ஞாயிறு, மார்ச் 31

பகைவீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடும் பெருங்கருணை - ஆதவன் தீட்சண்யா



2013 மார்ச் 16,17 / சேலம் / தக்கை - அகநாழிகை - 361 டிகிரி இதழ்கள் நடத்திய விமர்சனக் கூட்டத்தில்  கதிர்பாரதியின் "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" கவிதைத்தொகுதி குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை.

ஒரு கவிதைக்கான மூலகப்பொறி அல்லது மூலகச்சொல்லை உள்வாங்கியதற்கும் அது உட்திரண்டு ஒரு கவிதையாக எழுதப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தின் செயல்பாடுகளும் மனநிலைகளும் நேர்க்கோட்டிலானவையல்ல. அவை, சிக்கல் மிகுந்த வரைபடத்தைப் போன்று ஏற்றஇறக்க மாறுபாடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த செயற்தொடரில் மிக நேரடியாக தொடர்பு கொண்ட கவிஞரேகூட நிகழ்ந்து முடிந்தவற்றையெல்லாம் ஒற்றைச்சரமாக தொகுத்துக் கூறவியலாத நிலையில் அதற்கு தொடர்பேயற்ற ஒருவர் வாசகர்/ விமர்சகர் என்ற நிலையில் அந்தக் கவிதைகளை எவ்விதம் அணுகி எவற்றை வருவித்துச் சொல்வது? இப்படியானதொரு தத்தளிப்பையும் தவிப்பையும் இதற்குமுன் வெய்யில் மற்றும் சம்புவின் கவிதைகளை வாசித்தபோது உணர்ந்ததாய் ஞாபகம்.

நீங்கள் கூறும் எதுவும் எதிரொலிக்கிறது
நீங்கள் கூறாதது தனக்கெனக் குரலெழுப்புகிறது
எப்படியாயிருந்தாலும் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது அரசியல்
- விஸ்லாவா சிம்போர்காவின் இந்த வரிகள் சுட்டுவதைப்போல கதிர்பாரதி இந்தக் கவிதைகளை எழுதியதற்கும் அதுபற்றி நான் எழுத நேர்ந்தமைக்கும் அரசியலே காரணமாய் அமைந்திருக்கிறது. ஒருவேளை இவ்விரண்டையும் ஒருவர் வாசிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் கூட அரசியலே காரணமாய் இருக்கக்கூடும் என்று கருதிக்கொள்கிறேன். தஞ்சையின் வயலடிச் சேற்றை உழப்பிச் சாகப்பிறந்த ஒரு சமூக அடுக்கினர் அதிலிருந்து தப்பிக்க கிறித்துவராக மாறியதும் அல்லது கிறித்துவராக மாறி தப்பித்ததும் அப்பட்டமான அரசியல் அரசியல் அரசியல். ஆகவே அந்தச் சமூக அடுக்கின் ஒரு கொழுந்தான கதிர்பாரதிக்கு கல்வியறிவு வாய்த்ததும் இலக்கியப்பரிச்சயம் நேர்ந்ததும் அவரே எழுதக் கூடியவராகியிருப்பதும் தற்செயலானவை அல்ல. அவர் எழுதியிருக்கும் இக்கவிதைகள் அவரையே எழுதியிருக்கின்றன என்று சொல்வதற்கான தடயங்களைக் கொண்டிருக்கின்றன என்று என்னால் உணரத்தான் முடிகிறதேயன்றி வகைதொகையாக்கி உங்களுக்கு காட்டும் லாவகம் எனக்கு கூடிவரவில்லை. அதுசரிதான், அப்படி காட்ட முடிந்திருந்தால்தான் அவரது கவிதைகளை நானே எழுதியிருப்பேனே என்கிறது மனம்.

உற்பத்தி சார்ந்த வயக்காடு, நுகர்வு சார்ந்த நகரங்கள் என்கிற எதிரெதிர் பண்புகளைக் கொண்ட இருவேறு நிலப்பரப்புகளை வாழ்வெளியாகக் கொண்ட ஒருவரது சிந்தனாமுறையும் உலகு குறித்த கண்ணோட்டமும் எவ்வாறிருக்குமென்ற யூகங்களுக்கு அப்பால் செல்கின்றன கதிர்பாரதியின் கவிதைகள். ஒன்றை மற்றொன்றுக்கு கீழானதாக காட்டுவதற்கு தோதான எளிய வாய்ப்புகள் அனேகமிருந்தும் அவற்றை வேண்டுமென்றே தவறவிடுகிற கதிர்பாரதி ஒவ்வொன்றையும் அதனதன் இருப்பில் நிறுத்திவைக்கிறார். நகரவாழ்க்கை தந்திருக்கிற சொகுசுகளை அனுபவித்துக்கொண்டே தன் பூர்வீகநிலம் பற்றி அங்கலாய்ப்பதும், நகரம் பற்றி எப்போதும் சாரமற்ற புகார்களை எழுப்பிக் கொண்டேயிருப்பதுமான பாசாங்குகளை தவிர்த்துவிடுகிற இவர் இந்த இருவேறு வாழ்க்கையிலும்  அந்தந்த மண்ணுக்குரிய மனிதராக இருந்து வாழ்ந்து பார்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருக்கப்போய்தான் இந்தக் கவிதைகளை எழுத முடிந்திருக்கிறது.

கண்ணீரைக்கூட உப்புச்செடி என்று விளிக்குமளவுக்கு அவரது நினைவுக்குள் பயிர்பச்சை சார்ந்த நிலமும் விதைநெல்லும் வெள்ளாமையும் மகசூலும் வேம்பும் நல்லேரும் நிறைந்திருக்கின்றன. தட்டான்கள் தாழப் பறந்தால் மழைவருமென்பது போன்ற வானிலையின் பல சூட்சுமங்களை, வாழத்தேவையான அறிவியல் நுட்பங்களை - அறிவாக அல்லாமல், அதாவது மூக்கின்வழியாக சுவாசிக்க அறிந்திருப்பதை ஒரு அறிவாக யாரும் பீற்றிக்கொள்ளாதிருப்பதைப் போல - பாரம்பரியத்தில் அறிந்திருந்த அவரும் ஆனந்தியும் ஓடித்திரியும் நிலமாகத்தான் இந்த பூமி முழுவதையும் கொண்டாடி மகிழ்கிறார். ஆனாலுமென்ன, இயற்கையின் கொடைகளாகிய நிலம், நீர், கடல், மலை யாவும் வாழ்வாதாரங்கள் என்ற நிலையிலிருந்து பண்டங்களாக விற்பனைச்சரக்காக மாறும் ஒரு காலத்தில் அத்தனையும் யாருக்கோ களவாகிப் போகுமென்றால் கவிஞனும் சோழக்கடற்கரை பிச்சி போல வாய்க்குதப்பி வசவுகளை உமிழத்தான் வேண்டியிருக்கிறது. கடைசியில் அந்த கடல்தேவதையால் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததெல்லாம் சுமக்குமளவுக்கு முந்தானையில் அள்ளிப்போட்டு முடிந்து கொள்ளும் மணல் மட்டுமே. பஞ்சம் பிழைக்க பரதேசம் போகிறவர்கள் ஊர்ஞாபகமாய் இதாவது இருக்கட்டுமேயென பிடிமண்ணேந்தி போவதும் இவ்விடத்தில் நினைவுக்கு வராமலில்லை. கடல்களையும் கரைகளையும் கொள்ளைக்கு கொடுத்துவிட்டு இப்படி மடியில் மிஞ்சிய மணலை முலைகளுக்கு மத்தியில் பொதிந்து கண்ணயரும் அவளது உருவம், கனிமங்களுக்காக கொள்ளைபோகும் காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் விரட்டியடிக்கப்படும் பழங்குடிப்பெண்களாக,  எரிக்கப்பட்ட தமது வீட்டின் சாம்பலுக்குள் விழுந்து கதறும் தருமபுரி தலித் பெண்களாக, தாழப்பறந்து குறிபார்க்கும் வான்படைக்கு அடியில் பதுங்கியோடும் இடிந்தக்கரை பெண்களாக அல்லது ராணுவ ஒடுக்குமுறையின்கீழ் சூறையாடப்படும் வடகிழக்கு மாகாணத்துப் பெண்களாக பல்கிப் பெருகுகிறது. இந்தச்சூழல்தான் ‘யாவற்றுக்கும் முன்பாக நிலத்தை மீட்டாக வேண்டும்’ என்று அவரை அறிவிக்கத்தூண்டுகிறது. வாழ்வின் தேவையிலிருந்து இதற்கும் குறைவான ஒரு முடிவுக்கு அவரால் வரமுடியாது என்பதை உணர்கிறபோது அவர் சொல்லும் நிலம் தாயகத்தைப் பறிகொடுத்த யாவரது நிலமுமாக உருப்பெறுகிறது.

இழந்ததையெல்லாம் மறக்கடிக்கிற அல்லது மறக்கமுடியாத இழப்புகளிலிருந்து தப்பிக்க வைக்கிற பெரும் பொறுப்பை கபிலன் யு.கே.ஜி என்கிற மகனிடம் ஒப்படைத்துவிட அவர் மேற்கொள்ளும் முயற்சியும்கூட தற்காலிகம்தான். மகன்களோடு மேற்கொள்கிற ரயில் பயணத்திலும் பார்க்கிற கார்ட்டூன்கள் மற்றும் விலங்குச் சேனல்களிலும் தானுமொரு குழந்தையாகிவிட முடியுமானால் நல்லது என்று அவர் தவிப்பதை நம்மால் அறிய முடிகிறது. குழந்தைகளின் சேட்டைகளையெல்லாம் வியந்து எழுதுவதன் மூலம் தன்னையொரு மெல்லிதயம் படைத்த கவிஞராக கற்பிதம் செய்துகொள்ளும் அபத்தங்களுக்கு பதிலாக ஒரு குழந்தை தன் குழந்தைமை இயல்போடு வாழ்வதற்கு எதிராக விரையும் நடப்புலகத்தைப் பார்த்து அவர் அடையும் பதற்றமடைகிறார். இரும்புக்கை மாயாவிகளும் ராம்போக்களும் ஒற்றைக்கண் மந்திரவாதியும் அனகோண்டாக்களும் அருளுரை பொழியும் ஆன்மீகப் பூச்சாண்டிகளும் ஆக்கிரமித்துள்ள குழந்தைகள் உலகத்திற்குள் தன் மகன்களை தனியே அனுப்புவது குறித்த அச்சத்தினால்தான் அவர் தானுமொரு குழந்தையாகி அவர்களுக்கு துணையாக உடன் செல்கிறார். இது தந்தைமையின் தவிப்பைப்போல மேலுக்குத் தெரிந்தாலும் அந்தந்த பருவத்துக்குரிய வாழ்க்கையை வாழமுடியாத சூழல் குறித்து அவர் கொண்டுள்ள கவலை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. பத்தாம் கிளாஸ் பரிட்சையில் பெயிலாகியவர்கள் அல்லது பக்கத்துவீட்டு சுமாரான அழகிக்கு லவ் லட்டர் கொடுத்து அவளது அண்ணனிடம் மாட்டிக்கொண்டவர்கள் ஊரைவிட்டு ஓடிவந்து சேர்ந்து கொள்வதற்காக நகரத்து ஓட்டல்களில் பரோட்டா மாஸ்டர் ‘பதவிகளை’ உருவாக்கி வைத்திருப்பதும், பிள்ளைக்குப் பாலூட்ட மார்சுரந்த தாயொருத்தியை சுமந்துகொண்டு வருவதற்கென ஒரு ரயிலை ஊருக்குள் ஓட்டிவருவதற்கும் இந்தக்கவலையே ஆதாரமாக இருக்கிறது.

ஒரே காட்சியை இருவிதமாகப் பார்ப்பதற்கும், இருவேறு காட்சிகளை ஏககாலத்தில் தனித்தனியே காண்பதற்கும் வல்ல இரண்டு கண்கள் வாய்த்திருக்கின்றன கதிர்பாரதிக்கு. அடித்தள உழைப்புச்சமூகத்தின் ஆழ்மனக்கண் வெள்ளாமை தட்டான் வேப்பமரம் கரிச்சான்கள் எருக்கம்புதர் இண்டம்புதர் துளசி கொண்டலாத்தி என்று நிலத்தையே சுற்றிசுற்றி பார்த்துக்கொண்டிருக்க மதமும் கல்வியும் கொடுத்த மற்றொரு கண்ணோ பெரு நகரத்துக்கு கூட்டிப்போகும் பாதையொன்றை இமைக்காமல் தேடிக்கொண்டிருக்கிறது. கடவுள், வழிபாட்டுத்தலங்கள், மதம், மறைநூல்கள், ஆண்பெண் உறவு, குடும்பம், அறங்கள், ஒழுக்க மதிப்பீடுகள், அரசு, அதிகாரம், புனிதங்கள், கருணை, இரக்கம் என எதுவொன்றையும் அவற்றின் முழுப்பரிமாணத்தில் இந்த இரண்டு கண்களுமே அடிமுடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தக்காட்சிகள் குறித்து இவ்விரு கண்களும் நடத்திக்கொள்ளும் விவாதங்களே இங்கு கவிதைகளாகியுள்ளன. காலத்தின் கண்ணாடி என்கிற அலங்கார நிலையிலிருந்து காலத்தின் சாட்சியம் என்ற திட்டவட்டமான நிலைக்கு கலையும் இலக்கியமும் இவ்வாறாகத்தான் மாறிச்செல்கின்றன என்று புரிந்துகொள்கிறேன்.

வாசகர் நுழைவதற்கான இடம் தேவை என்கிற போதத்தைக் கேட்டு ஒவ்வொரு கவிதையிலும் இரண்டிரண்டு வரிகளை உருவியெடுத்து வழியேற்படுத்திக் கொடுக்கும் ‘நல்லுள்ளம்’ கதிர்பாரதிக்கு வாய்க்காததால் அவரது சொற்சேர்க்கைகளும் வாக்கிய கட்டுமானமும் - இறுக்கமான என்பதைவிடவும்- திரட்சியான ஒரு வடிவத்தை கவிதைக்கு தந்துள்ளன. நிலம் சார்ந்த இக்கவிதைகளின் இடையிடையே தென்படும் வடசொற்கள் இயல்புக்கு பொருந்தாத ஜிகினாவாக உறுத்தினாலும் உழைப்பு சார்ந்த வாழ்விலிருந்தும் விவிலியப் பரிச்சயத்திலிருந்தும் உருவாகியுள்ள இவரது மொழியும் படிமங்களும் தொன்மங்களும் மந்திரமான ஒரு மனநிலைக்கு ஆட்படுத்தி கவிதைகளை வாசிக்க வைக்கின்றன. ஆனால் தேங்கிய இரு கண்ணீர்த்துளிகளைப்போல குட்டிரேவதிக்கு தெரிகிற முலைகள் கதிர்பாரதிக்கு ‘சதையமுதமாக’ தெரிவது ஆண் என்கிற ஒரு காரணத்தினால்தான் என்றால் மற்றமைகள் பற்றிய தனது கரிசனங்களை  அவர் தீவிரமாக பரிசீலனை செய்தாக வேண்டியிருக்கும்.

நான் நீ என்கிற இணை எதிர்மைகளுக்குள் கரைந்து வருந்துதல், சினத்தல், பிணங்குதல், நகுத்தல், பகடியாடுதல், ஐயங்கொள்ளல் என்று குரல் மாற்றி குரல் மாற்றி அவர் நடத்தும் உரையாடல்களும் எழுப்பும் கேள்விகளும் உண்மையில் அவர் தன்னோடும் சமூகத்தோடும் நடத்திக்கொள்ள விரும்புகின்றவைதான். பகைவீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப் போடும் பெருங்கருணை நிலையை அடைவதற்குரிய குறிப்புகளால் நிறைந்திருக்கும் இத்தொகுப்பு பற்றி நீங்களும் பேசுவதற்காக இவ்விடத்தில் நான் முடிக்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமை
சுகுணா சிக்கன் ஸ்டால்
வாடிக்கையாளர் வரிசையில்
எனக்குப் பின் நின்ற
சிறுமிக்கு வழிவிட்டு
பின்
நகர்ந்தேன். என் கரிசனம் குறித்து
உங்கள் கருத்துகளை அறிய
ஆவல்.

- கதிர்பாரதியின் இந்த ஆவலுக்கு என்னிடம் உடனடியாய் பதிலில்லை. உங்களிடம்...?
 
நன்றி: காக்கைச்சிறகினிலே ஏப்ரல் 2013

2 கருத்துகள்:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...