புதன், நவம்பர் 30

அமெரிக்கத் தேர்தல்: சில அவசரமான அவதானிப்புகள் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா

காலம் இதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை தோழர் ந.முத்துமோகன் அவர்கள் வாசிப்பதற்காக அனுப்பியிருந்தார். முக்கியத்துவம் கருதி இங்கு பகிரப்படுகிறது. 


அமெரிக்கத் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட  அடுத்தநாள் காலையில் இப்பதிவை கணனியில் எற்றுகிறேன். இக்கட்டுரையை நாலாண்டு கழித்து அதாவது டிரம்பின் ஆட்சியின் முதல் தவணைக்குப்பின் படிக்கும்போது இங்கே சொல்லப்பட்டவை கோமாளித் தனமானவையா அல்லது தீர்க்கதரிசனமானவையா என்பது  டிரம்பு நடந்துகொள்ளும் விதத்திலும் அவரை சரித்திரம் எப்படி விசாரணை செய்கிறது என்பதிலும் பொறுத்திருக்கிறது.
            
டொனால்ட் டிரம்ப்பின்  வெற்றி அறிவிக்கும் முக்கிய  செய்தி: அமெரிக்கத் தலைவர் பதவிக்கு முன் அனுபவம், அறிவு, மற்றும் தகுதிகள் போன்றவை தேவை இல்லை; பணமும், சொல்வாக்கும், வீறாப்பும் எளியவரைக் கேலி செய்யும் அடாவடித்தனமும், முக்கியமாக  ஊடங்களின் தலைப்புச்செய்திகளை வசியவைக்கும் தன்மையும் இருந்துவிட்டால், அமெரிக்கக் கனவை ஒரு வெள்ளை இனத்தவர் சாதித்துவிடலாம். ஈழப் பெற்றொரின் அவ்வையார் தன்மையான  "பிள்ளையே கவனமாகப் படி" என்ற வார்த்தைகளுக்கு, மோடி செல்லாது என்று அறிவித்த 500, 1000 ருபாய் நோட்டுகள் போல், இனி அதிக மதிப்பிருக்காது.

ஓர் ஆபிரிக்க அமெரிக்கரின் ஆட்சிக்குப்பின் வெள்ளையரின் பேரினவாதத்தை ஆதரிக்கும் கே.கே.கே.யின் ஆசீர்வாதத்துடன்  பதவிக்கு வருவது, ஒபாமாவின் தேர்வு உருவாக்கியதாகச் சொல்லப்படும் பின்-இனஞ்சார்ந்த (post racial) சமுதாயம் வெறும் கற்பிதம் என்பதை உணர்த்துகிறது. ''மீண்டும் அமெரிக்காவை மகத்தான நாடாக்குவோம்`` என்ற இவரின் தேர்தல் பிரசாரத்தில் பொதிந்துகிடக்கும் உப பிரதி: அமெரிக்காவை மறுபடியும் வெள்ளையர்  கைக்குக்  கொண்டுவருவதே.

டிரம்ப் எற்படுத்திய நவீன கட்டுக்கதைகளில்  ஒன்று, இவர் தன்னை உழைக்கும் வர்க்கத்தினரின் வேட்பாளராகவும், ஹிலரியை தற்போதைய ஆதிக்கத்தரப்பின் (The Establishment) வேட்பாளராகவும்  சித்தரித்தே. குடியேறிகள், அரசின் நல உதவி பெறுகிறவர்கள்,  பிரத்தியேகமான  சலுகைகளை அனுபவிக்கும் சிறுபான்மையினர், கூட்டு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பாதகமாகத் திணித்த ஒப்பந்தங்களுக்கு எதிரான வேட்பாளராகவும், கடினமாக வேலைசெய்யும் அமெரிக்க  உழைப்பாளிகளை  பாதுகாக்கும் நாட்டுப்பற்றுமிக்க வேட்பாளராகவும், அவர்களில் ஒருவராகவும் தன்னை டிரம்ப் அடையாளப்படுத்திக்கொண்டார். இது உண்மையல்ல. இவரும் ஆதிக்கத்தரப்பைச்  சேர்ந்தவர். துருப்பிடித்த பகுதி (Rust Belt) என்று அழைக்கப்படும் ஊர்களிலிருக்கும் டிரம்பின்  ஆதரவாளர்கள் இவர் நடத்தும் உண்டுறை விடுதியில்  ஒரு நாள் தங்க  இவர்களின் ஒரு மாதச் சம்பளம் போதாது. இந்தத் தொழிலாளர்களுக்கும் டிரம்புக்கும் இடையே காணப்படும் வர்க்க இடைவெளி, தலைமன்னாரையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்கும்  பாக்கு நீரிணையைவிட விரிவானது, அழமானது.  இவர் அமைச்சரவையில் நியமனமாகப்போகும் பெயர்களைப் பாருங்கள். எந்த சகதியை வடிகட்டவேண்டும் (drain the swamp) என்று சொன்னாரோ அதே வாஷிங்டன் என்ற சகதியில் இருந்து வந்தவர்கள்.

டிரம்ப் பற்றிய இன்னுமொரு கட்டுக்கதை: வெள்ளை இன உழைப்பாளர் வர்க்கத்தின் கோபமே இவரின் வெற்றிக்குக் காரணம் என்பது. புள்ளிவிபரங்களை சற்று ஊன்றிப் படித்தால்  கிடைக்கும் செய்தி சற்று வேறானது. இது தொழிலாள வர்க்கம் கொதித்து ழும்பி நடத்திய புரட்சி அல்ல. ஆண்டுக்கு $250,000 மேலாகச் சம்பளம் வாங்குவோரில் 48 வீதத்தினரும் டிரம்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதேபோல் வருடத்திற்கு  $30,000 கீழ் ஊதியம் பெறுகிறவர்களில் 53 வீதம் ஹிலரி கிலிண்டனுக்குத் தங்கள்  சம்மதத்தைத் தெரிவித்திருந்தார்கள். மற்றும் 49வீத வெள்ளை பட்டதாரிகள் வாக்கு டிரம்புச் சென்றிருக்கிறது. இந்த புள்ளிவிபரம் தரும் இன்னும் ஒரு விநோதமான செய்தி. பெண்ணின வெறுப்பை தன் வாழ்நாள் சாதனையாக்கிய டிரம்புக்கு வெள்ளைப்பெண்களில் 53வீதம் வாக்கைப் போட்டார்கள். வெள்ளையர்களின் சிறப்புரிமை, அந்த இனத்தின் தனிச்சலுகைகள் இந்த வெள்ளைப்பெண்களுக்கு முக்கியமாகப்பட்டது. பெண்னிய உரிமைகள் அல்ல. கருக்கலைப்பு பற்றிய டிரம்பின் கல்தோன்றா மண்தோன்றாக் காலத்து பிற்போக்கான கருத்துகளைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மக்கள் கணிப்பியலில் ஆயிரம் ஆண்டுகாலத்தினர் (millennial) என்று அழைக்கப்படும்  இளம் வயதினர்களில் பெரும்பான்மையினர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தது இந்த புள்ளிவிபரம் தரும் ஆறுதலளிக்கக்கூடிய வாசிப்புகளில் ஒன்று.

டிரம்பின் சாதனைகளில் ஒன்று, பின்-உண்மை அரசியலை (post-truth politics) பொது சொல்லாடலில் புகுத்தியது. இந்த அரசியல் தகைமையற்ற கூற்றின் ஆக்கியோன் டிரம்ப் இல்லை. ஆனால் இந்த கருத்தாடலை தீவிரப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். உண்மைகள், சான்றுகள்,  உறுதிசெய்யக்கூடிய நிகழ்பாடுகள் ஒன்றுமே இப்போது முக்கியமல்ல. வாய்க்கு வந்தபடி சொல்லவேண்டியது, அது உண்மையா பொய்யா என்ற கவலை இல்லை. ஹிலரி பொய்பேசுகிறவர், தார்மீகக் கோலானவர் என்றார். இவைகளுக்கான ஆதாரங்கள் ஒன்றுமே தரவில்லை.

"செய்யுளில் பிரசாரம் செய்யுங்கள், உரைநடையில் ஆட்சியை நடத்துங்கள்" என்று  படிப்பதற்குப் புத்திசாலித்தனமான ஆனால் நடைமுறைக்கு  அறவே உதவாத  வசனங்களை நியூ யோர்க் ஆளுநர் Mario Cuomo சொன்னதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் தன்னுடைய பிரசாரத்தை வசையில் தான் நடத்தினார். டிரம்ப் ஒரு சமவாய்ப்பு (equal opportunity) வசவாளர். பெண்கள் முதல் வலுதளர்ந்தோர் வரை இழிவாகப் பேசினார்.  அவருடைய வசை மொழிக்கு முன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருவள்ளுவர் போல் தெரிகிறார்கள். இந்தக் கீழ்த்தரமான,  கடுங்காரமான, பிறிதானவர்களை ( the other) குற்றம் சாட்டும் அரசியல் பிரசாரம் டிரம்பின்  தனி குத்தகை அல்ல. இதற்கு முன்பும் அமெரிக்க தலைவர் தேர்தலில்  காரசாரமான இன, மத வெறி பரப்புரை செய்யப்பட்டிருகிறது. அந்தப் பெருமை 1850 முதல் 1853 வரை குடியரசு அல்லது ஜனநாயக கட்சியைச் சேராத  அமெரிக்க தலைவராயிருந்த Millard Fillmore ச் சேரும். இவர் அங்கம் வகித்த கட்சியின் பெயர் The Know-Nothing Party. இவர்கள் இன்றைய கே.கே.கே. யின் முன்னோடிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவரின் கட்சியின் ஆதாரவாளர்கள் கிறிஸ்தவ சீர்திருத்தச் சபையைச் சேர்ந்தவர்கள். டிரம்பைப் போலவே இவர்கள், குடியேறிகள் அமெரிக்க கலாச்சாரத்தை தீட்டுப்படுத்துகிறார்கள் என்ற விஷத்தைப் பரப்பினார்கள்.  டிரம்புக்கு முஸ்லிம்கள் போல் இருவர்களுக்கு கத்தோலிக்கர். பாப்பாண்டவர் அமெரிக்காவை ஆட்கொண்டுவிடுவார் என்று பயம் இருந்தது. இன்று டிரம்ப்பின் சொல்லாடலில் காணப்படும் எல்லா அவதூறுகளும் இவர்களின் பிரசரத்திலும் காணலாம். "எல்லா மனிதர்களும் சமனானவர்கள்" என்று எங்கள் அரசியல் சாசனம் கூறுகிறது. இவர்களுடைய பார்வையில் "எல்லா மனிதர்களும் சமனானவர்கள், ஆனால் கறுப்பர்கள், கத்தோலிக்கர்கள், அன்னியர்கள் தவிர என்று ஆபிரகாம் லிங்கன் இவர்களின் மனப்போக்கை ங்கலாயித்திருந்தார்.

இலக்கியத்தில் எதிர்காலம் பற்றி  தீர்க்கதரினமான ழுத்துக்கள் உண்டு.  Franz Kafka நாஜிகளின் வாயுக்கூடங்கள் ( gas chambers) பற்றி முன் எச்சரிகை செய்தார். Orwell அவருடைய  1984  இல் மக்கள் வாழ்வில் எங்கும்  வியாபித்திருக்கிற சார்வாதிகார ஆட்சி எவ்வாறு ஒரு தனிமனிதனின்  ஆளுமையையும், சுதந்திரத்தையும் ஒருநாள் வன்முறையில் கட்டுப்பட்டுக்குக் கொண்டுவரும் என்று கற்பனை செய்தார். Philip Roth அவருடைய Plot Against Americaவில் யூத எதிர்ப்பாளர்கள் அமெரிக்க ஆட்சிக்கு வந்தால் எற்படும் விபரீதங்களை புனைகதையாக ழுதினார். ஆனால் டிரம்பைப் போல் அதிதீவிர தனித்தன்னாட்சியாளர் ஒருவர் உருவாகலாம் என்று முன்னுணர்வுடன் சொன்ன நாவல்   Sinclair Lewis வின்  It Can't Happen Here (1935).  இந்த நாவலில் ஒரு வல்லாண்மையாளர் (fascist) அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்றினால் விளைவும் தாற்பரியங்களைக் கதையாகச் சொன்னார். அவர் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன் நாவலில் பதிவு செய்தது இன்று நிறைவேறியிருக்கிறது. இந்த நாவலின் கதாநாயகன் வின்ரிப்புக்கும் டிரம்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே ஆணவப்போக்குடையவர்கள். இரண்டு பேருக்கும் மெக்சிக்கர்களே எதிரி. வின்ரிப்பு அந்த நாடு மீது போர் தொடுத்தார். டிரம்ப் அந்த வேலையை இன்னும் செய்யவில்லை. நாலாண்டு காலம் இருக்கிறது. இவர்கள் பார்வையில் பெண்கள் இருக்கவேண்டிய இடம் அடுப்படி.  இந்த நாவல் பற்றி இன்னொரு இதழில் விரிவாக ழுதியிருக்கிறேன். இந்த நாவல் தரும் மறைமுகமான செய்தி: வல்லாண்மை அமெரிக்காவில் அமுலானால் அது அமெரிக்கத்தன்மையானது என்று அழைக்கப்படும் When fascism comes to America, they will call it Americanism.

மெக்சிகோ-அமெரிக்க  எல்லையில் மதில் எழுப்புவேன், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடைசெய்வேன் என்றெல்லாம் டிரம்ப் அவருடைய பிரசாரத்தில் கூறிய அடாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்று பதட்டத்துடன் இருப்பவர்கள் இரண்டு வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் : ஒன்று ஒபாமா மற்றது குவாந்தானமோ  பே (Guantanamo Bay), ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் இந்த தடுப்பு காவல் நிலையத்தை இழுத்து முடுவேன் என்றார் ஒபாமா. எட்டு வருடங்கள் கழித்து இன்னும் கைதிகள் அங்கே இருக்கிறார்கள்!

மக்கள் தேசிய விருப்புவாதம் உலகு எங்கும் காணப்படுகிறது. இன்று ஆட்சி நடத்தும் அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது எமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அமெரிக்காவில் டிரம்ப், துருக்கியில் Tayyip Erdoğan,  பிலிப்பின்ஸ் தீவுகளில் Rodrigo Duterte,  செக் குடியரசில்  Miloš Zeman,  ஹாங்கேரியில் Viktor Orban...  அதேபோல் அய்ரோப்பாவில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் எதிர் கட்சிகளைப் பாருங்கள்; அச்சம் இன்னும் அதிகமாகும்.  பிரான்சில் Marine Le Pen, ஒல்லாந்தில் Geert  Wilders,  ஆஸ்திரியாவில்  Norbert Hofer. இவர்கள் பரப்புரைக்கும் அதீத தேசியவாதம் தங்களுடைய நாடுகளுக்கேற்ற தன்மைகளைக் கொண்டிருந்தாலும் இந்தத் தலைவர்களை ஒன்றிணைக்கும் சாமச்சாரங்கள் உண்டு. குடியேறிகளைக் கட்டுப்படுத்தவேண்டும், அவர்கள்  தூய தேசிய அடையாளத்தை கறைபடுத்துகிறவர்கள்; இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள், ஆகையினால் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்; உலகமயமாக்கல் தேசிய அரசுகளின் இறையாண்மையை சிதைத்து விடுகிறது, எனவே சுதந்திர சந்தையைக் கட்டுப்படுத்தவேண்டும்... இவர்களின் ஒரே நோக்கம் அன்னிய தீய சக்திகளிடமிருந்து பழைய வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதே. சமத்துவ சர்வ தேச, பன்முக ஒழுங்கினை உருவாக்குவதைவிட, தத்தம் நாட்டுக் குடிமக்களின் தனிநிலைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். பிற நாடுகளுடன் தொடர்பைத் துண்டித்து ஒரு ஒதுக்குநிலையை விரும்புகிறார்கள். எதிர் உலகமாயக்குதலுக்கு இவர்கள் தரும் விடை பொருளாதார தேசியம்.

கடைசியாக, இதேபோன்று தாராளவாதம் மங்கி, இருள் ஓங்கிய நாஜி நாட்களில் Bertolt Brecht ஏழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. அவரின் கவிதையை உரைநடையில் தந்திருக்கிறேன். இவை நல்லுணர்ச்சி தரும் வாக்கியங்கள் அல்ல. ஆனாலும் வாசித்துப் பாருங்கள்: இந்த இருண்ட நாட்களில் பாட்டுப்  பாடலாமா? ஆம், பாடலாம். பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும், இருண்ட நாட்கள் பற்றி. 

திங்கள், நவம்பர் 28

வி.பி.சிங் நினைவாக - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான போரைத் தொடங்கியவன் நானே என்று நரேந்திர மோடி மார் தட்டிக் கொள்கிறார். கடந்த 70 ஆண்டுக் கால இந்திய நிர்வாகம் செயல்பட்டு வந்ததைப் பற்றியப் புலனாய்வைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அரசியலிலும் அரசாங்கத்திலுல் ஊழல்களும் இலஞ்ச விவகாரங்களும் இருந்தன என்பது உண்மைதான். ஆனால்  நேருவோ அவரது நெருக்கமான சகாக்களோ இலஞ்சம் –ஊழல் கறை படிந்தவர்களாகச் சொல்ல முடியாது. எனினும், அரசியலில் குடும்ப வாரிசு முறையை உருவாக்குவதும்கூட ஊழல்தான் என்றால்  நேருவும் மறைமுகக் குற்றவாளிதான். தமக்குப் பின் தமது மகள் இந்திரா காந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எதனையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை என்றாலும்,   அவர் யாரைத் தமது அரசியல் வாரிசாகக் கருதுகிறார் என்று பலமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழித்ததும், அவர் உயிரோடு இருக்கும்போதே இந்திரா காந்தியை அனைத்திந்தியக் காங்கிரஸின் தலைவராக்க இசைவு தந்ததும், இந்திரா காந்தி தேர்தல் ஜனநாயகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையைக் கலைப்பதற்காக மதவாத, சாதியப் பிற்போக்குச் சக்திகளுடன் கைகோர்த்ததை எதிர்க்காமலிருந்ததும், இந்திய   ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் மாபெரும் ஊழல் என்று கூறலாம். ஊழலும் இலஞ்சமும் காசு வாங்குவதில் மட்டும் இல்லை.

 நேருவுக்கு அடுத்தபடியாகப் பிரதமர் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி தனிப்பட்ட முறையில் அப்பழுக்கற்றவர்; அதேபோலத்தான் காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வகித்த  மொரார்ஜி தேசாயும்.
வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காக மதவாதத்தைப் பயன்படுத்துவதும் ஊழல்தான் என்றால்,  அந்தக் குற்றச்சாட்டு இந்திரா காந்திக்குப் பொருந்தும். ஏராளமான முறை அவர் முஸ்லிம் விரோதப் பேச்சுகளைப் பேசியிருப்பதை, அவரது மகன் ராஜிவ் காந்தி முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதை வரலாற்று அறிஞரும் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.. நூரானி ஆவணப்படுத்தியுள்ளார்.

அரசியலிலும் அரசாங்கத்திலுமுள்ள ஊழல்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற போர் முழக்கத்தை எழுப்பி வந்த ராம் மனோகர் லோகியாவும் ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  இந்திய பாசிச சக்திகளான ஜன் சங், ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ‘அரசியல் கெளரவம்’ கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றினர்.

காங்கிரஸ் அல்லாத மத்திய அரசாங்கத்தில் சிறிது காலமே பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் கறை படியாத மனிதராக இருந்தார் என்றால் கறைபடியாதவராக இருந்ததோடு மட்டுமின்றி கறைபடிந்த கரங்கள் அனைத்தையும் அரசியலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான துணிச்சலான முயற்சியை மேற்கொண்டவர் வி.பி.சிங் ஒருவர் மட்டுமே.

ராஜிவ் காந்தியின் முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுபேற்றுக் கொண்டவுடன், இந்தியாவில் ஊழலையும் இலஞ்சத்தையும் மேல்மட்டத்திலிருந்துதான் ஒழிக்கத் தொடங்க வேண்டும் என்னும் கூருணர்வுடன் செயல்பட்டார் வி.பி.சிங். அவரது ஆணையின் பேரில் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது  திடீர் சோதனைகளை மேற்கொண்டு ஆண்டுக் கணக்கில் செய்யப்பட்டு வந்த வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்தனர். அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் பெருந்தொழிலதிபர்கள் சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எனவேதான் கார்ப்பரேட் பெருச்சாளிகள் அவரை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கு திருபாய் அம்பானியின் (ரிலையன்ஸ்) தலைமையில் அணி திரண்டனர். இந்த உண்மை நரேந்திர மோடியின் புலனாய்வு ராடாரின் கீழ் வருமா? வராது. ஏனென்றால் அந்த ராடாரை இயக்குவதே அம்பானிகளும் அதானிகளும்தான்.

அந்தப் பெருச்சாளிகளின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் ராஜிவ் காந்தி, விபி.சிங்கை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து,  பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். வி.பி. சிங்கின் திறமை பாதுகாப்புத்துறைக்குத் தேவை என்று பசப்பினார் ராஜிவ். ஆனால், வி.பி.சிங், பாதுகாப்புத்துறையில் மலிந்திருந்த ஊழல்கள் மீது கவனம் குவிக்கத் தொடங்கினார். ஜெர்மனியிலிருந்து HSW  நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதில் பேரம் பேசப்பட்டதையும் ‘கமிஷன்’ வழங்கப்பட்டதையும் கண்டறிந்து முழு உண்மையையும் வெளிக்கொணர்வதற்கான விசாரணை ஆணையம் அமைக்க ஆணை பிறப்பித்தார். அதனால்தான் ராஜிவ் காந்தியும் காங்கிரஸ் தலைமையும் வி.பி.சிங்கை ஓரங்கட்டின. நீர்மூழ்கிக் கப்பல் ஊழலும் போஃபர்ஸ் ஊழலைப் போலவே சட்டத்திடமிருந்து தப்பித்துக் கொண்டது.

1989இல் நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்  பெரும்பான்மை கிடைக்காதிருந்த சூழலில் பாஜக ஒருபுறமும் இடதுசாரிகள் மறுபுறமும் ‘வெளியே இருந்து’ தந்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வி.பி.சிங், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த படிநிலை சாதிய அமைப்பின் காரணமாக ‘உயர் சாதியினர்’ மட்டுமே அரசாங்கப் பதவிகளை வகித்து வந்த ஊழல் முறையின் மீது கை வைக்கும் மண்டல் குழு பரிந்துரைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தினார். இந்த சாதியப்படிநிலை ஊழல் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று விரும்பிய பாஜக, வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்த போது, அந்த கவிழ்ப்பு முயற்சிக்கு ராஜிவ் காந்தியின் காங்கிரஸும் துணை நின்றது – பின்னாளில் அயோத்தி ராமர் கோவில் ஷிலான்யாவுக்கு ராஜிவ் காந்தியும் பாபர் மசூதி இடிப்புக்கு நரசிம்ம ராவும் ஒத்துழைத்தது போல.

வி.பி.சிங் ஆட்சியிலிருந்த போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றின் தேர்தல் செலவுகளுக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கொள்கையை இடைவிடாது வலியுறுத்தி வந்தார். இப்படிச் செய்வதன் மூலம் கார்ப்பரேட் சக்திகள் அரசியல் கட்சிகள் மேல் செல்வாக்கு செலுத்துவதைப் பெருமளவில் தடுக்க முடியும் என்று கருதினார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியலிலும் மத்திய, மாநில அரசாங்கங்களிலும் உள்ள இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பது மேலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. ஆனால், சாதிய ஊழலை நிலைநிறுத்துவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள சங்பரிவார பாசிச சக்திகளோ, இலஞ்சமும் ஊழலும் ஏழைகளிடம்தான்,  நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான்  ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.

இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய அதிகாரி வர்க்கம், பங்குச்சந்தையின் தலைமைப்பீடமான மும்பையின் தலால் ஸ்ட்ரீட், இந்தியக் கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ,  பாலிவுட், இந்திய இயற்கை வளங்களை, சுற்றுச்சூழலைச் சூறையாடும் அதானிகள், அம்பானிகள் முதலானோர் மீது நரேந்திர மோடியாலும் சங் பரிவாரத்தாலும் கைவைக்க முடியாது. ஏனெனில் சாதிரீதியான, வர்க்கரீதியான ஒடுக்குமுறை, சுரண்டல், ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றவர்கள் இவர்கள்தாம்.

இவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஒரே இந்தியப் பிரதமர் வி.பி.சிங் மட்டுமே. அவரது இறப்புச் செய்தி, மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களின் போது எவ்வாறு முக்கியத்துவம் அற்றதாகப் போனதோ, அதைவிட மோசமானதாக, ஊழல், இலஞ்ச ஒழிப்பு பற்றிய நரேந்திர மோடியின் சொல்லாடல்கள், அவற்றுக்கு எதிரான எதிர்-சொல்லாடல்கள் நடக்கும் காலத்தில் முற்றாக மறக்கப்பட்டுவிட்டது. இந்த வரலாற்று மறதிக்கு இந்தியாவிலுள்ள மதச்சார்பற்ற சக்திகளும் (அப்படி ஏதேனும் இருக்குமானால்) இடதுசாரி சக்திகளும்தான் பொறுப்பு.


ஞாயிறு, நவம்பர் 27

ஃபிடலுக்கு ஒரு பாடல் - செ குவாராசூரியன் உதிப்பான் என்றாய் நீ 
வா, யாரும் செல்லாத பாதையில்
போகலாம் நாம்
உனக்குப் பிரியமான
அந்தப் பச்சை முதலையை விடுவிக்க.
கிளர்ச்சி என்னும் தூமகேது
முட்டிச் செல்லும் நம் நெற்றியைக்கொண்டு
அவமானங்களைத் துடைத்தெறிந்துகொண்டே
செல்வோம் வா
வெற்றி பெறுவோம் அல்லது
சாவைக் கடந்து செல்வோம்.
முதல் துப்பாக்கி வேட்டில்
புதிய வியப்புடன்
கானகம் முழுவதும் விழித்தெழும்
அங்கே அப்போது அமைதியாக உனது படை
உன்னருகே நாங்கள்.
உனது குரல் நாற்றிசைக் காற்றைத் துளைத்து
நிலச் சீர்திருத்தம், நீதி, உணவு, விடுதலை
என முழங்கும் போது
சேர்ந்து குரல் கொடுக்க
உன்னருகே நாங்கள்.
கூபாவின் அம்பு முனை துளைத்த காயங்களை
அக்கொடிய விலங்கு நக்கும் வேளையில்
பெருமித நெஞ்சத்துடன்
உன்னருகே நாங்கள்.
வெகுமதிகள் பெற்றுத் தத்தித் தத்திக் குதிக்கும்
அந்த அலங்கரிக்கப்பட்ட அற்பப் பூச்சிகளால்
எங்கள் நேர்மை குலைந்து விடும் என எண்ணாதே
எங்களுக்கு வேண்டியது
அவர்களது துப்பாக்கிகள், தோட்டாக்கள்,
ஒரு பாறாங்கல்
வேறேதும் அல்ல.
உருக்கு எங்களை வழிமறிக்கும்போது
நாங்கள் கேட்கப் போவது
கூபாவின் கண்ணீரால் நெய்த போர்வை
அமெரிக்க வரலாறு நோக்கிப் பயணிக்கும்
எங்கள் கெரில்லாக்களின் சடலங்கள் மீது போர்த்த
வேறேதும் அல்ல.

ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை( (Our Word: Guerrilla Poems from Latin America, Cape Goliard press, London, 1968  என்னும் நூலிலிருந்து)


சனி, நவம்பர் 19

The Forecast Today - Aadhavan Dheetchanya - Translated by V.Geetha

Until this minute no order has been passed that insists
Feet must wear caps and the head slippers.

The Honourable State in its mercy
Has allowed its citizens to let
Eyes be where they have always been
And ears where they always are.

After today’s cabinet meeting it shall be known
Whether one may continue to eat with one’s mouth. 
Just for a change and to ration available air supply
A plan that requires one of the nostrils to be stopped and shut 
Will come into force from 12 midnight. 

Citizens have been warned that they ought to support
All positive measures undertaken by the State – henceforth
And for the first time anywhere in the world – 
Buses shall run on railway tracks, trains on tarred roads,
Aeroplanes shall take off from harbours and ships from airports

The State which has relocated a lying-in clinic to a cemetery
Shall, step by step, implement its plan 
Of transforming the entire country into a graveyard. 

Since citizens follow their State’s dictates, 
It is expected that they will not allow 
Anything, and forever
To remain where it has always been. 


சனி, நவம்பர் 12

உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்...* ஆதவன் தீட்சண்யா


1.கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலகவரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக கதையைப் படிக்கத் தொடங்குதல் நலம். இந்த நாடு மூன்றுபக்கமும் சூழ்ந்திருக்கும் கடலில் மூழ்கப் போகிறதா அல்லது நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கடனில் மூழ்கப்போகிறதா என்ற பட்டிமன்றங்களும் பந்தயங்களும் பலகாலமாய் நடந்துகொண்டிருந்த நிலையில், குளோபலாண்டி சுவாமிகளின் அருளுரையின் பேரில் இந்தநாட்டின் பெயர் லிபரல் பாளையம் என்று மாற்றப்பட்டதை தாங்கள் ஏற்கனவே அறிவீர்கள் ( காண்க- லிபரல்பாளையம் கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவனோபா வழங்கியத் தீர்ப்பு- ஆதவன் தீட்சண்யா).

2. கதையின் காலம்- கி.பி.2008 தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அதற்கும் முன்பிருந்தே லிபரல்பாளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆட்சியில் பங்குபற்றியிருந்த பலரும் முயற்சித்தே வந்துள்ளனர். ஆனால் 2008ல் தான் முழுமையாக தமக்குத்தாமே விலைகூறிக்கொள்வதில் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துக் கொள்ள முடிந்துள்ளது.
  
3. கதைமாந்தர்- இப்பத்தியில் குறிப்பிடப்படுபவர்கள்  கதாநாயகர்/வில்லன்/ வில்லனின் கையாள்/ காமெடியன் என்று எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் பாங்குகளை பயின்று பெற்றிருப்பவர்கள். அ) இவர்களில் முதலாவதாய் வருகிற வெளியுறவுத்துறை அமைச்சர் உண்மையில் பரிதாபத்திற்குரியவர். அரசியலில் அவர் எப்போதும் மாப்பிள்ளைத் தோழன் என்றே அழைக்கப்படுகிறவர். தான் ஒருபோதும் மாப்பிள்ளையாக முடியாது என்ற கவலை அவரை நிரந்தரமாய் பீடித்திருக்கிறது. இவரது பெயரை வேண்டுமானால் பி.எம் என்று சுருக்கியழைக்க முடியுமே தவிர ஒருநாளும் இவர் பி.எம்மாக முடியாது என்பது உலகறிந்த ரகசியம். சிக்கலான பிரச்னைகளை விவாதிக்க வேண்டி வரும் போதெல்லாம் நாக்கு சுளுக்கிக்கொண்டதாக ஆஸ்பத்திரியில் போய் பிரதமர் படுத்துக் கொள்ள அவருக்காக இவர் பேசி பலரிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கம் இவரது இயல்பிலேயே இருக்கிறது

.) மத்திய சுகாதார அமைச்சர். பொதுஇடத்தில் தும்மக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவந்ததற்காக பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அவர் முன்வைத்த வாதங்களுக்கு எந்த அஞ்ஞான,விஞ்ஞான, மெய்ஞான அடிப்படையும் இல்லையெனவும், தும்மல் தடுப்பு மருந்துக் கம்பெனியொன்று வழங்கியமொய்ஞானமே காரணமென்றும் புலனாய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதை உலகறியும். எல்லா மந்திரிகளையும்போலவே பாத்ரூமைத் தவிர மற்றெல்லா இடங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ செல்வதையே இவரும் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஏழேழு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்ட நிலையில்இதுவரை சம்பாதித்ததை காப்பாற்றிக்கொள்ளவாவது மந்திரியாக நீடித்திருக்க வேண்டும் என்ற பதைப்பில் இருப்பவர்.

இவரது தந்தையார் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். இவரது பல்வேறு உரைகளை நீங்கள் தொலைக்காட்சிகளின் காமெடி டைம் நிகழ்ச்சிகளில் கண்டு களித்திருக்கலாம். ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என யோசிக்காமல் அம்பது ரூபாயில் ஒரு கட்சியைத் தொடங்கி சகல அதிகாரங்களையும் வருமானங்களையும் அதன்வழியாகவே தேடியடைந்திருக்கும் அரசியல் வித்தகர்

) அடுத்து வருகிற தொலைதொடர்புத்துறை அமைச்சர் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. அவரது கட்சி மந்திரிமார்களின் பெரிய குரூப் போட்டோவின் கடைசிவரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தவர். கட்சித்தலைவரின் பங்காளி பாகாளிச் சண்டையில் திடுமென ஒருநாள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டவர். தொலைத்தொடர்புத்துறைக்கு பொறுப்பேற்றதிலிருந்து அதை தொலைத்துக் கட்டும் ஊழல்களில் ஈடுபடவே நேரம் போதாமல் அல்லாடிக்கிடக்கிற இவரும் இக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறவர்

) உள்துறை அமைச்சரின் பாடு அத்தனை எளிதானதல்லஅவர் முந்நாளைய நிதிமந்திரி என்ற வகையிலும், இந்நாள் உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் நம் கதைக்குத் தேவைப்படுகிறவர். அதிமுக்கியமான கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுவதுதான் அவருடைய சாமர்த்தியமாய் இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரிட்டனில் படித்த அறிவாளியாயிற்றே...? இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா  அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும்? எல்லாப்பயலும் இறுக்கி மூடிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் தானே என்று குயுக்தியாக யோசிப்பவர். நாலேமுக்கால் வருஷம் நிதியமைச்சராயிருந்து நாட்டை கடனாளியாக்கி சிகாமணி. இவரால் உள்துறை எப்படி உளுத்துப் புழுத்து நாறப்போகிறது என்பது இனிதான் தெரியும்

4. திருவாளர் லிபரப்பன்- கஷ்டநஷ்டங்களிலிருந்து காப்பாற்றும் என நம்பி குலதெய்வத்தின் பெயரை சூட்டிக்கொள்கிற நாட்டார் மரபு மற்றும் அதற்கிசைந்த உளவியல்படியே, லிபரலைசேஷன் என்ற வார்த்தையின் சில கூறுகள் இவரது பெயரில் காணக்கிடைக்கின்றன. டீ சர்ட், ஏழெட்டு பாக்கெட் வைத்த பெர்முடா டவுசர் அணிந்து ஸ்டைலாக .டி.எம்மில் நுழைந்து கார்டை சொருகி பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் தான் மிகமிக நவீனமானவனாக மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமித உணர்வில் திளைத்துப் போகிறவர். இவரது துணைவியார் பரிதாபசுந்தரி, மகள் கன்ஸ்யூமரேஸ்வரி, மகன் டாலராண்டி இவர்கள் வழியாகத்தான் இந்த கதையை சொல்லவிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது...  என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையத்தின் கதை இது.

1
ஏடிஎம்மிலிருந்து வெளியே வந்த பணத்தாள்களில் தேசப்பிதாவின் படத்திற்கு பதிலாக புஷ்ஷின் படம் அச்சாகியிருப்பதைக் காணும் ஒருவர் இயல்பாக எந்தளவிற்கு பதற்றமடைய வேண்டுமோ அதைவிடவும் ஆயிரம் மடங்கு கூடுதலாக திருவாளர். லிபரலப்பன் பதறிப் போனதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவரைப் பொறுத்த வரை ஏடிஎம் என்பது வெறும் இயந்திரமல்லஅது பணம் கொட்டும் தெய்வம். கையடக்க அட்டையை உள்ளிழுத்து பணத்தை வெளித்தள்ளும் அற்புதங்களின் பெட்டகம். அவர் ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் வழிபாட்டுத்தலமாகவே பாவித்து வந்திருக்கிறார் இதுகாறும். ரிசர்வ் வங்கியிலிருந்து ஆகாயமார்க்கமாகவோ அதலப்பாதாள வழியாகவோ  ஏடிஎம்முக்குள் அப்பழுக்கற்ற பணம் நேரடியாக நிரப்பப்படுகிறதென்றும் அதில் பழுதான ஒருவிசயமும் நடக்காதென்பதும் அவரது நம்பிக்கை. எனவே தேசப்பிதாவின் படமிருந்த இடத்தில் புஷ்ஷின் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள்களை இயல்பானதொரு நடைமுறைத் தவறாகக் கருதி அவரால் சமாதானம் அடைய முடியவில்லை. கதவுக்கருகில் போய் நின்று கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் நுழைவதைப் போன்ற பாவனையை தனக்குத்தானே வலிந்து உருவாக்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை அட்டையைச் சொருகினால், வெளிவந்த அத்தனைத் தாள்களிலும் புஷ்ஷின் படம்

லிபரலப்பன் கள்ளநோட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரேயன்றி அது கறுப்பா சிவப்பா என்று இதற்குமுன் அறிந்திலர். எனவே வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றும் இவை கள்ளநோட்டுகள் தான் என்ற முடிவுக்கு வர அவருக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. இப்படியும் உண்டா ஓர் அட்டூழியம்? ஏடிஎம்மில் கள்ளநோட்டா? ஒரு இயந்திரம் தனக்குத்தானே கள்ளநோட்டை அச்சடித்துக்கொள்ள முடியுமா? வங்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ? இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது? நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம்? ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப்பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா? .சி, .சி ஆட்சியில் இப்படியெல்லாம்கூட நடக்குமோ...  நோ சான்ஸ் என்று தலையை உலுக்கிக் கொண்டார் லிபரலப்பன். மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்க அட்டையை சொருகிசொருகி இழுத்ததில் அவருடைய இருப்புத்தொகையில் சொற்பம் தவிர முழுவதையும் எடுத்துவிட்டிருந்தார். ஒருநாளைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாதென்ற கட்டுப்பாடும்கூட விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது அவருக்கு.

இன்னொருமுறை சோதித்துப் பார்ப்போம் என்று அவர் இம்முறை தன் மனைவி பரிதாபசுந்தரியின் ஏடிஎம் அட்டையை சொருகினார். (பெண் ஊழியர்களின் ஏடிஎம் அட்டைகள்- அவற்றின் ரகசிய குறியீட்டு எண்ணுடன்- அவர்தம் கணவர்மாரால் கைப்பற்றப்பட்டுவிட்டதை நாடறியும். நவீனமயம் பெண்ணின் சம்பாத்தியத்தியம் முழுவதையும் ஆண்கள் அபகரித்துக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்ற உண்மையை இந்த வரிகளின் மூலம் கண்டறிவது பெண்ணிய நோக்கிலான ஆய்வாளர்களின் வேலை. நான் எழுதுவதை நானே பேசுவது ஜெயமோகத்தனம்). மனைவி தன்னிடம் கொண்டுள்ள அதே பதிபக்தியை, மனைவியின் அட்டையிடமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அவர் அவ்வாறான மனநிலையோடுதான் அட்டையை சொருகினார். ஆனால் ஒன்றும் கதை நடக்கவில்லை. இதற்கு வெளிவந்த பணத்தாள்களிலும் புஷ் படம்தான் அச்சாகியிருந்தது. இம்முறை அவருக்கு கிடைத்த கூடுதல் அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், புதுநோட்டுகள் தீர்ந்துபோன நிலையில் வெளிவந்த பழைய நோட்டுகளிலும் புஷ் படமே இருந்ததுதான். அப்படியானால் புஷ் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறதா.... தான் உட்பட யாருமே இதை கவனிக்காமல் போனதெப்படி? அல்லது இதுதான் இப்போது அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளா?

ஏடிஎம் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை இப்படி நட்டநடுராத்திரியில் பொய்த்துக் கொண்டிருப்பது குறித்து மிகுந்த அலைக்கழிப்புக்குள்ளானது அவரது மனம். தன்கையில் இருக்கும் தாள்கள் தெரிவிக்கிற உண்மை என்னவென்பதை அறியத் துணியாமல் அல்லாடினார்ஏதோவொரு கொடிய மர்மத்தின் பிடியில் மாட்டிக்கொண்டது போன்ற தத்தளிப்பு அவரை பிடித்து விழுத்தாட்டியது. உள்ளேயிருக்கும் தைரியம் வியர்வையாக வெளியேறி உலர்ந்துகொண்டிருந்ததுஇதை உடனடியாக யாரிடமாவது தெரிவிக்கலாமென்றால் அங்கே ஒருவருமில்லை

லிபரலப்பன் திண்டாடித்தான் போனார். வீட்டுக்குத் திரும்பும் எண்ணமெல்லாம் பின்னுக்குப் போய் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற நினைப்பே அவரை ஆட்கொண்டது. விடிந்ததும் பால்வாங்குவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பணம் தேவையாயிருக்கிறபோது இந்த பொம்மைச் சீட்டுகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்...? பணம் எடுத்ததற்கான ரசீதுகளை திரும்பவும் கவனமாகப் படித்துப்பார்த்தார். வங்கியின் பெயர், நாள், நேரம், மொத்தமுள்ள  தொகை- எடுத்தத் தொகை- மீதமுள்ள தொகை என்பதெல்லாம் தெளிவாகத்தான் அச்சாகி வந்திருந்தது. அப்படியானால் எங்கே நடந்திருக்கும் இப்படியான கோளாறு என்று எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரமாக அந்த அறைக்குள்ளேயே இருக்கவும் அவருக்கு பயமாக இருந்தது. புஷ் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு வகையாக சிரிப்பதுபோலிருந்தது. அந்த சிரிப்பில் வெளிப்பட்ட ஏளனமும் இளக்காரமும் அந்த அறை முழுக்க நிரம்பி உன்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று பரிகசித்தபடி பிடறியில் கைவைத்து வெளியே நெட்டித் தள்ளுவதைப்போல உணர்ந்தார் லிபரலப்பன்ஏதேனும் மோசடிவேலைக்காக தான் அங்கேயிருப்பதாக யாராவது நினைத்துக் கொண்டாலும் மானக்கேடாகிவிடுமே என்ற எண்ணம் அவரை மேலும் நடுக்குறச் செய்தது.

அவசரமாக வெளியேறி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். தான் நிதானத்தில் இல்லை என்பது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. இந்நேரத்திற்கு வந்தால்தான் ஏடிஎம்மில் கூட்டம் இருக்காது என்று நினைத்து 12 மணிக்கு வந்து இப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள நேர்ந்ததே என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். வங்கிக்குள் போய் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் கொடுக்கவும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் செய்வதில் எரிச்சலுற்று, எதிர்ப்படும் ஊழியர் ஒருவரிடமாவது சண்டையிட்டு, சமாதானமாகாமல் வீட்டுக்கு வந்து வீட்டிலிருப்பவர்களிடமும் எரிந்துவிழும் சள்ளையிலிருந்து விடுபடும் பொருட்டு தமது நிதிசார் நடவடிக்கைகளை இப்படி ஏடிஎம்முக்கு மாற்றிக்கொண்ட முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இந்த லிபரலப்பன். ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதும், போய் சீக்கிரமா செலவழிச்சுட்டு பத்திரமா திரும்பி வரணும் என்று ஏடிஎம் மிஷினே வாசல்வரை வந்து கையாட்டி வழியனுப்பிவைப்பதைப் போன்ற பிரமைக்குள் லிபரலப்பன் வாழ்ந்துவந்த காலம் ஒன்றிருந்தது

எதற்கும் இருக்கட்டுமே என்று ஆயிரம் ஐநூறை கையில் வைத்துக்கொள்ளும் பழக்கம் .டி.எம்.முக்கு மாறிய பிறகு லிபரலப்பனிடம் அடியோடு இல்லாமல் போய்விட்டிருந்தது. ‘முக்குக்கொரு ஏடிஎம் இருக்கிறப்ப சேஃப்டி இல்லாம பணத்தை ஏன் கையில் வச்சிருக்கணும்.... தேவைன்னா ஒரு நிமிஷத்துல எடுத்துக்கலாம்...’ என்று வியாக்கியானம் செய்துகொண்டிருந்த காலமாக அது இருந்தது. வங்கிக்குப் போய் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், இன்னும் இப்படி கட்டுக்குடுமி  ஆசாமிகளாய் இருக்கிறார்களே என்று  இவருக்கு கடுப்பாக இருக்கும். தன்னைப்போல் நவீனத்துக்கு மாறாமல் இப்படி லோல்படுகிறார்களே என்று அடுத்தவர்களை இளக்காரமாய்ப் பார்க்கும் இவரது பெருமித உணர்வு நெடுநாள் நீடிக்காமல் சடுதியில் காணாமல் போகத்தொடங்கியது. ஏடிஎம் மையங்களில் எப்போதும் நீண்டவரிசைகள் தென்படத் தொடங்கின. சம்பள பட்டுவாடாவிற்காக தனியே எதற்கு பணியாட்கள் என்று கம்பனி நிர்வாகங்களும் அரசாங்கங்களும் தங்களது ஊழியர்கள் கையில் ஏடிஎம் கார்டைத் திணித்துவிட்டதில் ஆரம்பித்ததுதான் இந்த கெடுதலின் தொடக்கம். அவர்களோடு நில்லாது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருமே கையில் கார்டையும் வைத்திருந்தனர். கணக்கில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஏடிஎம்முக்குள் நுழைந்து கார்டைச் சொருகி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே வருவது அவர்களது வாடிக்கையாயிருந்தது

முன்புபோல் நினைத்தநேரத்திற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வரமுடியாத நிலை உருவாகி விட்டது. வங்கியில் என்றால் நிழலாவது இருக்கும். மெத்துமெத்தென்ற இருக்கைகள் இருக்கும். இங்கு எதுவுமில்லை. இயந்திரம் மட்டும் குளிரூட்டப்பட்ட அறையில். தன்னைப்போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், மழையோ வெயிலோ வெட்டவெளியில் கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொண்டபடியே தனக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் வரிசையில் கரைந்துபோவதைத் தவிர அவருக்கு வழியொன்றும் இருந்திருக்கவில்லை. ச்சே... நம்ம பணத்தை எடுக்க நாய்போல காத்துக்கிடக்க வேண்டியிருக்கே... என்று நினைத்து நினைத்து மருகத் தொடங்கினார்

கண்டவனுக்கெல்லாம் கார்டு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்... மினிமம் பேலன்ஸ் பத்தாயிரம் இருபதாயிரம்னு வைக்கணும். அப்பத்தான் இந்த சில்லரைகளெல்லாம் கழியும். அப்படி கழித்துக் கட்டும் துணிச்சல் இல்லையென்றால் வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு கூடுதலான இடங்களில் இயந்திரங்களை நிறுவணும் என்று வங்கி நிர்வாகத்துக்கு புகார் கடிதங்களை அனுப்பிவிட்டு அதன் நகல்களை ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு அனுப்புவதும் அவரது வேலைகளில் ஒன்றாகியது. எவ்வளவு அற்புதமானதொரு இயந்திரத்தை இப்படி எடைபார்க்கிற மிஷின்போலவும் ஜாதகம் கணிக்கிற கம்ப்யூட்டர் போலவும் ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் சிலநேரங்களில் ரத்தக்கொதிப்பு வந்தவர்போலக்கூட ஆகிவிடுவதுமுண்டு. தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த ஏடிஎம்மை தராதரமில்லாத மற்றவர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதாக பாவித்துக்கொண்டு எப்போதும் பொருமும் மனநிலைக்குள் அவர் வீழ்ந்தது இந்தகாலத்தில்தான். எனவே யாருமறியாமல் தன் ஆசைக்கிழத்தியை கண்டு வருகிறவரைப்போல, இரவு உணவுக்குப் பிறகு சற்றே கண்ணயர்ந்துவிட்டு நடுநிசி வேளையில் எழுந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்குக்கு கிளம்புவார். யாருமற்ற கண்ணாடிஅறைக்குள் இவருக்காகவே தனித்தேங்கிக் காத்திருப்பதைப் போன்று நிற்கும் ஏடிஎம்முக்குள் நுழைந்து, இப்படி அளவளாவிக் கிடந்த நம்மை பிரித்துவிட்டார்களே பாவிகள் என்று புலம்புவார். இந்த புலம்பல் உச்சமாகி ஏடிஎம் இயந்திரத்தை ஆதூரமாய் தடவிக்கொடுத்துவிட்டு பணம் எடுக்காமலேகூட திரும்பிவிட்ட நாட்களுமுண்டு

ஆனால் எல்லாவற்றுக்கும் இன்று ஒரு முடிவு வந்துவிட்டதுபோல் உணர்ந்தார்தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் படம் அச்சடிக்கப்பட்ட அந்த தாளைப் பார்க்கப்பார்க்க அவருக்கு பைத்தியம் பிடிப்பது போலானது. பலவிதமான யோசனைகளின் நெருக்குதலில் தன்னிலை மறந்து பிதற்றம் கண்டுவிட்டது அவருக்கு. புத்தம்புது தாள்களாயிருந்தால்கூட இப்போதுதான் இந்த தவறு நடந்திருக்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனையும் பழைய நோட்டுகள். அப்படியானால் வெகுநாட்களாய் இந்த நோட்டுகள் புழக்கத்திலிருப்பதாகத்தானே அர்த்தம்? என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை? கள்ளநோட்டு என்றால் ராத்திரியில் எங்காவது மூத்திரச்சந்தில் அரைவெளிச்சத்தில் புழங்கக்கூடியது என்று கேள்விப்பட்டிருந்த நிலை மாறி இப்படி ஜகஜ்ஜோதியாய் அலங்கரிக்கப்பட்டுள்ள  ஏடிஎம்முக்குள் இருக்கக்கூடியதாக மாறியிருக்கிறதென்றால் என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தாறுமாறாய் ஓடின பல கேள்விகள்.

தனது ஆதங்கம் பணத்தாளில் புஷ் படம் இருப்பது குறித்ததா அல்லது அது கள்ளநோட்டாய் இருப்பது குறித்ததா என்ற அடுத்தக்கேள்வி அவரை மறித்தது. அவரைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் புஷ் அபிமானிதான். புஷ்ஷைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்கத் தலைவன் லோகத்திலேயே இல்லை என்பது அவரது அபிப்ராயம். ஒரு அஞ்சு வருஷம் மிலிட்டிரி ரூல் வந்தாத்தான் நாடு உருப்படும் என்றோ, மறுபடி ஒரு தடவை எமர்ஜென்சி வந்தாத்தான் எல்லாம் கரெக்டாகும் என்றோ உளறித் திரியும் அரசியல் அரைவேக்காடுகளை மிஞ்சும் வகையில் இவர், உலகத்தையே ஒரு அஞ்சு வருஷத்துக்கு புஷ் கையில் ஒப்படைக்கணும் என்று வாதிடுகிற கட்சிக்காரர். அஞ்சு வருஷத்தில் புஷ் உலகத்தையே வல்லரசாக்கிவிடுவாராம். அதன்பிறகு நாடுகளுக்குள் சண்டைகள் வராமல் சமாதானம் நிலவுமாம். இந்த உலகத்துக்கும் வேறு உலகத்துக்கும்தான் சண்டை நடக்குமாம். ஆப்கன், ஈராக் என்று அடுத்தடுத்து பலநாடுகளை ஆக்ரமிப்பது இந்த நோக்கத்திற்காகத்தானாம்.... அதுவும்கூட, சண்டை சச்சரவில்லாமல் பலநாடுகளில் உள்ளேநுழையும்இரண்டாம் பாதைதிட்டத்தை அவர்கள் ஏற்க மறுத்ததால்தான் போர்தொடுக்க வேண்டியிருந்ததாகவும் மற்றபடி புஷ்ஷைப் போன்ற ஒரு சமாதான விரும்பியை இந்த பூலோகத்தில் காணமுடியாது என்பதும் அவரது வாதம். உலகம் முழுவதும் சுடுகாட்டு அமைதியை புஷ் நிறுவத்துடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பிவந்த நிலையிலும்கூட, புஷ்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்பதும் அவரது தனிப்பட்டக் கருத்தாயிருந்தது. எனவே அவர் ஒரு புஷ் எதிர்ப்பாளரல்ல என்பதை எடுத்தயெடுப்பிலேயே புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்லாமல், புஷ்ஷின் சீட்டு டர்ராகி ஒபாமா வந்துவிட்டப் பின்னும்கூட அவரது மனவுலகத்தில் அமெரிக்காவுக்கும் அகில உலகத்துக்கும் புஷ்ஷே ஜனாதிபதியாக வீற்றிருந்தார்.

இந்த நோட்டு, தேசப்பிதாவையும் தனது அபிமானத் தலைவரான புஷ்ஷையும் ஒருசேர அவமதிக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருப்பது குறித்த தனது புகாரைத் தெரிவிக்க காவல் நிலையம் சென்றார். காவல்நிலையம் பகலில் உள்ளதைவிட சுறுசுறுப்பாக இருந்தது. இரவுநேரங்களில் பெண்களை மட்டுமே இழுத்துவருவதை பொதுலட்சணமாய்க் கொண்டிருக்கும் இந்த காவல் நிலையங்களுக்கு அவரது வம்சத்தில் இதுவரை யாரும் படியேறியதில்லை. எனவே அவருக்குள் ஒரு நடுக்கம் பரவியது. வளர்த்ததா ஒட்டவைத்ததா என்று பிரித்தறிய முடியாதபடி பெரிய மீசையுடன் இருந்தவர்- அவர்தான் அதிகாரியாயிருக்கக்கூடும்என்னய்யா உனக்கு இந்நேரத்துல என்று மரியாதையாகக் கேட்டார். அவரது தோரணையில் நிலைகுலைந்த லிபரலப்பன் சர்வமும் ஒடுங்கிய நிலையில் பணத்தாள்களை எடுத்து மேசைமேல் விரித்தார். மேசைக்கு கீழாகவே பணம் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த அதிகாரி, மேசைமேல் துளியும் கூச்சமின்றி பரப்பிவைக்கப்பட்ட பணத்தை முதன்முதலாகப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் முழித்தார். ஏதோ பெரிய குற்றத்திலிருந்து தப்புவதற்காகத்தான் இவ்வளவுத் தொகையை வைத்து ஆசைகாட்டுகிறான் இந்த ஆள் என்று அனுமானித்த அதிகாரி என்ன விசயம் என்பதுபோல புருவத்தை நெரித்தார். பதற்றமும் பயமும் கலந்த குரலில் நடந்தவற்றை விவரித்தார் லிபரலப்பன்.

(சினிமாக்களில் கண்ட கண்டிப்பான/ கொடுமைக்கார/ மெயின்வில்லனின் கையாளான ஒரு காவல் அதிகாரியை இவ்விடத்தில் கற்பனை செய்துகொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும்) அதிகாரியின் முகம் இறுகியது. லிபரலப்பனின் ஏடிஎம் கார்டு, பணம் எடுத்ததற்கான ரசீது, இவரின் தோற்றம் மற்றும் தொனி எல்லாவற்றையும் ஒரு தேர்ந்த புலனாய்வு நிபுணரைப்போல பரிசோதித்தப்பின் தானொரு ஸ்காட்லாந்து யார்டு பரம்பரையைச் சேர்ந்தவனாக்கும் என்கிற தோரணையில் விசாரணையைத் தொடக்கினார். ‘ஏண்டா, சின்னப்பசங்க செட்டு சேர்த்து விளையாடற பொம்மை நோட்டுங்களக் கொண்டாந்து ஏடிஎம்முல இருந்து எடுத்ததுன்னு சொல்லி பேங்க்ல பணம் புடுங்க ட்ரை பண்றியாஎன்று எடுத்தயெடுப்பிலேயே ஒரு அறை விழுந்தது. (போலிஸ் மொழியில் இதை அட்மிஷன் அடி என்று சொல்வது வழக்கம். இப்படி அடி கொடுப்பதன் மூலம் ஏதேனும் புகார் கொடுக்க வருகிறவர்கள் எல்லா தவறையும் தாமே செய்துவிட்டதாகவும் அதற்குத்தான் இந்த தண்டனை கிடைத்திருக்கிறதென்றும் நம்பிக்கொண்டுஅய்யா சொல்றத கேட்டுக்கிறேங்க.. என்று பணிந்து நிற்கும் மனநிலையை உருவாக்கமுடியும்) ‘இல்ல சார், அதுவந்து...’ என்று லிபரலப்பன் பதில்சொல்ல முயன்றபோதுஎதுத்தா பேசறே ங்கோத்தாஎன்று மரியாதையாக மறு அறைவிழுந்தது. ‘புகார் கொடுக்க வந்தா அடிப்பீங்களோ... நான் இதை லேசில் விடப்போறதில்ல.. மனித உரிமை ஆணையத்துல முறையிடப் போறேன்என்றவரிடம், ‘மனித உரிமை ஆணையமாவது ... மயிர் புடுங்குற ஆணையமாவது... ஹைகோர்ட்டுக்குள்ள பூந்து ஜட்ஜ்க்கே லாடம் கட்டுனவங்க நாங்க... மூடிக்கிட்டு இருடா...’ என்று தாக்குதல் தொடர்ந்தது

இந்த தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒரேவழி இதுதான் என்று இங்கிலீசுக்குத் தாவினார் லிபரலப்பன். அதிகாரியும் இப்போது கொஞ்சம் மிரண்டுபோய் காதுகொடுக்கத் தலைப்பட்டார். ராபர்ட் கிளைவ் தொடங்கி, ஹர்ஷத்மேத்தா, டெல்ஜி, ‘சத்யம்ராமலிங்க ராஜூ, சுக்ராம்  வரை எல்லா ஃப்ராடுகளுக்கும் இங்கிலிஷ் தெரியும் என்கிற விசயம் அந்த கணத்தில் ஞாபகம் வராமல் போய்த்தொலையவே, இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவர் இப்படியான மோசடிகளில் ஈடுபடமாட்டார் என்ற மூடநம்பிக்கை அவரை வழிநடத்தியது. எல்லாவற்றையும் கேட்டு முடித்ததற்கு ஒப்புதல் போலவும் தனக்கும் ஆங்கிலம் புரியும் அல்லது தெரியும் என்பதைக் காட்டவும் ஸீ...’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவைத்தார் அதிகாரி. அதற்குப் பிறகு கனத்த மௌனம். ‘வாங்க அந்த ஸ்பாட்டுக்குப் போய்ட்டு வருவோம்என்று லிபரலப்பனையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஜீப்பைக் கிளப்பினார். மறக்காமல் ஒரு காலை வெளியே தொங்க விட்டுக் கொண்டார். அப்படி போனால்தானே அவர் அவசரமாகப் போகிறார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும்

அந்நேரத்துக்கு ஏடிஎம்மில் ஒருவருமில்லை. எவ்வளவோ வாஞ்சையொடு வந்துபோய்க் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு அறை இப்போது ஒரு திகில்மாளிகைபோல பயமூட்டியது லிபரலப்பனுக்கு. நானிருக்கேன் தைரியமா உள்ளே வாங்க என்று காவல் அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வற்புறுத்திய பிறகே அரைமனதோடு உள்ளே நுழைந்த லிபரலப்பன் இம்முறை தன்மகள் கன்ஸ்யூமரேஸ்வரியின் கார்டை சொருகி ரகசிய எண்ணையும் அழுத்தினார். தொடுதிரையில் எல்லாமே கச்சிதமாக மின்னின. ஆனால் வெளிவந்ததென்னவோ புஷ் படம் அச்சடிக்கப்பட்ட பணத்தாள்கள்தான். அதிகாரி குழம்பித்தான் போனார். ஓருவேளை அந்த ஏடிஎம் கார்டு போலியாகவே இருந்தாலும் அதற்காக நோட்டு எப்படி மாற முடியும் என்று யோசித்தபடியே அதிகாரி தனது கார்டை எடுத்து சொருகினார். அவருக்கு வந்த நோட்டிலும் அதேகதிதான்.  

இப்படித்தான் ஆகும் என்ற முன்னனுபவம் இருந்ததால் லிபரலப்பன் இதை எதிர்பார்த்துதானிருந்தார். பதற்றமும் கொஞ்சம் தணிந்தவராயிருந்தார். ஆனால் அதிகாரியால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இப்படியொரு மோசடி நடப்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் அவர் மூச்சுத்திணறல் கண்டவர் போலாகி மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு இந்தாளை வேறு அடிச்சுத் தொலைச்சிட்டமே... என்று சித்தம் கலங்கியது. ‘எதற்கும் இன்னொரு ஏடிஎம்மில் ட்ரை பண்ணலாமா?’ என்று ஜீப்பை அடுத்த தெருவுக்கு விட்டார். அங்கும் புஷ்தான் பல்லிளித்தார்

இதற்கு வங்கியின் பொறுப்பான அதிகாரிகள் தான் பதில் சொல்லவேண்டும். ஆனால் இந்நேரத்துக்கு யாரைப் பிடிப்பது என்று காவல் அதிகாரிக்குத் தெரியவில்லை. வண்டி காவல்நிலையத்திற்கே திரும்பியது. பெரிய வேட்டைக்குப் போன அய்யா திரும்பி வந்துட்டாங்க என்று ஆவல்பொங்க ஓடிவந்த ஏட்டய்யாவிடம் நடந்ததை சொல்லும்போது அதிகாரியின் குரல் மிகவும் பலவீனமாயிருந்தது. அவ்வளவுதானா எல்லாம்... இனி நல்ல நோட்டையே பார்க்க முடியாதா... என்று பிதற்றியவாறே தன் சட்டைப்பையில் சாயங்காலம் திணித்துவைத்திருந்த பணத்தை எடுத்தவர் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தது. அந்த நோட்டுகள் பூராவும் இந்த புஷ் நோட்டுக்களாக மாறியிருந்தன. பதற்றத்தோடு இன்னொரு பாக்கெட்டிலிருந்ததையும் எடுத்துப்பார்த்தால் அவையும் தப்பவில்லை.

ஏடிஎம்மில் எடுத்த நோட்டுதான் கள்ளநோட்டென்றால் தன் சட்டைப்பையிலிருக்கிறவை எப்படி இப்படி மாறமுடியும்? ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது? ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா? அப்படி மட்டும் ஏமாத்தியிருந்தா அவனுங்கள என்கவுண்டர்ல போட்டுத்தள்ளிட வேண்டியதுதான் என்று குறுக்கும்மறுக்குமாக ஓடியது யோசனை. ‘சார் அந்த பெஞ்ச்ல கொஞ்சநேரம் படுங்க... எதுவா இருந்தாலும் விடிஞ்சாத்தான் பதில் கிடைக்கும்போலஎன்று   லிபரலப்பனிடம் கூறிவிட்டு தன் இருக்கையில் சரிந்து தொய்வாக உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார் அதிகாரி. திடீரென நினைப்பு வந்தவர்போல, சார் நீங்க எதுக்கும் ஒரு கம்ப்ளய்ண்டு  எழுதிக் குடுத்துட்டு தூங்குங்களேன் என்ற அதிகாரி, கார்பன் வைத்த வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.

மற்றவர்கள் மீது ஓயாமல் புகார் சொல்லிக்கொள்வது லிபரலப்பனுக்கு வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் அவர் இதுவரையிலும் யார்மீதும் காவல் நிலையத்தில் புகாரிட்டவரில்லை. ஆனால் இன்று வேறுவழியுமில்லை. யார் என்றே தெரியாத எதிரிமீது புகார் தருவதும் ஒருவகையில் பாதுகாப்பானதுதான் என்ற சமாதானத்தோடு தாளின் தலைப்பில் பிள்ளையார் சுழி இட்டபோது அது சிறு கலங்கலுக்குப்பின் ஒரு கிராபிக்ஸ் எஃபக்டுடன்புஷ்என்று தானே மாறிக்கொண்டது. ஏதோ ஒரு மாந்திரீக வலைக்குள் மாட்டிக்கொண்டதைப்போல நடுக்கம் கொண்ட லிபரலப்பன் பெருத்த  குரலெடுத்து அதிகாரியை விளித்து தாளைக் காட்டினார். அவரது நடுக்கம் அதிகாரியையும், அவரது சகாக்களையும், தேவைப்படும்போது வல்லாங்கு செய்வதற்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களையும், இன்னபிற கைதிகளையும் பீடித்துக் கொண்டது.  

லிபரலப்பன் வெடவெடத்துக்கொண்டிருந்தார். அவருக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு கசிந்தது. பள்ளிக்கூட மாணவனைப்போல சுண்டுவிரலை நீட்டினார் அதிகாரியைப் பார்த்து. மற்ற நேரமாயிருந்தால் ஒரு சட்டியைக் கொடுத்து அதிலேயே பெய்யவைத்து தாகமெடுக்கிறபோது அதையே குடிக்கவும் வைக்குமளவுக்கு கருணை கொண்டிருக்கும் அந்த அதிகாரி இப்போது தன்னிலை பிறழ்ந்திருந்ததால், போய்ட்டுவாங்க என்பதுபோல் தலையை ஆட்டினார். வெளியே போக பயமாயிருக்கு சார், துணைக்கு வர முடியுமா என்றார் லிபரலப்பன். அது ஒன்னுதான் பாக்கி, வாங்க... என்று எரிச்சலோடு அழைத்துப்போனார் ஒரு காவலர். கழிப்பறைச் சுவற்றில் ஆண்கள் பிரிவுக்கு திரும்புமிடத்தில் வரையப்பட்டிருந்த படம் புஷ்சினுடையதாகவும் பெண்ணின் படம் காண்டலிசா ரைஸ்ஸினுடையதாகவும் மாறியிருந்ததைக் கண்டு காவலர் அலறியதில், பயத்தின் அளவுகூடி லிபரலப்பன் தன்மீதே மூத்திரம் பெய்துகொண்டார் என்பது ஒரு முக்கிய விசயமல்ல. அதற்கடுத்து நடந்தவைதான் பிரச்னையின் தீவிரத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைத்தன.  

நனைந்துவிட்டிருந்த கீழாடைகளை காயவைத்துக்கொண்டு காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த லிபரலப்பனுக்கு தன் மனைவி பரிதாபசுந்தரியுடன் உடனடியாக பேச வேண்டும் போலிருந்தது. ஒருவேளை இந்த இரவு இப்படியே என்றென்றைக்குமாக நீண்டு அவளை இனி பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து விரட்ட அவசரமாய் செல்போனை எடுத்து வீட்டின் எண்களை அமுக்கியபோதுதான் அடுத்த வில்லங்கம் தொடங்கியது. அவர் அமுக்கிய தொலைபேசி எண்களுக்கு முன்பாக 0011 என்ற ஐஎஸ்டி எண்ணும் தானாகவே சேர்ந்து கொண்டு திரையில் மின்னியது. ஆனால் அவருக்கு அது உறைக்கவேயில்லை. பழக்கதோஷத்தில் அமெரிக்காவில் இருக்கிற தன் மகன் எண்ணை டயல் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. எனவே அவர் மீண்டும் மீண்டும் ராங் நம்பராகவே வருகிறதென்று அழித்தழித்து எண்களை அமுக்கிக் கொண்டிருந்தார். பதறின காரியம் சிதறத்தானே செய்யும் என்றுஆர்ட் ஆஃப் டையிங்ஆன்மீக முகாமில் சுவாமி சுருட்டலானந்தா சொன்னதை நினைத்துக் கொண்டவர் சிறிதுநேரம் கண்களை மூடி அமைதியாய் இருந்தார். பின் முக்தியடைந்தவரின் முகபாவத்தோடு ஒரு தெளிவு பெற்றுவிட்டதான நினைப்போடு மீண்டும் எண்களை அழுத்தினார். 0011 என்றேதான் மாறின. தொழில்நுட்ப மொழியில் சொல்வதாயிருந்தால் அமெரிக்காவின் தொடர்பு எல்லைக்குட்பட்ட ஒரு பிராந்தியமாக லிபரல்பாளையம் மாறிவிட்டிருந்தது

காவல் அதிகாரி இந்த தொலைபேசி எண் மாற்றம் குறித்தும் ஒரு புகாரை எழுதித்தரும்படி கோரினார். இம்முறை பிள்ளையார் சுழிக்குப் பதிலாக சிவமயம் என்று தொடங்கினார் லிபரலப்பன். அவர் எதிர்பார்த்து பயந்தது போலவோ அல்லது பயந்து எதிர்பார்த்தது போலவோ புகாரின் கடைசிவரியை எழுதி முடித்தபோது சிவமயம் தானே புஷ்மயம் என மாறிக்கொண்டது. இதற்குமேல் தன்னால் எதுவும் முடியாது என்று பேனாவை விசிறியடித்துவிட்டு லிபரலப்பன் அழத்தொடங்கிவிட்டார். கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை? என்று வாய்விட்டுக் கதற, தன்னிடமிருந்த லஞ்சப்பணமெல்லாம் கள்ளப்பணமாய் மாறிவிட்ட சோகத்தை எண்ணி காவல் அதிகாரியும் கதற, அதிகாரி அழும்போது தாங்கள் சும்மா இருப்பது மரியாதைக் குறைவான செயல் என்று காவலர்களும் அழத்தொடங்கினர். ஸ்டேசனுக்குள் இதுவரை தாங்கள் மட்டுமே அழுதுவந்த நிலைமை மாறி போலிஸ்காரர்கள் அழத் தொடங்கியிருப்பது நல்லமாற்றத்திற்கான அறிகுறிதான் என நினைத்த கைதிகள் தமக்குள் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்

அழுதுமுடித்து ஆசுவாசம் கண்ட அதிகாரி வயர்லஸ்சில் தலைமையிடத்துடன் தொடர்புகொண்டு விலாவாரியாக விவரித்த  நொடியிலிருந்து அங்கும் களேபரம் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதையும் உஷார்படுத்தி தகவல்களும் ஆணைகளும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எல்லாவிடங்களிலும் பீதி பரவிவிட்டிருந்தது. நைட் ரவுண்ட்ஸ் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேருக்குநேராய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முச்சந்தியில் இருந்த தேசப்பிதா சிலை புஷ் சிலையாக உருமாறுவதைக் கண்டு மூர்ச்சையாகி இன்னும் மயக்கம் தெளியாமல் பிதற்றிக் கொண்டிருப்பதாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. போலிஸ் தலைமையகத்தின் சுவற்றில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் சிரிக்கத் தொடங்கியிருந்தார். ரூபாய் நோட்டில் இருந்த அதேபடம். காவல் நிலைய கக்கூஸ் சுவற்றில் சிரித்த அதே படம். எங்கும் எங்கும் புஷ். காற்றும்கூட விஷ் என்று வீசுவதற்கு பதிலாக புஷ்சென்று வீசுவதாக ஒரு குறுஞ்செய்தி கவித்திலகம் தன் அரைவேக்காட்டை அதற்குள்ளாகவே அவிழ்த்துக்கொட்டியது

விடிவதற்குள் விஷயம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பரவிவிட்டிருந்தது. ஊடகக்காரர்கள் லிபரலப்பனை மொய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்மீது  வீசும் முத்திரவாடையையும் பொருட்படுத்தாமல் அவரை ரவுண்டு கட்டி பேட்டியெடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அவரும் பெருமிதம் பிடிபடாமல் விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் அவரது பேட்டிதான். ஹெச்1பி விசாவை வாயில் கவ்விக்கொண்டு பிறந்து எல்ஐடியில் (லிபரல்பாளையம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) படித்து அதன் நியமத்திற்கேற்ப அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த அவரது மகனிடம் வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்று பேட்டி கண்டு வெளியிட்டது.

2.
எங்கும் புஷ்மயமாகி ஊரும் நாடும் உருண்டு புரண்டு கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு பெண்ணின் மரணஓலம் நிகர்த்த கதறல் யாரைத்தான் நிம்மதியாக உறங்கவிடும்? அலறியடித்து விழித்தெழுந்து ஓடிவந்தனர் அக்கம்பக்கத்தவர். லிபரப்பனின் மகள் கன்ஸ்யூமரேஸ்வரிதான் அப்படி கதறிக் கொண்டிருந்தவள். பிரம்மமுகூர்த்தத்தில் கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவளது கணவன், என்ன நடந்தது என்று விளங்காமல் மலங்க மலங்க முழித்தபடி தன் ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தான். அவளது கதறலும் நின்றபாடில்லை. லிபரப்பனின் ஏடிஎம் புகாரை விசாரிக்கும் அதே காவல்துறையினரும் மருத்துவக்குழுவினரும் வந்துவிட்டிருந்தனர். கலவியின் உச்சத்தில் தன்னுறுப்பை வெறிநாயொன்று கவ்வியதுபோலிருந்தது என்றும் அப்போதிருந்து கடுத்துக் கடுத்து ஏற்படும் வலியில் உயிர்போகிறதென்றும் அழுகையினூடாக தெரிவித்தாள். தீவிர பரிசோதனைக்குப் பிறகு அவளது உறுப்பின் ஓரங்களில் பற்கள் பதிந்திருப்பதை கண்டறிந்தது மருத்துவக்குழு. அவளது கணவன் மீது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் அவனை தனியே அழைத்து விசாரித்தபோது, அண்டைநாட்டிலிருந்து வெளியாகும் இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு அதிமுக்கிய ஆய்வுக்குப் பிறகு ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தனக்கிருந்தாலும் தன் மனைவி அதற்கு இணங்குவதில்லையாதலால் அவ்வாறான முயற்சியில் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று பிள்ளைகள் மீது சத்தியம் செய்து வாக்குமூலம் தந்தான். அவ்வாறானால் பற்குறி பதிந்தது எவ்வாறென்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்கிய மருத்துவர்குழு, அவன் பயன்படுத்தியிருந்த ஆணுறையின் மீது புஷ் உருவம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தது

அன்றிரவு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆணுறைகளை தேடியெடுத்து நுண்ணோக்கி வழியாக கூர்ந்து கவனித்ததில் புஷ்ஷின் கடைவாயில் கோரைப்பற்கள் முளைத்திருந்ததை காணமுடிந்தது. குறிப்பிட்ட அந்தநேரத்தில் கலவிகொண்டிருந்த பெண்கள் அனைவருமே கன்ஸ்யூமரேஸ்வரிக்கு நேர்ந்து போன்றே தம்முறுப்பையும் திடீரென ஒரு வெறிநாய் கவ்வியதைப்போல் வலிகண்டு அலறியதாக கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வலிக்கான காரணம் புஷ் படம்தான் என்ற முடிவுக்கு வந்தது நிபுணர்குழு.

வீட்டின் அலமாரிகளில் பிள்ளைகளின் கண்ணுக்குப்படாமல் ஒளித்துவைத்திருந்த ஆணுறைகளைத் தேடியெடுத்து சோதித்தபோது பயன்படுத்தப்படாத அவற்றிலும் புஷ் உருவம் அச்சாகிவிட்டிருந்தது தெரியவந்தது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆணுறைகளும் அதேகதிக்கு மாறியிருந்தனஅந்த உறையை மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் தன் மனைவியோடு கூடுவது தான்தானா அல்லது உறைமீது அச்சாகியிருக்கும் புஷ்ஷா என்ற கேள்வி எல்லா ஆண்களையும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டது. எல்லா ஆண்களும் ஒரேமாதிரியான உளைச்சலில் வெந்து கந்தலாகிக் கொண்டிருந்தார்கள். வெறும் படம் என்கிற நிலையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக பேருருவெடுத்து புஷ் தன்வீட்டு படுக்கையறையை ஆக்கிரமித்துக் கொண்டதாக நினைத்து நடுங்கத் தொடங்கினர்

பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டாமல் ஆண்களை பக்கம் சேர்ப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். படுக்க வருகிறவன் கூடவே இன்னொருத்தனையும் இழுத்துவந்திருப்பதைப்போல புருசனை பரிகாசமாகவும் அருவறுப்பாகவும் பார்க்கத்தொடங்கினர். இது கூட்டிக்கொடுக்கிற வேலையா அல்லது தன் மனைவியின் அந்தரங்க உறுப்பைக் காட்டிக்கொடுக்கிற வேலையா என்று கிணற்றடியிலும் பணியிடங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி அனல் பறந்துகொண்டிருந்தது. முதல்ல அவனை விரட்டி வெளியேத்திட்டு வாடா ஆம்பிளை என்பது போன்ற பார்வையின் உக்கிரம் தாங்காமல் தலைகவிழ்ந்து திரிவது ஆண்களின் இயல்பாயிற்று.   வீட்டில்தான் அண்டமுடியாமல் போய்விட்டதே என்று வெளியே போனால், ‘அமெரிக்காவுடன் கூட்டு, தொழிலில் பங்குதாரர்னு இதைத்தான் இத்தனைநாளா பீத்திக்கிட்டு திரிஞ்சிங்களாடாஎன்று பாலியல் தொழிலாளிகள் அடித்த நக்கலில் நாண்டுக்கொண்டு சாகலாம் போலிருந்தது.

பணத்தாளில் குளறுபடி ஏற்பட்ட அதேநேரத்திலிருந்துதான் ஆணுறைப் பிரச்னையும் தொடங்கியிருக்கக்கூடும் என்று மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்

பிள்ளையை பெறுவதே அமெரிக்கா அனுப்பத்தான் என்ற கனவில் சஞ்சரிக்கிறவர்களாக கிட்டதட்ட எல்லோருமே இருந்தபடியால் பணத்தாளிலும் கக்கூஸ் சுவற்றிலும் இன்னோரன்ன பொதுஇடங்களிலும் புஷ்ஷின் படம் தென்படத் தொடங்கியதும் பலரும் உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். தங்கள் வீட்டு தொலைபேசி எண் அமெரிக்காவின் எண்ணாக மாறிவிட்டதை, தங்கள் நாடு  அமெரிக்காவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுவிட்டதற்கான சமிக்ஞையாகவே பாவித்து அவர்கள் உள்ளூர மகிழ்ச்சிதான் கொண்டார்களேயன்றி வித்தியாசமாக எதையும் உணராமல்தானிருந்தனர். ஆனால் இந்த ஆணுறை விவகாரம் அப்படியல்லவே?

ஏற்கனவே கற்பு என்கிற காப்புவேலிக்குள் அடைக்கப்பட்ட தன்வீட்டுப் பெண்களின் குறிக்குள் ஒரு அயலான் சென்று வருவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அது என்னதான் புகைப்படமாய் இருந்தாலும்கூட தாங்கள் போற்றிவந்த கற்புநெறிக்கு பங்கம் விளைவிக்கிற மானக்கேடுதான் என்று ஆண்களின் குமைச்சல்  பெரும் அரசியல் சிக்கலாக மாறிவிட்டிருந்தது நாட்டுக்குள். காணும் இடங்கள் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத அந்தரங்கம் வரை புஷ்ஷால் ஊடுருவ முடிந்ததென்றால் அது ஆட்சியாளர்களின் துணையின்றி சாத்தியமாகி இருக்க முடியாது என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆணுறைகளிலிருக்கும் புஷ் படத்தை உடனே நீக்கவேண்டும் அல்லது அவற்றை எரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன் இருபத்திநான்கு மணிநேரமும் இடையறாத முழக்கங்கள் ஒலிக்கத்தொடங்கின. மக்களை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சரகத்திலேயே முடங்கிக் கிடந்த சுகாதார மந்திரி பின்வாசல் வழியாக தப்பியோட முயற்சிக்கும்போது அவரது வாகனத்திற்கு முன்பும் பக்கவாட்டிலும் திரண்டு புரள்கிறது பெருங்கூட்டம். வண்டியை மேற்கொண்டு ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியாதபடி கூட்டம் சூழ்ந்தேறியது. மந்திரியின் காரை மறித்தது மந்தையாய் அலைகிற மாடுகளோ எருமைகளோ அல்ல. மக்கள். குறிப்பாக பெண்கள். அப்பன் தயவில் ராஜ்யசபா எம்பியாகவோ மாமனார் தயவில் பத்திரிகையாசிரியராகவோ ஆவதற்கு வக்கற்றுப்போன வெறும் பெண்கள். மந்திரி மீது அவர்கள் சரமாரியாய் வீசிய அத்தனையும் ஆணுறைகள். அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள். சகித்துக்கொள்ள முடியாத துர்வாடையுடன் தன்மீது வந்து விழுகிற ஆணுறைகளை தடுக்க அவர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. காயாமல் உறைகளுக்குள் தேங்கியிருந்த விந்துத்துளிகள் அவரது முகமெங்கம் தெறித்து வழிந்ததை நல்லவேளையாக அவரது குடும்பத் தொலைக்காட்சி படம் பிடிக்கவில்லை. ஆனால் புஷ் மீது முண்டாஸர் ஷூ வீசியதற்கு இணையாக இந்த ஆணுறை வீச்சும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது. தாக்குதலால் நிலைகுலைந்த அமைச்சர் நட்டநடுரோட்டில் கூட்டத்தின் முன்னே மண்டியிட்டு அழத்தொடங்கினார். ‘இப்படி ஆணுறைகள் மீது புஷ் படம் பொறிக்கப்படுவதற்கு நானோ என் தந்தையோ என் குடும்பத்தாரோ இதில் சம்பந்தப்பட்டிருந்தால் நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து சவுக்கால் வெளுத்து தண்டியுங்கள்...’ என்றார். உனக்கும் உங்கொப்பனுக்கும் இதைவிட்டா வேற பொய்யே தெரியாதா என்று எரிச்சலோடு கத்தியக் கூட்டம் கைவசம் மிச்சமிருந்த ஆணுறைகளை அவர்மீது எறிந்துவிட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட கிளம்பியது.   

தன் ஆண்மைக்கும் மனைவியின் கற்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக புஷ் மாறிவிட்டதாக  அன்னாடங்காய்ச்சி தொடங்கி அமைச்சர் பெருமக்கள்வரை எல்லோருமே அஞ்சத் தொடங்கியதால் விஷயம் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கும் வந்துவிட்டிருந்தது. இதற்கென கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தொடர் உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தது.

3.
லிபரல் பாளையத்தின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பணம் வாங்காமலே கேள்வி கேட்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகியிருந்தனர். பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட நாளுக்குப் பிறகு  அவையின் மொத்த உறுப்பினர்களும் பங்கேற்கிற கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊடக ஆய்வாளர்கள் வியப்பு தெரிவித்தனர். பார்வையாளர் மாடங்களில் இருந்து யாரேனும் ஆணுறைகளை வீசிவிடுவார்களோ என்ற பயம் எல்லோரையுமே பீடித்திருந்தது. அவை உறுப்பினராயிருந்த பெண்கள்இது ஆம்பிளைங்க சமாச்சாரம்என்பதுபோல அமைதிகாத்தனர். அரங்குநிறைந்த காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும் களமாக பாராளுமன்றம் மாறிக்கொண்டிருந்தது.

சபாநாயகர் பழக்கதோஷத்தில்ப்ளீஸ் டேக் யுவர் சீட்என்று தொண்டைத்தண்ணீர் வற்ற கத்திக்கொண்டிருந்த போதும் புஷ் எதிர்ப்பாளர்கள் சிலரைத் தவிர பிரதமர் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் நின்றுகொண்டே இருந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு பின்புறமிருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புஷ்ஷின் புகைப்படத்திற்கு முன்பாக உட்காருவது மரியாதைக்குறைவான செயல் என்பதாலேயே தாங்கள் நின்று கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி கொறடா தெரிவித்தக் கருத்தை எதிர்க்கட்சிக் கொறடாவும் ஆமோதித்தார். கடைசியில், புஷ்ஷின் புகைப்படத்துக்கு முன்பு இருக்கையில் உட்கார மறுக்குமளவுக்கு விசுவாசம் கொண்டவர்கள், வேண்டுமானால் தரையில் முட்டி போட்டுக்கொண்டு பங்கேற்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வீட்டுப்பாடம் முடிக்காத பள்ளிக்கூட பிள்ளைகளைப்போல முட்டி போட்டிக்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கெடுத்த அக்கூட்டத்தொடரின் லட்சணங்கள் உலகில் முன்னெப்போதும் நடந்திராதவை

லிபரல்பாளையம் நாடாளுமன்ற அலுவல்விதி பன்னிரண்டின் கீழ் ஏழின்படி விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர்தான் துவக்கிவைத்துப் பேசவேண்டியிருந்தது. ‘எங்கள் ஆட்சியில் இந்தியா டாலடிக்கிறதுஎன்று அவர் சொன்னதைஎங்கள் ஆட்சியில் இந்தியா டல்லடிக்கிறதுஎன்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததாகப் புரிந்துகொண்டு கடந்தத்தேர்தலில் மக்கள் அவரது கட்சியை தோற்கடித்துவிட்டதால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துவிட்ட சோகம் அவரை நிரந்தரமாய் பீடித்திருந்தது. எனவே இப்போதெல்லாம் அவருக்குப்  பேசுவதில் பெரிய அளவுக்கு நாட்டம் இருப்பதில்லை. தூக்கத்திலிருந்து விழித்தவர்போல அவ்வப்போதுகொல்லை தாண்டிய குதர்க்கவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும்என்று அறிக்கைவிடுவதோடு தன் அரசியல்பணி முடிந்துவிட்டதாக அமைதி பூண்டிருந்தவர், விரைவில் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு கொஞ்சம் சுறுசுறுப்படைந்துவிட்டார். எனவே அமெரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்னையில் தங்கள் கட்சியின் விசுவாசத்தை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கக்கூடிய வல்லமை தனக்கு மட்டுமே உண்டென வாதிட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு

இந்த நாட்டின் தந்தையென்றும் குழந்தைகளால் தாத்தா என்றும் ஏற்கனவே அறியப்பட்டிருந்த நபர்மீது உண்மையில் எனக்கோ என் இயக்கத்திற்கோ எந்த மரியாதையும் எப்போதும் இருந்தது கிடையாது. இதேகாரணத்தால்தான் எங்களது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிப்பதில் நாங்கள் எப்போதும் பெருமைகொண்டிருக்கிறோம். ஆனாலும் புகைப்படமாகவும் சிலையாகவும் நாட்டின் பலபாகங்களிலும் நீடித்திருந்து அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்த உறுத்தலை எங்களது அன்புக்குரிய புஷ் வந்து  இப்போது மாற்றிவிட்டார் என்ற செய்தி ஆயிரம் மசூதிகளை இடித்த மகிழ்ச்சியைத் தருகிறது. நேற்றுவரை இருந்த ஒன்றை இன்று அப்பட்டமாக வேறொன்றாக மாற்றிவிடும் மோசடியை எங்களைப் போலவே புஷ்சும் திறம்பட செய்து முடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டுகிறோம்

நாங்கள் இங்கேயிருக்கிறவர்களுக்குத்தான் எதிர்க்கட்சியேயொழிய புஷ்சையோ அல்லது இப்போது ஜெயித்து வந்திருக்கக்கூடிய ஒபாமாவையோ- அவ்வளவு ஏன்- பிற்காலத்தில் அமெரிக்காவை ஆளக்கூடிய யாரோவொரு மிஸ்டர் எக்ஸ்சையோ எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இன்னும் சொல்லப்போனால், ‘அகண்ட’ , ‘ஒற்றைஆகிய எங்களின் கனவு அவர்களின் கனவுடன் மிக இயல்பாகவே ஒத்துப்போவதால் நாங்களும் அமெரிக்க ஆட்சியாளர்களும்தான் இயல்பான கூட்டாளிகளாக இருக்கமுடியும். ஒரு பழிபாவமும் அறியாத அப்பாவிகளை கொன்றொழிக்கும் மனோதிடத்தை நாங்கள் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் என்பதை    இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எல்லாக்கட்சிகளும் இந்த ஆணுறை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு திடீரென சுதேசிவெறியை கிளப்பிவிட்டு நாடகமாடுவதை எங்கள் கட்சி ஏற்கவில்லை. வழக்கமாய் அந்த நாடகத்தை நடத்துகிற நாங்களே சும்மாயிருக்கும்போது மற்ற கட்சிகளெல்லாம் இப்படி நடந்துகொள்வது ஓவர் ஆக்டாகத் தெரிகிறது. எங்களைப்போல அவர்களுக்கு இயல்பாக நடிக்கத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு ஆணுறையின் மீது படம் அச்சடிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே பல நிறுவனங்கள் ரிப், டாட்டேட், சென்டேட் என்றெல்லாம் பல பெயர்களில் அறிமுகப்படுத்தியிருக்கும்போது நமது பிரியத்திற்குரிய தலைவர் புஷ்சின் படம் அச்சடிக்கப்பட்ட ஆணுறைகளை பிரிண்டட் காண்டம்ஸ் என்று புழக்கத்திற்கு விடலாமே? நமது அண்டைநாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், புஷ்சை சந்திக்க தன்நாட்டு மக்கள் பேராவலுடன் காத்திருப்பதாக கூறியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் புஷ்சுக்காக இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் லிபரல்பாளையத்தின்மீது பெருமதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிற புஷ் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் படுக்கையறையிலும் வெட்கத்தை விட்டுச் சொல்வதாயிருந்தால் நம்நாட்டுப் பெண்களின் யோனிக்குள்ளும் விஜயம் செய்யும் தாராள மனம் கொண்டவராயிருப்பது கொண்டாட்டத்திற்குரிய விசயமில்லையா?

எதிர்க்கட்சித் தலைவரின் தொடக்கவுரையால் எரிச்சலடைந்த உறுப்பினர்கள் பலரும்அமெரிக்கான்னு வந்துட்டா ஆளுங்கட்சி எது எதிர்க்கட்சி எதுன்னு வித்தியாசமில்லாம ஆயிடுதே என்று குழம்பிப்போயினர். நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த அசம்பாவிதங்களின் பின்னே இருக்கும் மர்மங்கள் குறித்து அடுத்தநாள் அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு அவை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தநாள் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பில் நாடும் உலகமும் பார்த்துக்கொண்டிருக்க, அறிக்கையுடன் வந்த மேற்படி 3 ( ,,,) அமைச்சர்கள் உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தனர்.  

அமைச்சர்கள் தந்த விளக்கங்கள் யாருக்கும் திருப்தியளிக்கவில்லை என்ற நிலையில் அவையின் ஆயுட்காலமே முடிவடைந்துவிட்டது. அன்று நள்ளிரவில் அவை தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தருவாயில், இப்பிரச்னை முழுக்க முழுக்க புஷ் சம்பந்தப்பட்டதால் அமெரிக்காதான் விளக்கமளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஒபாமாவுக்கு அனுப்பிவைத்தது. ஒபாமாவின் பதிலுக்காக உலகமும் லிபரலப்பனும் காத்துக்கிடந்தனர்.

புஷ்சுக்கும் தனக்கும் தோலைத்தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை என்று நிரூபிப்பதா அல்லது இருவருக்குமிடையில் தோல் மட்டுமே வித்தியாசமில்லை என்று நிரூபிப்பதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்த ஒபாமா லிபரல்பாளையத்தின் தீர்மானம் புதிய தலைவலியாக வந்து சேர்ந்திருந்தது. வெள்ளைமாளிகையின் புல்வெளியில் சர்வதேச செய்தியாளர்கள் குவிந்துநிறைந்தனர். சற்றே இறுகிய முகத்துடன் காணப்பட்ட ஒபாமா அதிகம் பேசவில்லை

வெள்ளைமாளிகை சார்பாக செய்தியாளர்களுக்கு பத்திரிகைச் செய்திக் குறிப்புடன், ஒப்பந்தம் ஒன்றின் நகலும் பூதக்கண்ணாடியொன்றும் தரப்பட்டது. முந்தைய அதிபர் புஷ்சும், லிபரல்பாளையம் சார்பாக .சியும் .சியும் கையெழுத்திட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தின் நகல் அதுஒப்பந்தத்தின் முதற்பக்கத்து கடைசிவரியில் பொடியாக ஒரு நட்சத்திரத்தைப் போட்டுடெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளைஎன்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் பக்கத்திலிருந்து தொடங்கி அடுத்துவந்த 900 பக்கங்களிலும் பொடி எழுத்தில் டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் நிரம்பிக்கிடந்தது. அவற்றைப் படித்துப்பார்க்கத்தான் பூதக்கண்ணாடி கொடுத்திருந்தார்கள்

லிபரல்பாளையத்தில் நடந்துவரும் மாற்றங்கள் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று அந்நாட்டின் அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. குறிப்பிட்ட நாளின் நள்ளிரவு 12 மணியிலிருந்து லிபரல்பாளையத்தின் எல்லாமே அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டு அதன் நேரடி கண்காணிப்பில் இயங்குவதற்கு சம்மதம் என்று அந்நாட்டு அமைச்சரவை சார்பாக இந்த ஒப்பந்தத்தில் .சியும் .சியும் கையெழுத்துப் போட்டிருப்பதை நீங்களே பாருங்கள். அந்தநாள் வந்ததும் ஒப்பந்தப்படி தானாகவே எல்லாம் மாறத்தொடங்கி விட்டன. இனி புஷ்சே நினைத்தாலும் அதை மாற்றவோ தடுக்கவோ முடியாது. நிபந்தனைகளைப் படிக்காமல் காட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்கான்னு குற்றம்சாட்டும் பொறுப்பற்ற செயலை லிபரல்பாளைய அமைச்சர்கள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்என்று ஒபாமா சொல்லி முடித்தபோது டிவி பார்த்துக்கொண்டிருந்த மேற்படி அமைச்சர்கள்யெஸ் பாஸ்என்று எழுந்துநின்று சல்யூட் அடித்தனர்

இன்னும் என்னென்ன அழிமானங்களுக்கு கையெழுத்துப் போட்டிருக்காங்களோ தெரியல. இப்பவாச்சும் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முழுசா படிச்சுப் பார்ப்போம் என்று  லிபரல்பாளையத்தின் தேர்தல் களத்தில் சூடாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் பங்கெடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் நமது லிபரலப்பனும் அவரது குடும்பத்தாரும்.

---------------------------------------------------------------
*உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது...  என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையம் என்ற நாட்டின் கதை இது.