு வந்தது வெறும் இராணுவப் படைகள் மட்டுமல்ல; போரில் பயன்படுத்தப்படும் டாங்கிகளும்தான். பொற்கோவிலுள்ள ‘அகால் தக்' முற்றிலுமாக நாசமாக்கப்பட்டது; கருவூலம் கொள்ளயடிக்கப்பட்டது; அங்கிருந்த அருங்காட்சியகத்தில் இருந்த பழங்காலச் சுவடிகள் அழிக்கப்பட்டன; பொற்கோவில் முழுவதையும் ஆயிரக்கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன; கொல்லப்பட்ட சாதாரணக் குடிமக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரை இருக்கும்: ஏராளமான ஆண்கள், கைகள் அவர்களது தலைப்பாகைத் துணிகளால் கட்டப்பட்ட்டிருக்க, இழுத்துச் செல்லப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்; இன்னும் ஆயிரக்கணக்கானோர் ‘காணாமல் போக'ச் செய்யப்பட்டனர். ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்னும் கட்டுக் கதை புனையப்பட்டதன் விளைவுகளில் இந்திய வரலாற்றில் கறைபடிந்த இந்த நிகழ்வுமொன்று. தனியொரு மனிதர் பற்றிய இத்தகைய கட்டுக்கதைகள், புனைவுகள், அவரை இந்தியாவின் ‘இரட்சகராக'சித்திரிக்கும் புனைவுகள் இன்றும் தொடர்கின்றன என்றால் அவற்றுக்கு முன்னோடிகளாக இருந்தவை இந்திராவே ‘இந்தியா' என்று செய்யப்பட்ட பிரசாரங்கள்.  அவை, அவரை அதிமானுடராகவும் கடவுளாகவுமே மாற்றிவிட்டன!

பொற்கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி இந்த நாவல் கூறும் தகவல்களுக்கு அப்பால் வேறு பல உண்மைகளும் உள்ளன : சாந்த் ஜர்னால் சிங் பிந்தரன்வாலாவையும் ஆயுதம் தாங்கிய அவரது ஆதரவாளர்கள் 200 பேரையும் பிடிப்பதற்காக இந்திய இராணுவம் பொற்கோவிலோடு சேர்த்து பஞ்சாப் முழுவதிலும் - குறிப்பாக பாட்டியாலா, மோகா, முகாட்சார், டார்ன்டார் ஆகிய நகர்ப்புறங்களிலிருந்த - 32 குருத்வாராக்கள் மீதும் ஒரே  நேரத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலை பாஜகவும் ஆர்எஸ்.எஸ். அமைப்பும் முழுமையாக ஆதரித்தன. அதன் காரணமாகத்தான், மொத்த வாக்காளர்களில் ஏறத்தாழ 65% சீக்கிய வாக்காளர்கள் உள்ள அமிர்தஸரஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜகவின் முக்கியத் தலைவர்களிலொருவரான அருன் ஜெய்ட்லி 2014 தேர்தலில் - மோதி அலை பஞ்சாபிலும் வீசிக் கொண்டிருந்தபோது - தோற்கடிக்கப்பட்டார். பொற்கோவில் மீதான தாக்குதல் நடந்து முப்பதாண்டுகள் நிறைவுற்றுள்ள போதிலும், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளிழப்புகள் ஆகியன பற்றிய முழுமையான விவரங்களை இந்திய அரசாங்கம்  இதுவரை வெளியிடவில்லை. கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த குடிமக்களின் எண்ணிக்கை,  பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இதுவரை சொல்லவில்லை. பொற்கோவிலிலிருந்து பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ‘போர்க் கைதிகள்' என்றும் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்றும் சிறு எண்ணிக்கையொன்றை அரசாங்கம் குறிப்பிட்டது. பொற்கோவிலில் (ஹர்மிந்தர்), சீக்கியர்கள் மிகப் புனிதப்  பகுதி என்று கருதும் ‘தர்பார் சாகிப்'பில் மட்டும் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட, கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கூடச் சொல்லவில்லை. தங்களது ஐந்தாவது  குரு அர்ஜுன் தேவின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு பொற்கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான குற்றமற்ற சீக்கியர்கள் மீது ஏன் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை இதுவ¨ரைலும் தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளக் குமுறலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது சீக்கிய சமுதாயம்.

ஜூன் 7 இராணுவத் தாக்குதல் பற்றி இந்திய அரசாங்கம் வெளியிட்ட ஒரே ஆவணம், 1984 ஜுலை 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அது தாக்கல் செய்த ‘வெள்ளை அறிக்கை' மட்டுமே. தனது சொந்தக் குடிமக்கள் மீதே இந்திய இராணுவம் ஏன் அந்தப் போர்த் தாக்குதலை நடத்தியது என்னும் கேள்வியை உலக நாடுகள் எழுப்பிக் கொண்டிருந்தன; தங்கள் புனிதத் தலத்தைக் காப்பதற்கு ஆயுதமேந்திப் போராடுவதும் உயிர் துறப்பதும் சீக்கியர்கள் கடந்த முன்னூறு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் மரபு என்பதை அறிந்திருந்தும், ‘சுத்தமான, தவிர்க்கமுடியாத நடவடிக்கை' என்று அந்த இராணுவ நடவடிக்கையைச் சித்திரித்த இந்திய அரசாங்கத்தின் ‘வெள்ளை அறிக்கை', இந்திய மக்கள் தொகையில் இரண்டே விழுக்காடு உள்ள சீக்கியர்கள் மீது பெரும்பான்மை மக்கள் வெறுப்புக் கொள்ளும்படி செய்வதற்காகவும், அரசாங்க, ஆளும் கட்சி ஆதரவாளர்களாக இருந்த அதேவேளை மதரீதியாக மனம் புண்பட்டிருந்த சீக்கியர்கள் பலரைத் திருப்திப்படுத்துவதற்காகவும்  இந்திய அரசாங்கம், தூர்தர்ஷன்,ஆளும் வர்க்க ஊடகங்கள், இராணுவம் ஆகியன கூட்டுச் சேர்ந்து பரப்பி வந்த பொய்த் தகவல் பிரசாரத்திற்கிடையே அந்த ‘வெள்ளை அறிக்கை' வெளியிடப்பட்டது.

பொதுவாக சீக்கிய மக்களாலோ, குறிப்பாக நல்லெண்ணம் படைத்த இந்தியக் குடிமக்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியோராலோ, இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத அந்த ‘வெள்ளை அறிக்கை', அந்தத் தாக்குதலின் போது 83 இராணுவ அதிகாரிகளும் படைவீரர்களும் கொல்லப்பட்டனர் என்றும், 294 பேர் காயமடைந்தனர் என்றும் கூறியது ( சிறிதுகாலம் கழித்து, இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, ஏறத்தாழ 700 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கூறினார்). அந்த இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட குடிமக்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் எண்ணிக்கை 516 என்று அந்த ‘வெள்ளை அறிக்கை' கூறியது. இந்த எண்ணிக்கையில் ஒரு பூஜ்யத்தைச் சேர்க்க மறந்துவிட்டது என்று தனது புத்தகமொன்றில் எழுதிய காலஞ்சென்ற புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங், அப்படிச் சேர்த்திருந்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐயாயிரம் என்னும் முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும் என்று கூறினார்.

வெய்யில் தகிக்கும் அந்தக் கோடை கால ஜூன் மாதத்தில், பொற்கோவிலுக்குள் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானோரின் சடலங்கள் உடனடியாக எடுத்துச் செல்லப்படாமல் அழுகி நாறத் தொடங்கியதால்,  துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலஞ்சமும் மது பாட்டில்களையும் கொடுத்து அங்கு வரவழைத்தனர் அரசாங்க அதிகாரிகள்.  அந்தச் சடலங்களைக் குப்பை வண்டிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு செல்லும் அவப்பேறுக்கு ஆளான துப்புரவுத் தொழிலாளர்கள், மட்டு மீறிக் குடித்து போதையேற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. கைகால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் அரைகுறையாகக் கிழிந்த துணிகளால் போர்த்தப்பட்டிருந்த அந்த சடலங்கள் அவசரம் அவசரமாச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அடையாளம் காணப்படாமலும் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமலும்  கொத்துக் கொத்தாகவும் அவை  எரிக்கப்பட்டன.  ஜலந்தர்  நகரிலிருந்து சீக்கியப் பொதுமக்களால் அழைத்து வரப்பட்ட மருத்துவர்களால் சில சீக்கிய இளைஞர்களின் சடலங்களை மட்டுமே பிரேதப் பரிசோதனை செய்ய முடிந்தது. அந்த இளைஞர்களின் கைகள் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகைத் துணிகளால் பின்புறமாகக் கட்டப்பட்டு,  நேருக்கு நேர் குறி வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததை அந்த மருத்துவர்கள் கண்டறிந்தனர். ‘அரசனைவிட அரசு மீது கூடுதல் விசுவாசம்' கொண்டிருந்த அரசு அதிகாரிகள் பொற்கோவிலிலிருந்த 21 சிறுவர்களை (4 வாது முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள்) ‘அபாயகரமானவர்கள்', ‘மிக அபாயகரமானவர்கள்', ‘அபாயகரமானவர்களாகக்கூடும் சாத்தியப்பாடு கொண்டவர்கள்' என்று மூன்று வகைப்படுத்தி லூதியானா சிறையில் அடைத்தது. காலஞ்சென்ற சமூகத் தொண்டர் திருமதி கமல்தேவி சட்டோபாத்யாய, உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  ‘ஆள் கொணர்வு' மனுவின் காரணமாகவே அந்தச் சிறுவர்கள் அமிர்தசரஸ் சிறைக்கு மாற்றப்ப்பட்டனர்.

பொற்கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் செய்தியைக் கேட்டு வெகுண்டெழுந்த 4000 சீக்கிய இராணுவ வீரர்கள், இராணுவத்திலிருந்து விலகி, அமிர்தஸரஸை நோக்கி விரைந்து வந்தனர். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. அதேபோல, பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொற்கோவிலுக்கு விரைந்து சென்ற பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களிலும், பால் விற்பனையாளர்களிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதும் கண்டறியப்படவில்லை. கொல்லப்பட்ட எருமைகள் எத்தனை என்பதும் தெரியாது.  ஊரடங்கு உத்திரவு நடைமுறையில் இருந்த நாள்களில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. குரு அர்ஜுன் தேவின் நினைவு நாளைக் கொண்டாடுவதற்காக 1984 ஜூன் 3 அன்று கூடியிருந்தவர்கள் ஏறத்தாழ 10000 பேர் என்றும், அவர்களில் குறைந்தது 4000 பேர் பெண்களும் குழந்தைகளுமடங்கிய இளம் வயதினர் என்றும், சிங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  4000 பேர் கொண்ட அகாலித் தளத் தொண்டர் படையொன்று (அவர்களில் 200 பெண்கள், 18 குழந்தைகள்)  கைது செய்யப்படுவதற்குத் தயாராக இருந்தனர் என்றும் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகள் பலர்  உண்மை அறியும் குழுவினரிடம் கூறினர். அன்றிரவு 10மணிக்குப் பிறகு அங்கிருந்த எவரும் வெளியில் செல்லக்கூடாது என்று தடையுத்தரவு போடப்பட்டுவிட்டது.

குருத்வாராவுக்குள் பதுங்கியிருந்ததாகச் சொல்லப்படும் ‘பயங்கரவாதிகள்' மீது இந்திய இராணுவம் போர் தொடுத்தபோது, போரின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச நெறிகள் பின்பற்றப்படவில்லை. பொற்கோவிலில் இராணுவ நடவடிக்கை முடிந்த பிறகும்கூட செஞ்சிலுவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு வர அனுமதிக்கப்படவில்லை.  அந்த அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டனர்.  

அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்கு சற்றுத் தொலைவில்தான் ஜாலியன்வாலாபாக் இருக்கின்றது. அங்குதான், 1919இல்  ரெளலட் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களும் வைகாசித் திருநாளையொட்டி அங்கிருந்த பூங்காவுக்கு வந்திருந்தவர்களுமான இந்திய மக்கள் ஜெனெரல் டையரின்  நேரடிக் கண்காணிப்பின் கீழ் படுகொலை செய்யப்பட்டனர். கடைந்தெடுத்த பிற்போக்கு அரசியல்வாதியான வின்ஸ்டன் சர்ச்சிலாலும்கூடக் கண்டனம் செய்யப்பட்ட அந்தப் படுகொலை இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 359 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 1200 பேர் காயமடைந்தனர் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த ஹன்டர் விசாரணை ஆணையம் (Hunter Commission) கூறியது. (காங்கிரஸ் கட்சி அமைத்த ‘உண்மையறியும் குழு', கொல்லப்பட்டவர்கள், காயம்டைந்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதாலாக இருந்ததாகக் கூறியது).  ஜெனெரல் டையருக்குக் கட்டாயப் பணி ஓய்வு தரப்பட்டதுடன் அவருக்கு ஓய்வூதியமும் மறுக்கப்பட்டது. கொல்லப்பட்ட அனைவரது உடலும் அடையாளம் காணப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே, சம்பந்தப்பட்ட உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

 ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் காலனியாட்சியாளர்கள் கடைபிடித்த  நாகரிகம்'கூட ‘சுதந்திர இந்தியா'வின் ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்படவில்லை. அடையாளம் காண்பதற்கான முயற்சிகளோ, சவப்பரிசோதனைகளோ, இறந்தவர்களின் உடல்களுக்குத் தக்க மரியாதையோ தரப்படாமால் நோயால் செத்துபோன பண்ணைக் கோழிகளைப் போலக் கொத்துக் கொத்தாக எரிக்கப்பட்டன சீக்கியர்களின் உடல்கள்.

‘ஆபரேஷன் புளூ ஸ்டார்' என்னும் அந்த இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றி டெல்லியில் இயங்கி வந்த ‘ஜனநாயகத்துக்கான குடிமக்கள்' (‘Citizens for Democracy') என்னும அமைப்பு, காலஞ்சென்ற மனித உரிமைப் போராளி நீதிநாயகம் வி.எம்.தார்குண்டெ தலைமையில் ஓர் உண்மை அறியும் குழுவை அமைத்து,  ‘பஞ்சாபில் நடந்த இராணுவ நடவடிக்கைகள்' (Operations in Punjab)  என்னும் தலைப்பில் ஓர் அறிக்கையை  ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸின் முன்னுரையுடன் புத்தக வடிவத்தில் வெளியிட்டது. (அந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் பின்னாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சரானது ஒரு வரலாற்று முரண்!) அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு விஷயத்தைக்கூட மத்திய அரசாங்கத்தால் மறுக்க முடியவில்லை. அது செய்ததெல்லாம், அந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்ததுதான்!

குர்பச்சன் ஜகத் (Gurbachan Jagat),  பஞ்சாபைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. அந்த மா நிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பாளராகவும் (District Superintendent of Police),  ஜம்மு-காஷ்மிர் மாநிலத் தலைமைக் காவல் துறை அதிகாரியாகவும் (DIG), மத்திய அரசாங்கத்தின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராகவும், மணிப்பூர் மாநில ஆளுநராகவும், பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். ‘ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பஞ்சாப் மாநிலக் காவல் துறையின் உளவுப் பிரிவின் (CID)  துணைக் காவல் துறைத் தலைவராக (Additional DIG)  இருந்தார். ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் சில தகவல்களைத் தருகிறார்:  அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு, இந்திய இராணுவத்தின் மேற்கு பிராந்தியத் தலைமைத் தளபதி லெஃப்டினெண்ட் ஜெனெரல் ரஞ்சித் சிங் தயாள் பத்திரிகையாளர் கூட்டமொன்றில் பேசுகையில், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார். அதன் பிறகு, பஞ்சாப் மா நிலக் காவல் துறையின் உளவுத் துறையின் துனைத் தலைமை அதிகாரியான குர்பச்சன் ஜகத்தைத் தனியாக அழைத்து, பொற்கோவிலுக்குள் இருந்த பிந்தரன்வாலெ பற்றியும் அவரது ஆதரவாளர்களைப் பற்றியுமான தகவல்களைத் தருமாறு கேட்டார்.  நீண்ட நாள்களாக பிந்தரன்வாலெவின் செயல்பாடுகளையும் கருத்துப் பரப்புரைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த காவல் துறை அதிகாரி என்னும் வகையின் தான் திரட்டியிருந்த தகவல்களை ரஞ்சித் சிங் தயாளிடம் தருகின்றார் குர்பச்சன் சிங். அதாவது, பிந்தரன்வாலெவின் செல்வாக்கு சீக்கியர்களிடையே வேகமாக வளர்ந்து வருகின்றது; அவரது ஆயுதமேந்திய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 130தான் என்றாலும்,  அவர்கள் அனைவரின் உளவியலும் மிக உறுதியானதாக இருக்கின்றது; இராணுவத்தைத் தங்களால் தோற்கடிக்க முடியாது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்; ஆயினும், கடைசி வரை போராடி உயிரைத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்; மேலும், அகாலித் தளத் தொண்டர்களும் பெரும் எண்ணிக்கையில் பொற்கோவில் வளாகத்தில் திரண்டிருக்கிறார்கள்; அவர்களும் கைது செய்யப்படுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பஞ்சாப் யதார்த்த நிலைமைகளைப் பற்றி சரியாகத் தெரிந்து வைத்திருக்காத அந்த இராணுவ அதிகாரியோ, இராணுவத்திடம் உள்ளது போன்ற நவீன ஆயுதங்களோ எண்ணிக்கை பலமோ இல்லாத பிந்தரன்வாலெவும் ஆயுதமேந்திய அவரது கூட்டாளிகளும்  இராணுவத்திடம்  சரணடைந்துவிடுவார்கள் என்னும் மிகப் பெரும் தப்புக் கணக்கு போட்டு விடுகிறார். கிரேக்கத் துன்பியல் நாடகாங்களில் குழுப்பாடல் இசைப்பவர்களுக்கு, வரப்போகும் நிகழ்வுகள் என்ன என்பது தெரியும்; ஆனால், அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இருக்காது; எனவே கட்டவிழ்ந்து விழும் துன்ப நிகழ்ச்சிகளை அவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய அவல நிலைதான் தன்னைப் போன்றோருக்கும் ஏற்பட்டது என்று இந்தக் கட்டுரையில் கூறுகிறார் குர்பச்சன் ஜகத்.

2

 மோகன் சிங் தனது மகனுக்கும் மகளுக்கும்  குருநானக் பற்றியும் ஆதிகிரந்தம் பற்றியும் குர்பானி என்னும் பக்திப்பாடல்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்ததைப் பின்னாளில் ராஜ்குமாரிடம் உரையாடுகையில் நினைவு கூர்கிறார் நெல்லி: துறவியும் கவிஞருமான குருநானக், நாற்பதாண்டுகளில் ஏறத்தாழ இருபதாயிரம் மைல் பயணம் செய்து இலங்கை, திபெத், பாக்தாத் ஆகியவற்றுக்கு  சென்றவர்; புத்தரைப் போல முக்கியத்துவம் கொண்டவர்; சாதியை ஒழித்துக்கட்டும் பேராவல் கொண்டிருந்தவர்; பார்ப்பனிய இந்துயிசத்தையும் தீண்டாமையையும் அறவே வெறுத்தவர்; மதம், கடவுள் ஆகியவற்றுக்கு விளக்கம் சொல்லும், பூசை செய்யும் சிறப்புரிமையைப் புரோகிதர்கள் கொண்டிருப்பதை எதிர்த்தவர்; தனது காலத்தில் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த ஆட்சியாளர்களை எதிர்த்தவர்; ‘சீக்' என்றால் சமஸ்கிருதத்தில் ‘மாணவர்' என்பது பொருள். ஒருவகையில் அனைத்து  சீக்கியர்களுமே வாழ்க்கையின் மாணவர்களாகவே இருக்க வேண்டும். குரு நானக் பற்றிய கதையொன்றுண்டு. ஒரு நாள் அவர் காசிக்கு நடந்தே சென்றார்; கங்கையாற்றினூடே சென்றார்; அங்கு போலி ‘புனிதர்கள்' கூட்டமொன்றைக் கண்டார்; பார்ப்பனர்கள் ஏன் தண்ணீரை அள்ளி அள்ளி வானத்தை நோக்கித் தெளித்துக் கொண்டிருந்தனர் என்பது அவருக்குப் புரியவில்லை; ‘எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார்; ‘சூரியனுக்கு நாங்கள் தண்னீர் அனுப்புகிறோம், இறந்துபோன நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் அங்கே இருக்கின்றன; தாகத்தால் அவர்கள கதறுகிறார்கள். எனவேதான் தண்ணீரை அங்கே அனுப்புகிறோம்' என்றார்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாது என்று கருதிய நானக், நேர் எதிராகத் திரும்பி தண்ணீரை எதிர் திசையில் இறைத்தார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்' என்று அவரது செயலைத் தடுக்க முயன்றனர் பார்ப்பனர்கள். ‘சகோதரர்களே, பஞ்சாபின் கோதுமை வயல்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கின்றன. ஆனால் நீங்கள் தெளிக்கும் தண்ணீர் பயிர்களைப்  போய்ச் சேராது'. பார்ப்பனர்கள் அதைக் கேட்டு, அவரைக் கேலி செய்தனர். நானக் கூறினார்: ‘ சகோதரர்களே, நீங்கள் தெளிக்கும்  நீர், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனுக்குப் போய்ச் சேருமென்றால், கட்டாயம் அது பஞ்சாபின் கோதுமை வயல்களின் மீது அருவியாய்க் கொட்டும்'.

சாதி எதிர்ப்பு மார்க்கமாக  குருநானக்கால் உருவாக்கப்பட்ட ‘சீக்கியம்', இந்துமதத்தின் தாக்கத்தினால் சாதி அமைப்பை சுவீகரித்துக் கொண்டபோதிலும், மோகன் சிங் குருநானக்கின் வழியில் செல்பவராகவே வாழ்ந்திருக்கிறார்; நெல்லி, சீக்கியர்களில் உள்ள தலித் சாதியைச் சேர்ந்தவர் என்றாலும், அதைப் பொருட்படுத்தாது அவரைத் திருமணம் செய்துகொள்ளும் மோகன் சிங், ‘தேனிலவை' காஷ்மீரில் கழித்துவிட்டு, அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்கு  (‘ஹர்மிந்தர்' என்று அதை சீக்கியர்கள் அழைக்கின்றனர்) அழைத்து வந்து அங்குள்ள அருங்காட்சியகத்தைக் காட்டுகிறார். பின்னர் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தையும் காட்டுகிறார். பிரிட்டிஷ் இந்திய இராணுவம், சுதந்திர இந்திய இராணுவம் ஆகிய இரண்டிலும் சீக்கியர்கள் தங்கள் மொத்த மக்கள்தொகையை ஒப்பிடுகையில் கூடுதலான விகிதாச்சாரத்தில் இடம் பெற்றிருந்ததையும், அதேபோல பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திலும் அவர்கள் பெரும் பங்கு வகித்ததையும், மவுண்ட்பேட்டனும் காங்கிரஸ்  தலைவர்களும் விவேகத்துடன்  நடந்துகொண்டிருந்தால், இந்திய-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு அதன் விளைவாக ஏற்பட்ட இரத்தக்களரியில் இலட்சக்கணக்கான வங்காளிகளும் சீக்கியர்களும் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றும், குரு நானக் பிறந்த இடம்கூட இப்போது பாகிஸ்தான் பகுதியில்தான் உள்ளது என்றும் வேதனையுடன் கூறுகிறார் நெல்லி.  நாட்டுப் பிரிவினையால் உயிரிழந்தவர்களுக்கு முறையான துக்கம் கடைப்பிடிக்கவோ, அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கவோ இதுவரை இந்திய அரசாங்கம் ஏதும் செய்ததில்லை.

3

மோகன் சிங்கின் குடும்பத்தோடு மிக நெருக்கமாகப் பழகுகிறான் ராஜ்குமார். மோகன் சிங்கின் குழந்தைகளும்கூட அவனையும் இன்னொரு தந்தையாகவே கருதுகின்றனர். அவர் தனது ஆய்வுப்பணிகள், கருத்தரங்குகள் தொடர்பாக வெளியூர்களுக்குச் செல்லும் நாள்களில்கூட ராஜ்குமார், அவரது இல்லத்திற்குச் சென்று இரவுகளைக் கழிப்பதுண்டு. நெல்லியின் வசீகரமும் ராஜ்குமாரின் இளமையயும் அவர்கள் மிக அந்தரங்கமான உறவுகளை வளர்க்கவும் செய்துவிட்டன. ஒரு முறை, வெளியூர் பயணத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு வீடு திரும்பும் மோகன் சிங்,  இரவு நேரத்தில் ராஜ்குமாரும் நெல்லியும் தனியாக இருப்பதைக் காண்கிறார். தனது திகைப்பை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒன்றும் நடக்காததுபோல் பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறார். மனித பலவீனங்களை மன்னிக்கும் பெரிய மனதுடைய மனிதர்.

தனது மாணவர்களின் பாடங்களோடு தொடர்புடைய  இரு  இரசாயனப் பொருளுற்பத்தித்  தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் அவர்களை அழைத்துச் செல்கிறார். ரயில் நிலையத்தில் அவரை வழியனுப்ப ராஜ்குமாரின் தந்தையும், மோகன் சிங்கை வழியனுப்ப நெல்லியும் வந்திருந்தனர். அதுதான் அவர்கள் நால்வரும் ஒன்றாகச் சந்திந்த கடைசி சந்தர்ப்பமாகிவிட்டது.

1984அக்டோபர் 30இல் அவர்கள் காஸாலி என்னுமிடத்திலுள்ள மருந்துத் தொழிற்சாலைக்குச் செல்கின்றனர்.  அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் காச நோய் சானடோரியமாக இருந்தது. அடுத்த நாள், சோலான் குன்றுகளிலுள்ள மோகன்-மீகின் மதுத் தொழிற்சாலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறார் மோகன் சிங். இன்றைய இந்தியாவிலுள்ள மிகப் பெரும் மதுபான உற்பத்தித் தொழிற்சாலையான மோகன்- மீகின், காலனியாட்சிக் காலத்தில்  இருந்த டையர்-மீகின் ப்ரூவரிதான். இந்திய முதலாளிகளால் சுவீகரிக்கப்பட்ட அது மோகன் - மீகின் என்னும் புதிய பெயரைச் சூட்டிக் கொண்டது. அதற்கொரு முக்கிய காரணமும் உள்ளது. அந்த மதுபானத் தொழிற்சாலையை  நிறுவியவர்களிலொருவரான டையர் ஜாலியன்வாலாபாக் படுகொலையைச் செய்த ஜெனெரல் டையரின் தந்தையாவார்!. ஆங்கில செவ்வியல் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மோகன் சிங், தன் மாணவர்களுடன்  டெல்லிக்குத் திரும்பிவரும் ரயில் பயணத்தின்போது, ஆங்கிலேய நாவலாசிரியரும் கவிஞருமான ருட்யார்ட் கிப்ளிங், ஜெனெரல் டையருக்கு ஓய்வூதியம் தரப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கத்தை வற்புறுத்தியவர்களிலொருவராக இருந்ததையும், அந்த ஓய்வூதிய நிதிக்குத் தன் பங்காக  இருபது பவுண்டுகள் கொடுத்ததையும் ராஜ்குமாரிடம் கூறுகிறார். நல்ல படைப்பிலக்கியவாதிகள், ஒடுக்குமுறையாளர்களின் ஆதரவாளர்களாக இருந்தது ஏதோ புதிய விஷயமல்ல.

 ரயில் பயணத்தின் போது, யாரோ ஒரு மாணவன் டிரான்ஸிஸ்டர் ரேடியோவைத் திருப்புகிறான். முதலில் ஆகாஷ்வாணி, பிறகு பிபிசி சிற்றலை. இந்திரா காந்தி, அவரது மெய்க்காப்பாளர்களால் சரமாரியாகச் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தி. இந்திரா காந்தியைக் கெட்ட வார்த்தையால் ஒரு மாணவன் திட்ட, மோகன் சிங் எழுந்து நின்று அதைக் கண்டனம் செய்கிறார்: ‘ நீ இப்படிப் பேசக்கூடாது. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்மணியைக் கொல்வதற்காக ஏராளமான துப்பாக்கிக்குண்டுகள் தீர்ந்து போயிருக்கின்றன.  யாருக்குமே இப்படிப்பட்ட சாவு வரக்கூடாது. ஒருவரோடு கருத்து வேறுபாடு இருந்தால், அதற்காக  அவரைக் கொலை செய்வதா?'.

 பீதி நிறைந்த அந்தச் சூழலில் ஆறு மணி நேர தாமதத்திற்குப் பின் புது டெல்லி ரயில் சந்திப்பை அடைகிறது அவர்களது ரயில் வண்டி. அது  பிளாட்பாரத்தைத் தொட்டு நிற்பதற்கு முன்பே வன்முறையின் அடையாளங்கள் தென்படுகின்றன. துப்பாக்கிகளுடனும் லத்திகளுடனும் அங்கு ஏராளமான போலிஸ்காரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், பயணிகளுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று ராஜ்குமார் நம்புகிறான். ஆனால், அங்கு இரும்புக் கம்பிகள், இரப்பர் டயர்கள் முதலியவற்றுடன் குழுமியிருந்த காடையர் கூட்டத்தைத் தடுக்க போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். சீக்கியர்களைப் பார்த்துக் கூச்சலிடும் அந்த வன்முறைக் கும்பலிலிருந்து மோகன் சிங்கைப் பாதுகாக்க மாணவர்கள் அவரைச் சுற்றிலும் வளையமிட்டு நிற்கின்றனர். ‘இரததத்துக்கு இரத்தம்', ‘அந்த துரோகி சர்தாரை எங்களிடம் ஒப்படைத்துவிடு' என்று கூவியவாறு முன்னேறி வந்த அந்தக் கொலைகாரக் கூட்டத்தின் வன்முறையைக் கண்டு அஞ்சிய மாணவர் கூட்டம் சிதறி ஓடுகிறது. மோகன் சிங்கின் சூட்கேசைப் பிடுங்கி அதிலிருந்த பொருள்களைக் கீழே கொட்டிவிட்டு, ஒரு கைக்கடிகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்ட ஒரு காடையன் வேறு சில காடையர்களுக்கு சைகை காட்ட,  அவர்கள் மோகன் சிங் கழுத்தின் மீது ஒரு டயரை மாட்டி, அதன் மீது  பெட்ரோலை ஊற்றித் தீயிடுகின்றனர். ‘ எங்கள் தாய் இறந்துவிட்டாள். நீங்கள் எல்லோரும் உயிரோடு இருக்க வேண்டுமா?' என்று அந்த வன்முறைக் கும்பல் சீக்கியர்கள் அனைவருக்கும் சவால் விடுகின்றது. ‘ஒரு சீக்கியர்கூட பாக்கியில்லாமல் ஒழித்துக் கட்டுங்கள்' என்று ஸ்டேஷன் மாஸ்டர் அறையிலிருந்து காந்தி- நேரு தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்த ஒரு காங்கிரஸ் தலைவர் அந்த வன்முறைக் கும்பலுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். அவர்  வேறு யாருமல்ல; ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட்ட ஹெச்.கே.எல்.பகத். அவர் டெல்லி மேயராகவும் இருந்திருக்கிறார். கோயபல்ஸ் பிறந்த நாளும் ஹெஸ்.கே.எல்.பகத் பிறந்த நாளும் ஒன்றல்லவா?  ‘ஆலமரம் சாய்ந்து விழுந்தால், பூமி அதிராதா?' என்று கேட்டு, வன்முறையைத் தூண்டிவிட்டவர் ராஜிவ் காந்தி.  இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து மக்கள் கோபாவேசம் பூண்டு வருவதாக தூர்தர்ஷன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. அந்தக் கலவரத்தை நேரடியாக தூண்டிவிட்ட ஹெச்.கே.எல்.பகத்தை, வன்முறையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சீக்கிய ஆண்களும் பெண்களும் அடையாளம் காட்டியபோதிலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 தனது தந்தை அனுப்பிய போலிஸ் ஜீப்பில் ஏறி, வீட்டுக்குப் பத்திரமாக வந்து சேரும் ராஜ்குமாரின் மனதில் என்றென்றும் அழியாத குரூரச் சித்திரமாக, மோகன் சிங் தீயில் எரிந்து கருகும் காட்சி பதிந்துவிடுகிறது.  அற்புதமான மனிதரான அந்தப் பேராசிரியரைக் காப்பாற்ற முடியாமல்போன அவனது இயலாமையும் குற்றவுணர்ச்சியும், சீக்கியர்களின் மீதான கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்த போலிஸ் துறையின் தலைவராக தனது தந்தை இருந்ததும் அவன் மனதைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றன.  1984இல் நடந்த வன்முறைகள் பற்றி செய்தியேடுகள் முதலிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மைகளுடன், ராஜ்குமாருக்கும் அவனது தந்தையுடன் உயர் போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவர்களது குடும்ப நண்பர் கோபாலுக்குமிடையே நடைபெறும் ஓர் உரையாடல் என்னும் வடிவத்தில் வெளிப்படும் வரலாற்று உண்மைகளையும் இந்த நாவலில் ஆங்காங்கே எடுத்துரைக்கிறார் ஜஸ்ப்ரீத் சிங்:

1.    அன்றைய காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த டெல்லி மாநிலப் போலிஸ் துறைத் தலைவர் எஸ்.சி.டாண்டனின் அலுவலகத்துக்கும் பிரதமர் ராஜிவ் காந்தி, உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோருக்கும் நேரடித் தொலைபேசித் தொடர்பு இருந்தும்கூட அவர்கள் வன்முறையைக் கட்டுப்படுத்தும்படி போலிஸாருக்கு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை.

2.    அப்போது  ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்த அருண் நேருவை  நேர்மையான அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று சந்தித்து, வன்முறையைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அழைக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அருண் நேருவோ, அதை அலட்சியப்படுத்தினார்.

3.    டெல்லியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் வன்முறையை நிறுத்தும்படி ராஜிவ் காந்தியிடம் கெஞ்சிக் கேட்டனர். ஆனால், ராஜிவ் காந்தி மசியவில்லை.

4.    டெல்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், என்னுடைய தொகுதியில்தான் அதிக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர், எனவே எங்களுக்கு பெரிய அமைச்சர் பதவி கொடுங்கள் என்று கேட்டனர்.

5.    வன்முறைத் தாக்குதல்களை நேரடியாக வழி நடத்திய முக்கியக் காங்கிரஸ் தலைவர்கள் : ஹெச்.கே.எல்.பகத், கமல்நாத், லலித் மகென், சஜ்ஜன் குமார், ஜக்தீஷ் டைட்லர்.

6.    வன்முறையைத் தூண்டிவிடுவதில் தூர்தர்ஷனின் ஒளிபரப்புகளுக்கு முக்கியப் பங்குண்டு (அந்த ஒளிபரப்புகள் பற்றிய ஆவணங்கள் பின்னாளில் அழிக்கப்பட்டுவிட்டன). முதன்மையான அச்சு ஊடகங்களுக்கும் இதில் பங்கிருந்தது.

7.    கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் குற்றப்பதிவு செய்யப் போலிசார் மறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி, சீக்கியர்களைப் பற்றிய விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பி, வன்முறைக் கும்பல்களை அவர்கள் மீது ஏவி விட்டனர்; பாதுகாப்புக்காக சீக்கியர்கள் ஒளிந்திருந்த வீடுகளை அந்த வன்முறைக் கும்பல்களுக்கு அடையாளம் காட்டினர்.

8. அன்று டெல்லி போலிஸில் இருந்த போலிஸ் அதிகாரிகளில் 20 விழுக்காட்டினர் சீக்கியர்கள்; வன்முறைக் கும்பல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதால் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

9. போலிசாரால கைது செய்யப்பட்டவர்கள் சீக்கியர்கள் மட்டுமே - தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருந்த சாதாரணக் குடிமக்களும் இராணுவ வீரர்களும்.

10.  உயர் போலிஸ் அதிகாரிகளின் ஆணைகளை மீறி நியாயமாகவும் சட்டப்படியும் செயல்பட முனைந்த கீழ்நிலை அதிகாரிகள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் தண்டிக்கவும் பட்டனர்.

11. வன்முறைக் கும்பல்களிடம் போலிசார் கூறியவை:  ‘ நாங்கள் உங்களுடன், உங்களுக்காக, எப்போதும்'.

12. 1947 ஆம் ஆண்டு நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு அரசு யந்திரத்தின் ஒருங்கிணைப்புடன்  தனது சொந்தக் குடிமக்கள் மீதே நடத்தப்பட்ட முன்னுவமையற்ற வன்முறைத் தாக்குதல்கள் இவை.

13. சீக்கியர் போலத் தோற்றமளித்தவர்கள் -சுதந்திரப் போராட்ட வீரர்களோ, தொழிலதிபர்களோ, வின்ஞானிகளோ, குடியானவர்களோ, அரசியல்வாதிகளோ, தூதரக அதிகாரிகளோ, படைவீரர்களோ, சமையல்காரர்களோ, மெக்கானிக்குகளோ, ஆசிரியர்களோ, பத்திரிகையாளர்களோ, டாக்ஸி டிரைவர்களோ, ‘காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களோ' - யாராக இருந்தாலும் அவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.

14.     பணக்கார சீக்கியர்களைவிட ஏழை சீக்கியர்களே கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் (கொல்லப்பட்ட சீக்கியர்கள் பலர் திரிலோக்புரி போன்ற (slums)  பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.

15.    கொத்துக் கொத்தாக சீக்கியர்கள் கொல்லப்பட்டாலும், ஒவ்வொரு உடலும் தனித்தனியாக இழுத்துவரப்பட்டு, சாக்குப் பையில் போடப்பட்டுத் தனித் தனியாக எரிக்கப்பட்டது.

16. ஸ்வீடிஷ் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த பிரபல சீக்கிய எழுத்தாளரொருவர்,  ‘நாஜி ஜெர்மனியில் இருந்த யூதனைப் போல நான் உணர்கிறேன்' என்று கூறினார்.

17. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி, அவருக்கு அடுத்த பிரதமராகியவரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நரசிம்ம ராவ் ஆகியோர் இந்தக் கொடூரமான இனச் சுத்திகரிப்புக்கான காரண கர்த்தாக்கள் (1992 பாபர் மசூதி இடிப்பிற்கும், அதனைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம்-விரோதக் கலவரங்களுக்கும் கால்கோள் இட்டவர்களும் அவர்கள்தான்)

18.    அவர்கள் இறந்த போது, இரங்கல் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே 1984ஆம் ஆண்டு வன்முறையில் அவர்கள் வகித்த பாத்திரம் பற்றி மெளனம் காத்தன (Financial Times மட்டுமே இதற்கு விதிவிலக்கு; ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதையொட்டி அது எழுதிய தலையங்கம், ‘வன்முறையை விதைக்கும் அரசியல்வாதிகள் வன்முறையையே அறுவடை செய்வார்கள்' என்று கூறியது).

19. சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் சீக்கியப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் மூடிமறைத்த ராஜிவ் காந்தி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்கு உதவி செய்த போலிஸ் அதிகாரிகளுக்கு வீரப்பதக்கங்கள் வழங்கினார். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே மதவாத வன்முறையைத் தூண்டிவிடுகையில்,  சாதாரணப் பொதுமக்களும் அந்த வன்முறை உணர்ச்சியின் தாக்கத்துக்கு உட்படுவது எளிதல்லவா? பல சீக்கியர்களுக்கு சில இந்துக் குடும்பங்கள் தஞ்சமளித்துக் காப்பாற்றின. ஆனால், காப்பாற்றப்பட்ட ஒவ்வொரு சீக்கியருக்கும் பதிலாக நூறு சீக்கியர்கள் வேறு இந்துக்களால் வன்முறைக் கும்பல்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். குடியரசு நாள் அலங்கார வண்டிகளைப் பார்த்து இரசிப்பதைப் போல சாதாரண மக்கள், சீக்கியர்கள் உயிரோடு  எரிக்கப்பட்டதையோ, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வன்முறை டெல்லி நகரத்தோடு நின்று கொள்ளவில்லை.  நாடு முழுவதிலும் ஏறத்தாழ நாற்பது நகரங்களுக்கு அது பரவியது. உத்தரப் பிரதேசம், ஹரியானா,பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா முதலியவற்றில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டானர் (ஏன், தமிழ்நாட்டிலும்கூட சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன. சென்னையிலும் கோவையிலும் சீக்கியர்களின் கடைகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டன). “வன்முறைகள் எல்லாவற்றிலும் மிகக் கொடியது பழிவாங்கும் வன்முறையே” என்று காலஞ்சென்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் நார்டின் கார்டினர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை!.


 நவம்பர் மாதம் முதல் நான்கு நாள்கள் நடந்தன இந்த வன்முறை சம்பவங்கள். நான்கு நாள்களுக்குப் பிறகு கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் யாருமே அந்த வன்முறை பற்றி மாணவர்களிடம் ஏதும் பேசவில்லை. அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியபோது, அந்த இரத்தக் கறை படிந்த நிகழ்வுகளைப் பற்றி அரசாங்கம் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை. பொற்கோவில் மீதான தாக்குதல், 1984ஆம் ஆண்டு வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் ‘என்கவுண்டர்' மரணங்களைத் தழுவினர். காணாமல் போனோரின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகம். கொத்து சவக் குழிகள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அரசியல் ஆதாயமாகக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.  கோடிக்கணக்கான ரூபாய் செலவில் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரசாரங்களில்,  1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் நியாயப்படுத்தப்பட்டன. இந்தியா என்னும் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால், மக்கள் ‘தன்னெழுச்சி'யாகவும் இயல்பாகவும் ஆத்திரமடைந்தனர் என்றும் அவர்களது கோபத்திற்கு ஒரு நியாயம், தர்க்கம் உள்ளது என்றும், அது ‘தவிர்க்கமுடியாதது' என்றும் அந்தப் பிரசாரம் கூறியது. முள்கம்பி வேலிகளுக்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் எதிரிகளாக சீக்கியர்களையும்  ‘வலுவான' காங்கிரஸை நாட்டைப் பாதுகாக்கும் ‘இரட்சகராக'வும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகள் சித்திரித்தன. இவ்வாறு சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், காங்கிரஸ் மிகப் பெரும் வெற்றியைச் சாதிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. ‘பொருளாதாரக் கொள்கையில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் வேறுபாடு இல்லை' என்று கூறுகிறவர்கள்கூட, காங்கிரஸுக்கு ‘மதச்சார்பின்மை' சர்டிஃபிகேட் கொடுத்து வந்தனர். ஆக, முப்பதாண்டுகளுக்கு முன் நடந்த அந்த வெட்கக்கேடான நிகழ்வுகள் ஏதும்  நடக்காதது போன்ற தோற்றத்தைக் காங்கிரஸ் வெற்றிகரமாகச் செய்துவிட்டது.

ஒரு சில மனித உரிமை அமைப்புகளையும் சிறிய சீக்கிய அமைப்புகளையும் தவிர, சீக்கியர்களின் முக்கிய அரசியல் கட்சியான அகாலி தளமோ, அதனைத் தனது கூட்டாளியாகக் கொண்டுள்ள பாஜகவோ 1984 வன்முறைக்குப் பலியான குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்கான தீவிரமான முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. அரசாங்கம் அமைத்த விசாரணை ஆணையங்கள் வெறும் கண் துடைப்பு நாடகங்களாகவே இருந்தன.  அப்படிப்பட்ட நாடகங்களை நிகழ்த்துவதற்கு சன்மானமாக சம்பந்தப்பட்ட ‘நீதியரசர்களுக்கு'  உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஒரு விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த ரங்கநாத் மிஷ்ரா, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார்.

கதாபாத்திரங்களின் உரையாடல் மூலமாக, மேலும் சில வரலாற்று உண்மைகளும் இந்த நாவலில் பதிவு செய்யப்படுகின்றன. 1975இல் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி,  நீதித்துறை உள்ளிட்ட நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பலகீனப்படுத்திய இந்திரா காந்தி, போலிஸ் துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும்,  ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து போலிஸ் துறையை விடுவித்து அது சுயேச்சையாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாக சட்டத்தைக் கருதக்கூடியதாகவும் ஆக்குவது பற்றியும், போலிஸ் துறையில் இருப்பவர்கள் அத்துமீறல்களைச் செய்யாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியுமான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையைப் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து ‘தேசிய போலிஸ் ஆணையம்' இந்திரா காந்தியிடம் கொடுத்தது. ஆனால், 1981இல் மீண்டும் பதவிக்கு வந்த அவரோ அதைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்.

நாவல் சொல்லாத வரலாற்று உண்மைகளிலொன்று, இந்திரா காந்தியின் அரசியல் வளர்ச்சிக்கே மதவாதம்தான் காரணம் என்பதுதான். 1957இல் அமைக்கப்பட்டதும்  ஜனநாயகத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான முதல்  கம்யூனிஸ்ட் அரசாங்க்த்திற்கு - கேரளத்தில் ஈ.எம்.எஸ். தலைமையில் அமைந்த அரசாங்கத்திற்கு எதிராக - சாதிய, மதவாத சக்திகளைத் தூண்டிவிட்டு, அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பிரசாரம் செய்து, இந்திய ஜனநாயகத்தின் ஒளிமிக்க குறியீடு என்று சொல்லப்பட்ட ஜவகர்லால் நேருவின் மத்திய அரசாங்கம் அந்த அமைச்சரவையை கலைக்கும்படி செய்த ஜனநாயக விரோதச் செயல் மூலமே அரசியல் வளர்ச்சி கண்ட இந்திரா காந்தி, அவரது தந்தை பிரதமராக இருக்கையில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பலமுறை முஸ்லிம் விரோத நிலைப்பாடுகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

எனினும், 1984 இல் நடந்த மற்றொரு பேரழிவிற்கும் (அது டிசம்பர் 3இல் நடந்த போபால் நச்சு வாயுப் பேரழிவு) இந்திரா காந்தியே மூலகாரணமாக இருந்திருக்கிறார் என்பதை இந்த நாவல் பதிவு செய்கிறது:  அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட யூனியன் கார்பைட்  என்னும் பன்னாட்டு நிறுவனம் (MNC),மெதில் ஐஸோசைனேட் வாயுவை (MIC) அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லி மருத்தை (செவின்) உற்பத்தி செய்வதற்கான தொழில் உரிமம் வழங்குமாறு 1970இல் மத்திய அரசாங்கத்தின் தொழிள் வளர்ச்சி அமைச்சகத்திடம் (தற்போது அது தொழில் அமைச்சகம்) விண்ணப்பித்திருந்தது. ஆனால் ஐந்து ஆண்டுக் காலம் அந்த விண்ணப்பத்தின் மீது மத்திய அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கான தக்க காரணங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில்,போபாலில் பயன்படுத்தப்படப் போகும் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று 1973ஆம் ஆண்டில் வாரன் ஆண்டர்ஸனே கூறியிருந்தார்.

ஆனால், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு (31 அக்டோபர் 1975) போபாலில் அந்த நச்சு வாயுப் பூச்சிக் கொல்லியை உற்பத்தி செய்வதற்கான தொழில் உரிமம் யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு (31 அக்டோபர் 1984) இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் மத்திய அரசாங்கத்தின் தொழில் வளர்ச்சி அமைச்சகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஆர்.கே.ஸாஹி (அவர் திட்டக்குழுவின் முன்னாள் துணை ஆலோசகராகவும் இருந்தார்),மேற்சொன்ன உரிமம் வழங்குவதை தொழில் வளர்ச்சி அமைச்சகம் முழுவதுமே எதிர்க்கிறது என்று கூறினார். அமெரிக்காவிலுள்ள யூனியன் கார்பைட்  நிறுவனத்தின் தொழிற்சாலைகளிலிருந்து பழைய இயந்திரங்களும் காலவழக்கொழிந்த தொழில்நுட்பமும் கொண்டு வரப்படுகின்றன என்பதை அந்த அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆயினும் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, போபால் தொழிற்சாலைக்கான உரிமம் வழங்கப்பட்டது. போபால் இரசாயனத் தொழிற்சாலைக்கு இந்திரா காந்தி அனுமதி வழங்கினார் என்றால்,  பேரழிவுக்குப் பொறுப்பான முதன்மைக் குற்றவாளி வாரன் ஆண்டெர்ஸன், இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல அனுமதி வழங்கியவர் ராஜிவ் காந்தி.

தொடர்ச்சிக்கு: http://aadhavanvisai.blogspot.in/2014/06/1984_8.html

தரவுகள்:
1.Jaspal Singh Sidhu, Army entered Golden Temple 30 years ago : Pain Persists Among Sikhs, Countercurrents.org, 02 June 2014.
2.Gurbachan Jagat, A tragic miscalculation, and the blunder, Hindustan Times, Chandigarh, June 6, 2014.
3.Leo Huberman, Introduction to Socialism, MR Modern Reader Paperbacks, New York and London, 1968

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...