ஞாயிறு, ஜூன் 24

ஜெயமோகனின் புளுகுகளை அம்பலப்படுத்தும் விடியல் சிவா

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு,
உங்கள் வலைத்தளத்தில் (Jeyamohan.in) 23.5.2012 அன்று எஸ்.வி.ராஜதுரைக்கு எழுதியுள்ள பதிலில், கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்'

“உங்களுடையபெரியார்: சுயமரியாதை சமதர்மம்என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.”
“இதை புதியதாகவும் சொல்லவில்லை. தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.”
எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய ‘பெரியார்:சுயமரியாதை' நூலின் முதல் பதிப்பு ‘விடியல் பதிப்பக'த்தால் 1996இல் வெளியிடப்பட்டது. அந்த நூலை எழுதிய இருவருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.கோதண்டராமன் (பொற்கோ) அவர்கள் தலைமையில் தோழர் வே.ஆனைமுத்துவின் தலைமையில் மார்க்ஸிய- பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு  பாராட்டுச் சான்றிதழுடன் நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 5000 சன்மானமாகத் தரப்பட்டது. ஆனால், அந்த சன்மானத்தை தோழர் வே.ஆனைமுத்துவின் ‘சிந்தனையாளன்' ஏட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் இருவரும் தந்துவிட்டனர்.

இந்தக் கட்டுரையில் உங்களால் போற்றப்படும் தோழர் வே.ஆனைமுத்துவாலேயே விழா எடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தை நீங்கள் ‘குப்பைக்கட்டு' என்று சொல்வது உங்கள் உரிமை.

அந்தப் புத்தகத்திற்கு முன்விலைத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதும் விற்பனை செய்யப்பட்டதும் உண்மை. ஆனால் “தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.” என்று எழுதியுள்ளீர்கள்.   அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே பரப்பி வந்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள். எனினும் இதற்கு முன்பு எப்போது, எங்கு இந்தக் கருத்தை  எழுதினீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

வெளிநாட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு, பணம் கொடுத்தவர்களின் நிபந்தனைக்குட்பட்டு எஸ்.வி.ராஜதுரை எழுதுகிறார் என்று 20.6.2012லும் பின்னர் அதே விமர்சனத்தை வ.கீதா மீது 23.6.2012லும் உங்கள் வலைத்தளத்தில் எழுதியுள்ளீர்கள். என்னோடும் என் பணிகளோடும் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் இருவரைக் குறித்தும் சில தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.  

கடந்த 2011ஆண்டில் மட்டும் மூன்று விருதுகளும் அவற்றுடன் சேர்ந்து பெருந்தொகைகளும் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கு தரப்பட விருந்தன. எழுத்தாளர்கள் பாமா, மனுஷ்யபுத்திரன் ஆகியோருடன் சேர்த்து எஸ்.வி.ராஜதுரைக்கும் பாராட்டு விருதும் எஸ்.வி.ராஜதுரைக்கு ரூ.30000 பணமும் வழங்க சமயபுரம் எஸ்.ஆர்.வி.மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி முன்வந்தது. விருதையோ பணத்தையோ ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதை நீங்கள் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் பரீக்ஷா ஞாநியிடமிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக 2011ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு' இலக்கிய விருதையும் அதனுடன் சேர்ந்து வரும் ரூ.50000த்தையும் பெற்றுக் கொள்ள தோழர் எஸ்.வி.ராஜதுரை -அவரால் பெரிதும் மதிக்கப்படும் அவரது நண்பர் ‘வெளி' ரங்கராஜன் போன்றவர்கள் வற்புறுத்திய போதும்கூட -மறுத்துவிட்டார்.

காலஞ்சென்ற அறிஞர் பழ.கோமதிநாயகம் பெயரால்  நிறுவப்பட்டுள்ள விருதும் அத்துடன் சேர்த்து  ஒரு இலட்சம் ரூபா பணமும் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கு வழங்க வேண்டும் என அந்த விருதுக்குழுவால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதையும் ஏற்றுக் கொள்ள தோழர் எஸ்.வி.ஆர். மறுத்துவிட்டார். இதை அண்ணன் பழ.நெடுமாறனிடமிருந்தோ, டாக்டர்.ஜீவானந்தம் அவர்களிடமிருந்தோ தெரிந்து கொள்ளலாம்.

மூன்று  இருத அறுவை சிகிச்சைகள், கிட்டத்தட்ட  கண்பார்வை இல்லாமல் போன நிலை ஆகியவற்றுடன், புற்றுநோயும் மூட்டு வலிகளும் கண்ட தனது துணைவியாருடன் ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்திவரும் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கு பண உதவி எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவருக்குப் பணம்தான் முக்கியம் என்றால் எந்த நிபந்தனையுமில்லாமல், தரப்பட்ட மேற்சொன்ன விருதுகளையும் பண முடிப்புகளையும் எந்தப் புத்தகத்தையும் எழுதாமல் வாங்கியிருக்கலாமே? அவர் வெளிநாட்டு உதவிகளை நாட வேண்டிய தேவையே இல்லையே?

அமெரிக்காவில் கிடைத்த பிரகாசமான வாய்ப்புகள், புகழ் ஆகியவற்றை உதறித் தள்ளிவிட்டு சொந்த நாட்டு மக்களுக்காக எழுத வேண்டும், செயல்பட வேண்டும் எனத் தாயகம் திரும்பி வந்தவர் தோழர் வ.கீதா. அன்னிய நிதியை அவரால் அன்னிய நாடுகளிலேயெ பெற்றிருக்கலாம் அல்லவா?

இதுபோன்ற அவதூறுகளைச் சந்தித்துப் பழகிவிட்ட அவர்கள் பொருட்டு நான் செய்ய வேண்டியது ஏதும் இல்லை.

ஆனால், உற்றார் உறவினர்களைத் துறந்து, வசதியான நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உதறித் தள்ளி, திருமணம்கூட ஒரு பந்தமாகிவிடுமோ என்பதனால் அதையும் வேண்டாம் என்று முடிவு செய்து இடதுசாரி, பெண்ணிய, தலித்தியக் கருத்துகளைப் பரப்புவதற்காகவே என் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா போன்றோருடன் செலவிட்டுள்ள என்னையும் என்னால் நிறுவப்பட்டு தமிழகத்திலுள்ள மிகச் சிறந்த, நேர்மையான நூல் பதிப்பகங்களிலொன்று எனப் பெயர் பெற்றுள்ள ‘விடியல் பதிப்பக'த்தையும் அவதூறு செய்வதற்காக ‘பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' புத்தகம் அன்னிய நிதி உதவியால் வெளியிடப்பட்டது என்னும் அபாண்டமான, அபத்தமான, உங்கள் மனசாட்சியை சிறிதும் உறுத்தாத பொய்யைக் கூறியிருக்கிறீர்கள். அன்னிய நிதி உதவி பெற்றதற்கான சான்று உங்களால் ‘குப்பைக்கட்டு' என்று என்றோ கடாசப்பட்டதாக நீங்கள் சொல்லும் அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பின் நான்காம் பக்கத்தில் இருப்பதாக, உங்கள் ‘ நினைவி'லிருந்து சொல்கிறீர்கள்.

இந்தக் கருத்தை இதற்கு முன்பே சொல்லி வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.

உங்களது இந்த அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு, நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, மரணத்துடன் போராடி வரும் எனக்கு பெரும் மன உளைச்சலைத் தந்துள்ளது. எனது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

எனவே நீங்கள் ‘பெரியார்' சுயமரியாதை சமதர்மம்' நூல் குறித்துக் கூறியவை அப்பட்டமான பொய் என்றும் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் உங்கள் வலைத்தளத்திலேயே ஓரிரு நாட்களில்  நீங்கள் பதிவு செய்ய வேண்டும். எனக்கு இன்னும் விட்டு வைக்கப்பட்டுள்ள நாட்களில் இன்னும் சில நல்ல ஆக்கங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தர வேண்டும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழைத்து வரும் எனக்கு உங்கள் அவதூறுகள் கடும் மன வேதனையை, சொல்லொணா மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. ஒருவேளை நான் விரைவில் முடிவு எய்திவிட்டாலும்,  என் மீதும் நான் நிறுவிய ‘விடியல் பதிப்பக'த்தின் மீதும் நீங்கள் சுமத்தியுள்ள களங்கத்தைப் போக்க, உயிருடன் இருந்தால் நானோ, இல்லாவிட்டால் என்னால் நிறுவப்பட்டுள்ள ‘விடியல் அறக்கட்டளை' பொறுப்பாளர்களோ தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

பெ.சிவஞானம் (விடியல் சிவா)



3 கருத்துகள்:

  1. இலக்கியவாதிகளுக்குள்ளே இம்புட்டு அக்கப்போரா? தமிழ் நண்டுகளா இருப்பாங்களோ எல்லாம் :-))

    பதிலளிநீக்கு
  2. இதற்கு ஜெயமோகனின் பதில் http://www.jeyamohan.in/?p=28347

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  3. The World Association for Christian Communication (WACC) என்ற ஒரு சர்வதேச தன்னார்வ நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி ஜெயமோஹன் இப்படி சொல்கின்றார் http://www.jeyamohan.in/?p=28320 /...இப்படிச் சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பொதுச்சிந்தனைகளையும் ஊடுருவுதல். செய்திகளில், வரலாற்று ஆய்வுகளில், அரசியல் சொல்லாடல்களில், கல்விப்புலங்களில் தங்கள் கருத்துக்களை நுழைத்தல். தங்களுடைய நீண்டகால திட்டங்களுக்கு ஏற்ப பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் திரித்து வடிவமைத்தல்/ ஜெயமோஹன் அவர்களே, உங்கள் அபிமானத்துகுரிய தீவிரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ்-ம் அதன் வால்களான பிஜேபி போன்ற அமைப்புக்களும் இந்தியாவில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேல் இதே வேலையைத்தான் செய்துவருகின்றார்கள்! அவர்களைப் பற்றியும் நீங்கள் எழுதலாம்- உங்கள் தளத்தில், தினமலரில்... (ஜெயமோஹன் ப்ளாக்கில் பின்னூட்டத்துக்கு இடம் இல்லை)... இக்பால்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...