ஞாயிறு, ஜூலை 7

பாட்டாளி மர்டரர் கட்சி

ளவரசனின் மரணத்தைப்போலவே பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட விதமும் பல சந்தேகங்களை உள்ளடக்கியுள்ளது. எப்பேர்ப்பட்ட விண்ணாதிவிண்ணன் எத்தனைத் தடவை மறுக்கூராய்வு செய்து பார்த்தாலும் எப்படி சாவு நேர்ந்தது என்றுதான் சொல்ல முடியுமே தவிர யாரால் சாவு நேர்ந்தது என்று சொல்ல முடியாது. யாரால் எதற்காக எப்போது சாகடிக்கப்பட்டார் என்கிற உண்மைகளை அரசியல் விருப்புவெறுப்புக்கோ வேறுவகைச் சாய்மானங்களுக்கோ அழுத்தங்களுக்கோ பணிந்துபோகாத ஒரு புலனாய்வுக்குழுவினால் தான் வெளிக்கொண்டுவர முடியும். அப்படியொரு புலனாய்வுக்குழுவை தமிழ்ச்சினிமாவில் மட்டுமே காணமுடியும் என்பதால் நடப்புலகில் தேடி நியமிக்க முடியாது. ஆகவே சுமாராக தீய்க்கும் கொள்ளியால் சொறிந்து கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. ரயிலில் சுண்டல் விற்கிறவர்களிடம் தண்டல் வசூலிப்பதில் மட்டுமே தன் சாமர்த்தியத்தை காட்டிவருகிற ரயில்வே போலிசிடமிருந்த இளவரசன் மரண வழக்கை உள்ளூர் போலிசுக்கு மாற்றியுள்ள அரசு, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக இருந்து புலனாய்வு செய்வார் என நேற்று அறிவித்துள்ளது. ஒருவேளை மத்திய புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கு மாற்றப்படுமானால், Congress Bearue of Investigation என்கிற இகழ்மொழியிலிருந்துதப்பிக்க அதற்கொரு வாய்ப்புள்ளது.
***
வன்னியப்பெண்ணை காதலிக்கிறவர்களுக்கும்  கல்யாணம் முடிக்கிறவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று காடுவெட்டி குருவும் மரம் வெட்டி மருத்துவரும் அறிவித்ததன் செயலாக்கமாகவே இளவரசனின் மரணத்தை கருதவேண்டியுள்ளது. இளவரசனின் மரணம் (இன்ப?) அதிர்ச்சியளிப்பதாக கூறிக்கொண்ட குட்டி ராமதாஸ் கூடவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கணக்காக இந்த மரணத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அறிவித்துக்கொண்டார். அவர் எத்தனை பாசாங்கான மொழியில் பசப்பினாலும் திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் அவர்களின் மரணம் தொடங்கி இளவரசனின் மரணம் வரையான  அவ்வளவு அழிமானங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்களின் காலடித்தடங்கள் தைலாபுரம் தோட்டத்திலேயே முடிவடைகின்றன என்கிற உண்மையை மறைத்துவிடமுடியாது.

இளவரசனுடனான திவ்யாவின் காதலை தனிநபர் முடிவாக விட்டுவிடாமல் தங்களது சாதியின் மானத்தோடும் மண்ணாங்கட்டி வீரத்தோடும் தொடர்புபடுத்தி பா.ம.க ஏற்றிய வெறிக்கு முதல் பலி திவ்யாவின் தந்தை நாகராஜன். நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புகளை கொள்ளையழிக்க பா.ம.க.வுக்கு தேவைப்பட்ட பிணமாக அவர் மாற்றப்பட்டார். இந்த வன்கொடுமை மற்றும் கொள்ளையழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனத்தனத்தில் பா.ம.க. மட்டுமே ஈடுபட்டது. தலித்துகளுக்கு எதிராக அனைத்து பிற்போக்கு பழமைவாத வெறியர்களையும் அணிதிரட்டுவதில் ராமதாசும் அவரது கட்சியினரும் காட்டிய ஈடுபாடு வன்மம் மிக்கது. திவ்யா - இளவரசன் தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட போது, இவர்களுக்கு ஆபத்து யாரால் நேரக்கூடும் என்பதை ஊருலகம் அறிந்தே இருந்தது. 

திவ்யா - இளவரசன் தம்பதியரை பிரித்தே தீர்வது என்று 2012 நவம்பரிலிருந்து பா.ம.க. செயல்படுத்தி வந்த  ஓரம்சத்திட்டம் இளவரசனின் மரணத்தோடு முற்றுப்பெற்றுள்ளது. இளவரசன் பிணமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இனி திவ்யாவே துணிந்தாலும் திவ்யாவின் தாயாரே சேர்த்துவைக்க ஆசைப்பட்டாலும் அதனால் பயனொன்றும் இல்லை. அதாவது பா.ம.க. மற்றும் வன்னிய மானத்திற்கு இனி எந்த பங்கமும் வரப்போவதில்லை. எனவே இவ்வளவு காலமும் திவ்யாவையும் அவரது தாயாரையும் நிழல்போல பின்தொடர்ந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த பா.ம.க.வினரும் அக்கட்சியின் வழக்கறிஞர்களும் இப்போது அவர்களை விட்டு ஒதுங்குவதுபோல காட்டத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில்தான் இப்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

நண்பன் என்று சொல்லிக்கொண்டு இளவரசனின் இறுதிநாட்களில் பாரதிபிரபு என்பவன் உடனிருந்ததும், அவனது அலைபேசி அழைப்பின் பேரில் வெளியே சென்ற இளவரசன் பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இளவரசனை வரவழைத்த அந்த திடீர் நண்பன் அதற்குப்பிறகு ஏன் காணாமல் போனான் என்பதும், இளவரசனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் அருகாமையில் திவ்யாவின் பெரியம்மாவுடைய வீடு இருப்பதும் தற்செயலானவையல்ல. இளவரசனின் பிணம் இருந்த நிலையை வைத்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியங்கள் மிகமிக நுண்ணிய அளவில்கூட இல்லை என்றான நிலையிலேயே அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. எனில் அவரை ஒரு தொல்லையாகவும் எதிரியாகவும் கருதிய பா.ம.க. தலைவர்கள்தான் அவரது உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. ஆனால் நஷ்டஈட்டுக்கு ஆசைப்பட்டு தருமபுரியிலும் பாச்சாரப்பாளையத்திலும் மரக்காணத்திலும் தலித்துகள் தங்களது வீடுகளை தாங்களே கொளுத்திக்கொண்டார்கள்  என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்ட அதே உத்தியில் இளவரசன் தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டதாகச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

பா.மா.க தலைவர்கள் என்ன பசப்பினாலும் இளவரசனின் குடும்பத்தார் அவர்களையே குற்றம்சாட்டியுள்ளனர். ஊரார் கண்களும் அவர்களையே உற்றுநோக்குகின்றன. கடலில் மிதக்கிற பிணங்கள் எல்லாம் கப்பல் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வது எந்தளவிற்கு பொய்யோ அதேயளவு பொய்தான் ரயில்ரோட்டில் கிடக்கிற பிணங்கள் எல்லாம் ரயில் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வதும் என்பதை வெகுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். எனவேதான் இளவரசன் பிணமாகக்கிடப்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் சடாரெனச் சொன்னார்கள்- இளவரசனை அடித்துக்கொன்று ரயில்ரோட்டில் கிடத்திவிட்டார்கள் என்று. இயல்பான தமது உள்ளுணர்விலிருந்தும் நடப்புலகத்தை அவதானிப்பதிலிருந்தும் எடுத்தயெடுப்பில் உண்மையைப் பேசிவிடுகிற வெகுமக்களுக்கு இது கொலையா தற்கொலையா என்கிற சந்தேகமோ குழப்பமோ எழவேயில்லை.


தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இளவரசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக ஃபிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்தலையை தானே இப்படி வெட்டிக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா? பாதி தலையை மட்டும் ரயில் சிதைக்குமா? ரயிலைவிட வலுவானதா இளவரசனின் உடல்?
 கொலைப்பழியிலிருந்து தப்பிக்கும் விசயத்தில் பா.ம.க.வினரின் எண்ணம் பொய்த்துப் போனாலும்  வன்னியப்பெண்ணை மணம் முடிக்கத் துணிகிற யாருக்கும் இளவரசனுக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்கிற அச்சத்தை பொதுஉளவியலுக்குள் பதியவைப்பதில் வெற்றிபெற்றுள்ளனர். இந்தவகையில் இளவரசனின் மரணத்தோடு தாங்கள் தொடர்புபடுத்தி பார்க்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே அவர்கள் விரும்புகின்றனர். ( முகப்புத்தகம் போன்றவற்றை கருகடித்து தீய்க்கும் இந்த ‘அக்னிப்புத்திரர்கள்’ இளவரசனின் மரணத்தை கொண்டாடித் தீர்ப்பதும்கூட இந்த விருப்பத்தின் ஒருபகுதிதான்).

இளவரசனை ‘காணாப்பிணமாக’ போக்கடிப்பதற்கான சாத்தியங்களை வேண்டுமென்றே நழுவவிட்டு முழுப்பிணமாக ரயில்ரோட்டில் கிடத்தியதற்கு காரணம், ரயில்ரோட்டில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் பிரதியை ஒவ்வொருவரது மனதிலும் கிடத்துவதுதான். உள்ளிருந்து வாழும் அந்தப்பிணத்தின் பிரதி சாதியை மறுத்து காதலிக்கத் துணிகிற எவரொருவரையும் எச்சரித்து தடுத்துவிடும் என்று பா.ம.க. தலைவர்களும் வன்னிய  வெறியர்களும் நம்புகின்றனர். ஆனால் வாழத்துணிந்த மக்கள் பிணங்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

13 கருத்துகள்:

  1. I agree with your sentiments 100%. But out of respect for Ilavarasan's dignity, may I please request you to remove the graphic picture of damage done to his head. Much as this picture tells a horrifying story, we must also consider the dignity of the victim. It would hurt his family & well wishers to view this picture, I think. Thank You.

    பதிலளிநீக்கு
  2. நீதிமன்றத்தின் ஆணைப்படி இளவரசனது தந்தைவசம் கொடுக்கப்பட்டுள்ள பிரேதப்பரிசோதனையின் ஒளிப்பட தகட்டிலிருந்துதான் இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி கோரமாக சிதைக்கப்பட்டுள்ள முகத்தை நேரில் பார்த்தே வெடிக்காத நெஞ்சம் புகைப்படத்தைப் பார்த்து என்னவாகிவிடப்போகிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. வன்மையாக கண்டிக்க பட வேண்டிய பதிவு. வெறுமனே வெறியை தூண்டுவதற்காக எழுதப்பட்ட நாலந்தர பதிவு.

    பதிலளிநீக்கு
  4. தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இளவரசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக ஃபிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்தலையை தானே இப்படி வெட்டிக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா? பாதி தலையை மட்டும் ரயில் சிதைக்குமா? ரயிலைவிட வலுவானதா இளவரசனின் உடல்?

    பதிலளிநீக்கு
  5. இளவர்சன் இழப்பை கேட்டதிலிருந்து அதற்குமுன் அந்த செய்திகளை அதிகம் தெரிந்திராத எனக்கு மனசெல்லாம் என்னமோ பிசைஞ்சது. இப்போ இந்த படத்தை பார்த்தபின்??!! சரியோ தவறோ?! காமமோ! காதலோ இல்லை விளையாட்டுத்தனமோ!? ஆயிரமாயிரம் கனவு கண்ட ஒரு சின்னஞ்சிறிய உயிர் இப்போ நம்மோடு இல்ல. அடுத்திருக்கும் உயிரற்ற நடைப்பிணமான திவ்யா என்னாகப் போகுதோன்னுதான் கவலையா இருக்கு இப்போ..

    பதிலளிநீக்கு
  6. //இளவரசன் தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டதாகச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்//
    சத்திரிய வம்சத்து அக்கினி புத்திரர்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்.
    //வன்னியப்பெண்ணை மணம் முடிக்கத் துணிகிற யாருக்கும்//
    "துணிகிற தாழ்த்தப் பட்ட சாதியினர் யாருக்கும்" தான் சரியானதாய் இருக்கும் என்பது என் எண்ணம்.
    சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
    கொன்றோர் பெரியார்(ஈவெரா இல்லை) இறந்தார் இழிகுலத்தார்
    என பட்டாங்கில் உள்ளதை படி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கொன்றார் பெரியோர் “ எனில் அடைப்புக் குறியை எடுத்துவிடலாம்.

      ”பாட்டாளிக் கட்சிப் படி” என்றும் முடிக்கலாம். அல்லது “என்றோர் கணக்குப் படி“ என்று எதுகை மோனையோடும் சொ்ல்லலாம்.
      மற்றபடி சேக்காளி சொன்னது சரிதான்.

      நீக்கு
  7. \\ஆனால் வாழத்துணிந்த மக்கள் பிணங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. //

    உண்மை.

    நல்ல பதிவு, பெரும்பாலானவர்களின் கருத்தும் இதுவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஔவை பேரன் அவசரப்பட்டுச் சொன்னதற்கு கும்மாச்சி சொன்ன பதில்தான் சரி.

      நீக்கு
  8. உங்களின் அலசல்,ஆய்வு சில முரண்பாடுகள் இருந்தாலும் விவாதிக்க கூடியதே!
    21-ஆண்டுகள்,பொருளாதார நெருக்கடியில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களைவிட காதல் ஒன்றும் பெரிதல்ல என்பதை முற்போக்குவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

    காதலர்களும் புரிந்து கொண்டு தாய்,தந்தையரை நேசியுங்கள்.தயவுசெய்து வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்.வழியப்போய் வம்பு தேடி,சுகமான வாழ்க்கையை சுட்டெரிக்கும் தீயில் சுட்டுவிடாதீர்கள்!ஒரு முறை சுட்டுவிட்டால் அது தொடர்ந்து வாழ்க்கை முழுவதையும் எரித்துவிடும்! முடிவில் சாம்பல்கூட மிஞ்சாது.எச்சரிக்கையுடன் காதலை தொடுங்கள்.ஒரு காதல் வழியில் இரண்டு உயிர்கள் மரணித்து,இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில்... நினைக்கவே நெஞ்சு எரிகிறது....

    இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம். http://theeranchinnamalai.blogspot.in www.facebook/theeran.samy http://kongutamailar.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. தர்மபுரி இளவரசன் முன்பே கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் (படங்கள்)

    சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்ட தர்மபுரி இளவரசனின் மரணத்தை சிலர் படுகொலையாக இருக்க கூடும் என்று சந்தேகித்தனர், இரயிலில் விழுந்திருந்தாலும் அவரது உடல் சிதறாமல் தலையில் மட்டுமே அடிபட்டிருந்ததால் சந்தேகம் வலுத்தது, சில நாட்களுக்கு முன் திருப்பமாக இளவரசனின் தற்கொலை கடிதத்தை சிலர் எடுத்து மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடிதம் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் இன்று மேலும் ஒரு தகவலாக இளவரசன் சென்னையில் வழக்கு விசயமாக வந்திருந்த போது திவ்யா தன் தாயாருடன் செல்லப்போவதாக கூறிய நிலையில் தி.நகர் லாட்ஜில் இடது மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரது தாயார் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றி முதல் உதவி செய்துள்ளார், இதை ஹோட்டல் ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர். இளவரசன் இடது மணிக்கட்டில் கட்டுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

    இளவரசனின் தற்கொலை கடிதத்தை மறைத்தது, இளவரசன் தற்கொலை மனநிலையில் இருந்தார் என்பதை மறைத்து செயல்பட்டது எல்லாம் சில அமைப்புகள் இளவரசன் மரணத்தை பயன்படுத்தி சாதிகளுக்கிடையேயான பூசலை வளர்த்திக்கொண்டே இருக்க ஆசைப்பட்டுள்ளார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். இளவரசனின் தற்கொலை முயற்சி இளவரசனுடன் பேட்டி எடுத்த சில பத்திரிக்கை நிருபர்களுக்கும் தெரிந்தே இருந்தது என்றாலும் அவர்கள் அது குறித்து தகவல்கள் வெளியிடாமல் இது கொலையாக இருக்கும் என்றே சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

    பதிலளிநீக்கு

  10. இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?
    தர்மபுரி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. வன்னியர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக குறிப்பாகவும் கொடும் வெறிகொண்டு அலையும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறிக் கூட்டத்தினர் 'தர்மபுரியில் இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்' என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

    1. தர்மபுரி கலவரத்தை பாமகவினர்தான் செய்தனர்,
    2. திவ்யாவை பாமகவினர்தான் கடத்தினர்,
    3. இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்

    - இந்த மூன்று கட்டுக்கதைகளை தமிழ்நாட்டின் வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினர் மிகவும் வெற்றிகரமாக பரப்பியுள்ளனர்.

    பதிலளிநீக்கு

  11. இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?
    தர்மபுரி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. வன்னியர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக குறிப்பாகவும் கொடும் வெறிகொண்டு அலையும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறிக் கூட்டத்தினர் 'தர்மபுரியில் இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்' என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

    1. தர்மபுரி கலவரத்தை பாமகவினர்தான் செய்தனர்,
    2. திவ்யாவை பாமகவினர்தான் கடத்தினர்,
    3. இளவரசனை பாமகவினர்தான் அடித்துக் கொன்றனர்

    - இந்த மூன்று கட்டுக்கதைகளை தமிழ்நாட்டின் வன்னியர் எதிர்ப்பு வெறிபிடித்த முற்போக்கு வேடதாரி கோயபல்ஸ் சூட்டத்தினர் மிகவும் வெற்றிகரமாக பரப்பியுள்ளனர்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...